வேதப்பரிபுரையே..

வெள்ளி காலை நண்பர் செந்தில்குமார் ஒரு பாடலை அனுப்பியிருந்தார். பாடலை உள்வாங்குவதற்குள் “பார்த்த விழி பார்த்தபடி “ பாடலும் வந்தது .


அபிராமி அந்தாதி பாடல் :
இடங்கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி இளகி முத்து
வடங்கொண்ட கொங்கை மலை கொண்டு இறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி நல் அரவின்
படம் கொண்ட அல்குல் பனி மொழி வேதப் பரிபுரையே

மற்றவற்றின் பொருளை ஒருவாறு யூகித்தாலும், இந்த வேதப் பரிபுரையின் அர்த்தம் பிடிபடவில்லை. உரைகளை நாடியதில் பெரும்பாலும் வேதங்களைக் காலில் சிலம்பாய் அணிந்தவளே என்றே இருந்தன. ஆனால் ஒரு உரை மட்டும் வித்தியாசமாக நெருக்கமாக இருந்தது. வேதங்களின் முதலும் சிறப்புமாய் இருப்பவளே என்று வேதப் பரிபுரைக்கு அர்த்தம் சொல்லி அதற்கான காரணமும் சொன்னது.

இறைவியின் குளிர்ந்த பேச்சை, தகுந்த இடத்தில் இருந்து கொண்டு பெருமிதத்தால் விம்மி, ஒன்றிற்கொன்று இணையென்னும்படியாக அமைந்து, இறுகியும் அதே நேரத்தில் மென்மையுடன் இளகியும், முத்து மாலையை அணிந்தும் இருக்கும் மலைகளைப் போன்ற தனங்களை, நல்ல பாம்பு படமெடுத்ததைப் போல் இருக்கும் அல்குலைப் பற்றியெல்லாம் சொல்லிவிட்டு அவளை வெறும் வெற்றழகியாக மட்டும் நிறுத்தாமல் வேதங்களின் முதலாகவும் சிறப்பாகவும் இருப்பவள் என்று தலைவியை அறிவுத்தளத்திலும் நிறுத்திய அந்த
தமிழ்க்கவிஞனை நினைக்கும் போது உண்மையிலேயே ஒரு சின்ன கிளர்ச்சி. அதே நேரம் இந்த மாதிரி இன்னும் எவ்வளவு பாடல் இருக்கும்..அதெல்லாம் படிக்காம செத்துப் போயிடுவோமானு பெரிய பயம்.

டியர் புலவர்காள் நீங்க வேற லெவல்.

அடுத்து பார்த்தவிழி ..

இரண்டு ஞானக்கிறுக்கர்கள் மோதிக்கொள்ளும் மைதானம் . கமல் எப்பேர்பட்ட பைத்தியங்களையும் அறிவாளியாக்கும் வல்லமை கொண்டவன். இசைஞானி எப்பேர்ப்பட்ட அறிவாளிகளையும் பைத்தியமாகும் சூட்சமம் அறிந்தவர். கூடவே வாலியின் மொழி ஜேசுதாஸ் என்னும் மகுடியில் வாசிக்கும்போது மிஸ்டர் பட்டரும் உயிரோடு இருந்திருக்க வேண்டும்.

தலையில் மணி அடித்ததை உணர்ந்தும் சக்தியைக் காண ஓடுவது, தன்னைத்தானே சுற்றி வந்து பிறகு அந்தக் கேமராவையும் ஒரு சுழற்று சுழற்றி தேவியின் பத்ம பாதங்களில் பணிந்தது கமல் என்னும் கலையின் தாகம்,தவிப்பு

இசைஞானி “இடங்கொண்டு விம்மி “ என மேற்சொன்ன அந்தாதியை
ஒலிக்கவிட்டு உயிரை அறுக்க, சரியாக வடங்கொண்ட கொங்கை மலை வரி ஒலிக்கும் பொழுது நாயகியின் மாராப்பை சரி செய்ய வைத்தது கமலைத் தவிர வேறு யாராலும் நினைத்துக்கூட பார்க்க முடியாத சேட்டை.

தேவியின் அருள்பாலிக்கும் அந்த விரல்களைத் தொட்டவுடன் பரவச நிலையிலிருந்து அடுத்த நிலைக்குச் செல்லும் அந்த transistion ..

வலிய நெஞ்சைக் கொண்ட தலைவன் தனியாக ஆடுகிறான். அறிவிற் சிறந்த தலைவி அடக்கமாய் எதிர்கொள்கிறாள். தலைவியைத் தொட்ட தலைவனுக்கு இறுமாப்பு கூடுகிறது. தன் கெண்டைக்கால் சதையால் தலைவியின் பிருஷ்டத்தை இழுத்து தன் கட்டுக்குள் கொண்டு வருகிறான்.
இருவரும் ஒருவரையொருவர் அணைக்கின்றனர். ஒன்றாகின்றனர். யார் தலைவன் யார் தலைவி தெரியவில்லை. யார் சிவம் யார் சக்தி தெரியவில்லை .. எது ஆண் எது பெண் விளங்கவில்லை.

கலையே ஆடுகின்றது ...கலையே இசைக்கின்றது .
கலையே ஒன்றாக்குகிறது ...கலையே ஒன்றாகுகிறது .
கலையே ஒலி.. கலையே ஒளி
கலையே வேதப்பரிபுரை..
கலையே வேதப்பரிபுரை.






Comments