தேடல்
"இந்த வீட்டுல எத வச்சாலும் வச்ச இடத்துல இருக்க மாட்டேங்குது" என்ற அம்மாவோட சுப்ரபாதத்த கேக்காம நான் எந்திரிச்சதே கிடையாது . சரி இந்தியாவில தான் இப்படின்னா சிங்கப்பூர் வந்துமா இந்த தொல்லை ?. "ஞாயிற்றுக்கிழமை காலையில படுக்கையில் இருந்து போர்வையை விலக்கும் போது இப்படித்தான் நினைச்சான் சேந்தன்.
சேந்தன் துவாசிலுள்ள கப்பல் கட்டுமான நிறுவனத்தில் பொறியாளரா இருக்கான். மாதம் முழுதும் வேலை இருக்கும். விடுமுறை நாட்களுக்குக் கூட விடுமுறை எடுப்பான். ஞாயிற்றுக் கிழமை வேலை என்றால் அவனுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. இரட்டிப்பு சம்பளமல்லவா ? உடலும் மனதும் ஒத்துழைக்காவிட்டாலும் தேங்கியுள்ள கடன் அவனை அதிகாலையே எழுப்பிவிட்டு வலுக்கட்டாயமாக அலுவலகத்துக்குக் கூட்டிச் செல்லும். ஆனால் அன்று என்னவோ அசந்து தூங்கிவிட்டான். ஆனால் கடன் செய்யும் வேலையை அம்மா செய்துவிட்டாள்.. காலையிலேயே எதையோ தேடி கத்தி எழுப்பி விட்டாள். !
"இந்த அத்தைக்கு வேற வேலையே இல்ல .. ச்ச..." இது சேந்தனின் மனைவியின் மனக்குரல். பாவம் அவளும் தான் என்ன செய்வாள் ! குழந்தை பிறந்து மூன்று மாதம் கூட ஆகவில்லை. இரவு நேரங்களில் அடிக்கடி பசியெடுத்து அழும். அவள் தான் எந்திரிச்சு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அவள் வயிறு உயிரைச் சுமந்ததிலிருந்து அவள் கண்கள் தூக்கத்தைச் சுமக்கவில்லை. அப்பத்தான் கொஞ்சம் அசந்து தூங்க ஆரம்பித்தாள். அதுக்குள்ள அத்தையின் குரல் அந்த தூக்கத்த கலைச்சிருச்சு !
மருமகள் பிரசவத்திற்கு உதவிக்கு வந்தவள் தான் உண்ணாமலை பாட்டி.சேந்தனின் அம்மா,. பாட்டி என்ற சொல்லுவதற்கு நாங்கள் தான் காரணம் என்று நரைச்ச முடிகள் நடனமாடும். கண்களின் அடியில் கருப்பு நிற வளையங்கள் நரைச்ச முடி சொல்வதை வழிமொழியும். ஆனாலும் முகமும் தோலும் உண்ணாமலை அம்மாவின் வயதைக் காட்டாது. காரணம் வேலை செய்தே வியர்வை வழிந்த தோல்கள் ..மஞ்சள் பூசி மகிழ்ந்த முகம்.
எல்லாம் சரி. வயசாயிடுச்சுன்னா பேசிக்கிட்டேவா இருக்கணும் ? உண்ணாமலை அம்மா வாயை திறந்தாங்கன்னா இடி இடிக்கிற சத்தம் தோத்து போகும். மரினா பே ல வருடப்பிறப்பன்னைக்கு இரவு 12 மணிக்கு வான வேடிக்கை நடக்கும்.. அந்த 10 நிமிடம் முடிஞ்சு கொஞ்ச அமைதியா இருக்கும்ல .. அந்த மாதிரி இருக்கும் உண்ணாமலை அம்மா பேசி முடிச்ச உடனே.
அன்னைக்கும் அப்படித்தான் அம்மாவோட வெடிச்சத்தம் கேக்க ஆரம்பிச்சிடுச்சு !
" கருமம் .. இங்கே நம்ம என்ன சொன்னாலும் கேக்குறத்துக்கு யாரும்மில்ல .. வச்ச பொருளாவது ஒரு இடத்துல இருக்கக் கூடாதா ? " உண்ணாமலை.
