ஒரே நிறம்


வந்திருப்பது ராமு என்பது அம்மாவுக்குப் புரிய..முகத்தில் ஒரு சிரிப்பு,பிறகு அழுகை என்று மாறி மாறி வெளிப்பட்டது. வேறென்ன செய்ய முடியும் வாயில்லா ஜீவனான அந்த லட்சுமிப் பசுவினால்?.கொஞ்ச நேரத்துக்கு முன்புவரை இருந்த படபடப்பு அந்தக் கடவுளுக்கும்,நம்ம லட்சுமிப்பசுவுக்கும் மட்டும்தான் தெரியும்.

லிம்-சூ-காங்கிலுள்ள விக்னேஷ் பால்பண்ணையில் நன்றாக வளர்க்கப்பட்ட லட்சுமிப்பசு ஒன்றரை வருடம் முன்புதான் ராமுவை ஈன்றது. லட்சுமியைப் போலவே ராமுவும் நன்றாகவே வளர்ந்து வந்தது. ராமுவோட அப்பன் கருப்பா இருந்தாலும், ராமு கன்றுக்குட்டி ஆத்தாவைப் போல நல்ல வெள்ளை. ஆனால் அப்பன் கருப்பனை மாதிரி நல்ல வாட்ட சாட்டமான உடம்பு. இன்னும் கொஞ்ச நாளில் அப்பனுக்கு மாதிரியே கொம்பும் வளர்ந்திடும்.

எப்பொழுதும் ராமு, அவன் அப்பன் கருப்பனோட மேயப் போயிட்டு சாயங்காலத்துக்குள்ள லட்சுமி மடியத் தேடி வந்துடும். ஆனால் இன்னைக்கு இருட்ட ஆரம்பிச்சும் இன்னும் வரவில்லை. கருப்பன் மட்டும் தனியா வந்துகிட்டு இருந்தான்.

"என்ன இந்தாளு மட்டும் தனியா வரான்? பிள்ளையக் காணோமே, பின்னாடி வருமோ?" எட்டிப் பார்த்தது லட்சுமிப் பசு. ராமு வரவில்லை.

"ராமுவ வச்சிக்கிட்டே, இந்தாளு நம்மள கண்டபடி உரசுவான்..இப்ப தனியா வேற வரான்.. என்ன பண்ணப் போறானோ? " லட்சுமிப்பசு.
எல்லாப் பெண்களுக்கும் இருக்கிற இயல்பான வேதனை..மாடுகளில் மட்டும் மாறுமா என்ன?

நினைத்ததைப் போலவே கருப்பனும் அருகில் வந்து லட்சுமியை எதிர்பார்த்தைவிட கொஞ்சம் அதிகமாகவே உரசி தன் வாலிப வயசைக் காட்டிச் சென்றது.

மனசுக்குள்ள  வெந்துகிட்டே லட்சுமி மறுபடியும் வாசலைப் பார்த்தது.ராமுவைக் காணோம். நேரம் ஆக ஆக மனசு படக் படக் என்றது. "ஒருவேளை காலையில நடந்த பிரச்சினையில புள்ள கோவிச்சுக்கிடுச்சோ,  ராமு பக்கத்து பண்ணை லலிதா கன்றுக்குட்டி மேல தெரியாம உரச, அத இந்தக் கருப்பன் பார்க்க, கருப்பன் முறைச்ச முறைப்புல, பிள்ளைக்கு கண்ணுல தண்ணிய வந்துருச்சு.அதை மனசுல வச்சுக்கிட்டு,நம்ம புள்ள எங்காயாவது போயிருக்குமோ?" பெத்த மனசு பித்துதான்.

இன்னும் கொஞ்சம் தள்ளி நடந்து சென்று பார்த்தது. தூரத்தில் நடந்த சம்பவம் லட்சுமிக்கு வெந்த புண்ணில் வேல மட்டுமில்ல அணுகுண்டையும் வீசுவது போல இருந்தது. நிறைய மாடுகளை ஏற்றிக் கொண்டு ஒருவண்டி பண்ணையிலிருந்து இறைச்சிக் கடைக்குச் சென்றது.

"ராமுவும் அதுல இருக்குமோ..? இளங்கன்று என்பதால் உடனே வண்டியில ஏத்தியிருப்பாங்களோ ? அப்ப எம்புள்ளய இனிமே பார்க்கவே முடியாதா ? , என் வாழ்க்கை அவ்வளவுதானோ ? " துடிதுடித்த லட்சுமிப்பசு, ஏதோ உணர்ந்து மீண்டும் தலைதூக்கிப் பார்த்தது. ராமுவின் வாசனை காற்றில் வந்தது. வாசனை வந்தப் பக்கம் ராமுவும் மெதுவாக நடந்து வந்தது.

தூரத்தில் வந்திருப்பது ராமு என்பது அம்மாவுக்குப் புரிய..முகத்தில் ஒரு சிரிப்பு, பிறகு அழுகை என்று மாறி மாறி வெளிப்பட்டது.

ஆறறிவு உயிரினத்தில் மட்டுமல்ல எல்லா உயிரினத்திலும் பெற்றவள் மனசு ஒரே நிறமாகத்தான் இருக்கும்.




Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு