இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

                               

நிலையுள்ள அல்லது நிலையற்ற எந்த ஒரு பொருளைக் கொண்டும் ஒப்புமை கூற இயலாத ஒருவர் இளையராஜா. இளையராஜா என்பது ஓர் உணர்வு. கோபத்தை, காதலை, காமத்தை இன்னும் பல உணர்வுகளை எப்படி உணர மட்டும் முடியுமோ அப்படி இளையராஜாவை உணர மட்டுமே முடியும். உடலில் உள்ள ஒவ்வொரு மயிர்க்கால்களும் அவரால் ஆட்கொள்ளப்பட்டு தன்னை அவர் விரல்களின் நுனிச்சதையில் முழுமையாக ஒப்படைத்து கொள்ளும். குறிப்பு பாதத்தில் அல்ல. எப்படிக் கவிஞர் பிரான்சிஸ் கிருபாவைப் படிக்கும் போது நம்மைக் கிருபாவாகவே உணர்கிறோமோ எப்படி திரையில் ரஜினியின் அவமானங்களையும் வெற்றிகளையும் நமக்கானதாகவே உணர்கிறோமோ அப்படி ராஜாவைக் கேட்கும் போது, ராஜாவை உணரும் போது நம்மை ராஜாவாகவே உணர்ந்து எவர் பாதத்திலும் பணிய மனம் மறுக்கும். அதுவே ராஜ தருணம்.அதுவே குழந்தைச் செருக்கு. அப்படி உணர்தலின் வழியே அடையக்கூடிய ஒருவரை எழுத்தாளர் கி.ரா அவர்களின் அறிவுறுத்தலின்படி ரமேஷ் - பிரேம் கண்ட நேர்காணலின் விளைவே இந்தத் தொகுப்பு. 

இந்தத் தொகுப்பு நான்கு பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. முதல் பகுதியான "இசையும் கலாச்சாரமும் - ஒரு நினைவு" சமூகத்திலும் பண்பாட்டிலும் இசை நடத்திய தாக்குதல்களையும் அதே நேரத்தில் வருடி கொடுத்த இடங்களையும் ஆராய்கிறது. அடுத்த பகுதியான "இசையின் இடம் காலம் மற்றும் இளையராஜாவின் கற்பனைவெளி" ராஜா என்னும் மகோன்னதத்தை கோட்பாட்டு ரீதியாகவும் ரசிக மனப்பான்மையுடன் சமூகப் பின்னணியுடனும் உரக்கப் பேசுகிறது. அதே நேரத்தில் இளையராஜா விட்டுச் செல்ல வேண்டிய இடங்களையும் கவனமாக இடித்துரைக்கிறது. குறிப்பாக திரை இசை மீறிய இசைக்கோலங்களை அவர் உருவாக்க வேண்டும் என்பது திரை இசையை விடாத என்றே புரிந்து கொள்ள மனம் விரும்புகிறது. ஏனெனில் திரையில் காட்சிகளுக்கு பாடல்களுக்கு அவர் இசையமைத்தாலும் அந்த இசை அந்த காட்சிகளையும் பாடல்களையும் மீறிய ஒன்றாகத்தான் இருக்கிறது. பல சமயங்களில் காட்சியையும் பாடல்களையும் ஏன் படங்களையும் வேறொரு தளத்திற்கு எடுத்துச் செல்லும் கருவியாகவே இருக்கிறது. இருந்தும் திரை ஊடகம் என்பது எளிய மனிதர்களின் நெஞ்சத்தில் அனுமதியின்றி நுழையக் கூடிய செல்லப்பிராணி. ராஜா எளியர்களின் ஆன்மா. எளியவர்களின் தாய் மடி. ஆகவே திரை இசையைக் கைவிடாத இசை மீறல் தொடர வேண்டும் என்பதே விருப்பம். 

கடைசி பகுதி இளையராஜா அவர்களின் நேர்காணலை ஒட்டி அ.மார்க்ஸ் எழுதிய விமர்சனத்திற்கு எதிர்வினையாற்றக்கூடிய பகுதி " இசையற்ற இடத்தில் இளையராஜா". மூன்றாவது பகுதியாக வருவதுதான் "இளையராஜாவுடன் உரையாடல்". இசை என்றில்லை எந்த ஒரு கலையையும் நேசிக்கும், படைக்க எத்தனிக்கும் அல்லது படைப்பில் உச்சம் தொட்டதாக நினைத்துக் கொள்ளும் ஒவ்வொருவரும் வாசித்து உணர வேண்டிய பகுதி. இசையை அனுபவித்தவர்கள் ஆராய்வதற்கான வாய்ப்பு. கடைசி பகுதியில் மட்டும் அ.மார்க்ஸ் அவர்களின் தகவலைத் திருத்தும் நோக்கில் ஒரு திரைப்பட பெயர் உள்ளது.அது தவிர தொகுப்பின் 108 பக்கங்களில் ஒரு வரியில் கூட ஒரு சொல்லாக கூட எந்த ஒரு திரைப்படத்தின் பெயரோ அல்லது பாடல் வரிகளோ பயன்படுத்தாமல் எழுதி இருப்பது கோட்பாட்டு ரீதியாக இசையையும் இளையராஜாவையும் நூலாசிரியர்கள் எப்படி அணுகி இருக்கிறார்கள் என்பதற்கு பேரெடுத்துக்காட்டு. இந்த நூல் இளையராஜாவை எந்த இடத்திலும் புனிதர் என்று சொல்லவில்லை. அவரின் இசை எவ்வாறு மனங்களை, சமூகத்தை, ஏன் இசையையே புனிதப்படுத்தியது என்று சொல்லுகிறது. 

கவிஞர் தீபு அண்மையில் "சொற்களுக்கு ஞானஸ்நானம் அளிக்கப்பட்டு புனிதமாக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட அந்தச் சொற்களை வைத்துக்கொண்டு புனிதமற்ற இந்த வாழ்க்கையை இனி எப்படி எழுத ? "என்று ஒரு கவிதையில் எழுதி இருப்பார். ஒலியையும் காற்றையும் சுத்தம் செய்து சுத்தம் செய்து புனிதமற்ற இந்த வாழ்க்கையைத் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருப்பார் இசைஞானி

Comments

Popular Posts