அம்மா
அரசு பள்ளி அல்லது தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு
குருதி உறவு அன்றி அம்மா என்று அழைப்பதற்கு தமிழ் ஆசிரியர்கள் இருப்பார்கள்.
எங்களுக்கு தமிழ் அம்மாக்களைத் தாண்டி இன்னொரு அம்மாவும் இருந்தார். எங்கள் தலைமை
ஆசிரியை ருக்மணி அம்மா.
பொதுவாக தலைமையாசிரியருக்கு மாணவர்கள் பயப்படுவார்கள்.
ஆசிரியர்கள் பயப்படுவார்கள். பேருந்து நிறுத்தத்தில் இருந்து பள்ளிக்கு வரும் 500 மீட்டர் பாதையில் உள்ள கடைக்காரர்கள் கூட எங்கள்
அம்மாவிற்கு கொஞ்சம் பயப்படுவார்கள். பயமும் இருக்கும் மரியாதையும் இருக்கும்.
கண்டிப்பான முகம் , அளவான சிரிப்பு, தீர்க்கமான முடிவை நோக்கிய தெளிவான பேச்சு , தேவைப்படும் நேரத்தில் சின்ன பாராட்டு , உடலெங்கும் உள்ள கம்பீரம் என அம்மாவை விளக்குவதற்கு ஏராளம்
உள்ளன.
எல்லாம் தாண்டி அம்மாவின் செயல் ஊக்கமும் அதீத அக்கறையும்
வியக்க வைப்பன.
பேரூராட்சியாக இருந்த நரசிம்மநாயக்கன்பாளையத்தில் 90களில் எங்கள் அம்மாவை தெரியாதவர் யாரும் இருக்க இயலாது .
அம்மாவும் பெயர் சொல்லி அழைக்கும் அளவிற்கு எல்லோரிடமும் உரிமை கொண்டவர். பெற்றோர்
ஆசிரியர் கழகம் அறிவொளி இயக்கம் ஆகியவற்றை துடிப்போடு வைத்துக் கொண்டதோடு
மட்டுமன்றி தனிப்பட்ட முறையில் எல்லாப் பெற்றோரிடமும் தொடர்பு கொண்டவர்.
பள்ளிக்குத் தேவையான உதவிகளைச் சுற்றியுள்ள தொழிலதிபர்களிடம் கூச்சமின்றி எந்தப்
பணிவும் இன்றி பெற்றவர். உதவி செய்தவர்களுக்கு மேடையில் சொல்லும் நன்றியில் அந்த
மிடுக்கு தெரியும். ஓய்வு பெற்று 20 ஆண்டுகளுக்குப்
பிறகும் எங்கள் பள்ளிக்கு ஸ்மார்ட் கிளாஸ் திட்டத்திற்காக இரண்டு லட்சத்துக்கும்
அதிகமான நிதியை பெற்று தந்தவர். தனிப்பட்ட முறையில் பலருடைய மேல்படிப்பு அவரால்
சாத்தியமாயிற்று.
பத்தாம் வகுப்பு முடிப்பதே கல்வியின் உச்சம் என்று நினைத்த
சூழல் நரசிநாயக்கன்பாளையத்தை சேர்ந்தது. அருகிலுள்ள
பஞ்சாலைகள், பிராந்தி கம்பெனி, வைர தொழிற்சாலை வேலைக்கு பள்ளிப்படிப்பு போதுமானதாக
இருந்தது அத்தனை ஆண்டு காலம் இருந்த எங்கள் பள்ளியில் 1998 நிலவரப்படி ஒரே ஒரு மாணவர்
மட்டும் முதுகலை பட்டம் பெற்று இருந்தார். கொஞ்சம் நன்றாக படித்ததால் மருத்துவம்
மற்றும் பொறியியல் படிப்பில் நான் சேர்வேன் என்று மிகுந்த நம்பிக்கையோடு
இருந்தார். பத்தாம் வகுப்பு தொடக்கத்திலிருந்து பார்க்கும்போதெல்லாம் பேசுவார்.
மிரட்டுவார். என் அப்பா அம்மா கூட என் மேற்படிப்பு குறித்து அவ்வளவாக பேசியதில்லை.