சேந்தன் ஏற்கனவே தூக்கம் கலைந்த ஆத்திரத்தில் " என்னம்மா பேசுற .. இங்கே யாரு நீ சொல்றத கேக்கல ? எதுவானாலும் நேர பேசும்மா .. இப்படி ஜாடை பேசாதா "
" என்னடா சாடை பேசுறேன் .. சாடை ..அறிவு கெட்டவனே .. நீ என்ன பக்கத்து வீட்டு கண்ணத்தாளா? உங்கிட்ட நான் சாடை பேசுறதுக்கு ? "
" மா .. என்னமா நான் அறிவு கெட்டுட்டேன்.. .வார்த்தையே கொஞ்சம் அளந்து பேசு "
" ஆமாடா அறிவு கெட்டவனுக்கு பிறந்தா அறிவு கெட்டுத்தான் இருக்கும்.. ஒரு அரை அடி ஸ்கேல் வாங்கிக் கொடு .. பெத்த பிள்ளைக்கிட்ட பேசும்போது அளந்து பேச "
" ஏன்மா இப்ப அப்பாவ சத்தம் போடுற ? "
"ஆமாம் அந்த ஆளுதான்... அந்த ஆளு நல்லவரா இருந்தா நீ இப்படியெல்லாம் பேசுவீயா ? இப்படி நடப்பியா ? "
" நான் என்னமா தப்பு பண்ணேன் ? "
" என்னடா தப்பு பண்ணல ? என்ன தப்பு பண்ணல.. எதுக்கெடுத்தாலும் இப்படி செலவு பண்ற .40000 க்கு போன் உனக்குத் தேவையா .. கடன் மேல கடன் வாங்கிட்டு இப்ப சனி ஞாயிறு தெரியாம வேலை பாக்குற .. ? இப்படி உடம்ப கெடுத்துட்டு நீ கஷ்டப்படத்தான் நாங்க உன்ன பொன்னா பூவா வளத்தமா ? "
" அம்மா இப்ப எதுக்கு தேவையில்லாமா இதெல்லாம் பேசுற ? நான் என்ன மொத்தமாவா பணம் கொடுக்கப் போறேன். மாசம் மாசம் கட்டுறது தானேம்மா ? "
" அட முட்டா பய மவனே.. மாச மாசம் கட்டுனாலும் பணம் நீதானே கட்டப் போற ... "
போர்வைக்குள் முழித்து இதையெல்லாம் கேட்டிக் கொண்டிருந்த அவனின் மனைவிக்கும் அத்தையின் பேச்சு சுத்தாம புடிக்கவில்லை.. இருந்தாலும் தாயும் மகனும் சண்டை போடும் போது அமைதியா இருந்து ரசிக்கும் நவீனகால மனைவிகளின் விதியை அவள் மீறவில்லை. அம்மாவின் பேச்சு உண்மையிலே தேவையில்லாத திசையை நோக்கிச் செல்லுவதை சேந்தன் விரும்பவில்லை... படுக்கையிலிருந்து எழுந்து விட்டான்.
" அம்மா.. நீ தேவையில்லாம பேசுற.. சும்மாத் தொனத் தொனன்னு பேசாமா இரு.. என் புள்ளய போட்டோ எடுக்கிறதுக்காக அந்த போன வாங்கினேன்.. நான் உழைக்கிறேன் ... சம்பாதிக்கிறேன்.. செலவு செய்றேன் .. இதுல உனக்கென்ன வந்துச்சு ? வந்தமா .. ஒத்தாசையா இருந்தமா ... ஊருக்குப் போனாமானு இரு.. சும்மா காலங்காத்தால மனுசன நிம்மதியாக் கூட தூங்க விடமா .. எதை தேடுனீயோ அதை சத்தம் போடாம தேடிக் கண்டுபிடி .." பொறிந்து தள்ளிவிட்டு போர்வைக்குள் சென்றான் சேந்தன்.
பிள்ளையின் அதிர்ச்சி மருத்துவத்தில் சொற்கள் ஊசியாய் குத்தி உண்ணாமலையின் கண்களில் கண்ணீர் சாரப் பாம்பாய் வழிந்து சென்றது.
" மன்னிச்சிருப்பா...நான் தப்பா பேசிட்டேன்...காலையில எந்திரிச்சு குளிச்சு முழுகிட்டு சமையல் பண்ணிட்டு உன் அறைக்குள்ள வந்தேன்.. என் பேரன் தலைமேல கைய வச்சிட்டு அட்டணக்கால் போட்டுட்டு படுத்திருந்தான்.. அப்படியே உன்ன கைக் குழந்தையா பாத்த மாதிரி இருந்துச்சி .. நீயும் இப்படித்தான் படுத்திருப்ப .. உங்க அப்பா அதை போட்டோ எடுத்து பத்திரமா வச்சிருந்து எங்கிட்ட வரும்போது கொடுத்து விட்டாரு.. உம் புள்ளய பாத்தோன என் புள்ள ஞாபகம் வந்துருச்சு... அதைத் தான் தேடிகிட்டு இருக்கேன்" சொல்லிவிட்டு மறுபடியும் அதை தேடச் சென்றாள் உண்ணாமலை கண்களைத் துடைத்தபடி.
போர்வைக்குள்ள இருவர் அழும் சத்தம் கேட்டது. பக்கத்திலிருந்த குழந்தை எதற்கோ சிரித்தது.
பெற்றவர்களின் தேடல் எப்பொழுதும் பிள்ளையைச் சுற்றியே இருக்கின்றது.
( ஆகஸ்ட் 2013 தங்கமீன் வாசகர் வட்டத்தில் பரிசு பெற்றது. தங்கமீன் இணைய இதழில் இடம் பெற்றது )
http://www.thangameen.com/contentdetails.aspx?tid=705
Comments