அவர் எதிர்பார்த்ததைப் போல நல்ல மதிப்பெண்கள் கிடைத்தும்
மேல்நிலைப்பள்ளியில் சேராது பாலிடெக்னிக்கில் சேர வைத்தது என் குடும்பச் சூழல். ஒரு சான்றிதழ் கையெழுத்து வாங்க சென்றவனிடம்
இதைக் கேட்டுவிட்டு மிகக் கடுமையாகத் திட்டினார். " ஒரு வார்த்தை என்கிட்ட
சொல்லி இருக்கலாம் இல்ல அப்பா அம்மாகிட்ட பேசி இருப்பேன் எல்லாம் பண்ணிட்டு
வந்துட்டு இப்ப எதுக்கு வந்த ன்னு திட்டிட்டு வெளியே போ ண்ணு சொல்லிட்டாங்க. அது வரை படித்த
பள்ளியில் முதன்முறையாக வெளிய போகச் சொன்ன சம்பவம். அதுவும் பள்ளி படிப்பு முடித்த
பின்பு. ரொம்ப அழுதுட்டேன் . அதுக்கு கூட அவங்க இரங்கல. என் முகத்துல முழிக்காத வெளிய போயிடுனு சொன்னாங்க. கடைசி வரை
கையெழுத்தும் போடல
முன்னோர்கள் செய்த புண்ணியம் அப்பா அம்மா செய்த தியாகங்கள் கடவுளின் துணை எல்லாம் சேர்ந்து
பாலிடெக்னிக் முடிச்சிட்டு இன்ஜினியரிங் கனவு நனவாச்சு. மேற்கூறிய காரணங்களை
சொன்னாலும் அம்மா முன்னாடி இன்ஜினியரா போய் நிக்கணும்னு ஒரு சின்ன வைராக்கியம்.
அதுக்கு மேல இவன் மறுபடியும் நம்ம கிட்ட இன்ஜினீரா வந்து நிற்பாங்குற அம்மாவோட
நம்பிக்கை.
இன்னைக்கு இருக்கிற என்னோட இந்த வாழ்க்கை பல பேர் போட்ட
பிச்சை. அதுல அம்மா எனக்குப் போட்டது கல்வியோட சேர்த்து வைராக்கிய பிச்சை.
அம்மாவோட கெத்துக்கு இன்னொன்னு சொல்லலாம. பல வருசங்க
கழித்து ஆகஸ்ட் 15 க்கு அம்மா வர
சொல்லி அவ்வளவு கெஞ்சுனோம். ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி
மறுத்திடுவாங்க. மூணு
மாசத்துக்கு முன்னாடி பேசும் போது சொன்னாங்க யாராவது ஒருத்தர் துணையோடு தான் நடக்க
முடியுது பழைய நடை போச்சு யாராவது ஒருத்தர கைய புடிச்சிட்டு நான் ஆண்ட அந்த
ஸ்கூலுக்கு என்னால வர முடியாது மதி அதுதான் நிறைய காரணம் சொல்லி அதை தவிர்த்தேன்
ன்னு சொன்னாங்க. ஒரு நிமிஷம் 20 வருஷத்துக்கு
முன்னாடி வந்த அந்த நடையோட அம்மா என் முன்னாடி நடந்து வந்தாங்க .
தனிப்பட்ட முறையில் நிறைய இழப்புகள், தனிமை தந்த முதுமை என எல்லாம் கடந்து அம்மா இன்றுடன் தன்
வாழ்வை நிறைவாக்கிக் கொண்டார். என்னை போன்ற
எத்தனையோ பேரின் வாழ்வில் ஞான விளக்கேற்றி வைத்த சு.ருக்மணி என்ற அந்தப் பச்சை
கையெழுத்தும் அதன் கீழ் உள்ள கோடும் நாங்கள் இறக்கும் வரை பேரொளியாக எங்கள் மனதில்
தொடரும்.
ஒரு மகனாக இருந்து அவரின் இறுதி சடங்கை நடத்தும் உரிமையும்
கடமையும் கொண்ட என்னை தள்ளி நிற்க வைத்து தீர்க்கவே
முடியாத வழமையான குற்ற உணர்வை கொடுத்திருக்கு இந்த வெளிநாட்டு வாழ்க்கை.
எப்பவும் என் கூடவே இருப்பீங்க அம்மா
Comments