கன்னி

பைத்திய நிலையில்  எழுதி இருக்க வேண்டும் அல்லது பித்தம் தெளிந்த நிலையில் தன் அனுபவத்தை எழுதி இருக்க வேண்டும் . ஒரு பக்கத்தில் இருந்து அடுத்த பக்கத்திற்கு கடப்பது அவ்வளவு கடினம்.ஏன் பத்திகளைக் கூட..திகட்ட திகட்ட ஆழியில் மூழ்கித் திளைப்பதுபோல வரிக்கு வரி படிமங்களுக்குள் சிக்கிக் கொள்ள வேண்டும்.. இப்படி மூடி வைப்பதற்கு எவ்வளவோ இருந்தும்

கன்னி 

கொண்டாடப்பட வேண்டியவன். கூட்டங்களாலோ கூச்சலாலோ அல்ல. ஆழ்கடலின் அந்தரத்திற்குள் மனத்தை நிலைகுத்த வைத்து ஆன்மாவின் பரிசுத்த அன்பினால் மட்டுமே ஆராதிக்கப்பட வேண்டியவன். அது அப்படி ஒன்றும் கடினமான காரியம் அல்ல .. அவ்வளவு எளிதான காரியமும் அன்று.

கவிஞர் மனுஷ்யபுத்திரன் "மன்னிப்பின் இரவு" என்ற கவிதையில் மன்னிப்பைப் பற்றிச் சொல்லும்போது
"மன்னிப்பு
தன்னைத்தானே சுத்தப்படுத்தும்
ஒரு எளிய சடங்கு
அவ்வளவு பரிசுத்தமாக இருக்கும்போதும்
ஒரு நதியில் இறங்குவதுபோல
ஒரு அருவிக்கு கீழ் நிற்பதுபோல"
என்று எழுதி இருப்பார். தன்னைத் தானே பரிசுத்தமாக நினைப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. அப்படி நினைத்து விட்டால் கடலின் ஆழ்ந்த அமைதிக்குள் நம்மை நிறுத்துவதும் கடினமும் அல்ல.கன்னியை ஆராதிப்பதும் கிட்டத்தட்ட அப்படி ஒன்றே. 

லௌகீகத்தின் மனச்சுரண்டலில் இருந்து விடுபட்டு காதலுக்கும் காமத்திற்கும் ஆதார சுருதியான அன்புக்குத் தன்னை முழுமையாக ஒப்படைத்தவனின் நிஜ மற்றும் மாய உலகத்தில் அதிர்வுகளோடும் அதேசமயம்  ரசனைகளோடும் உலவும் தருணம் கன்னியை வாசிப்பது. எழுதும் எழுத்துக்களையும் வாழ்ந்த வாழ்க்கையையும் தண்டவாளத்தின் இடைவெளி கூட இல்லாமல் அதன் ஒரு பக்க இரும்பாக மட்டுமே நினைத்து பயணித்தவனின் விரல் பிடித்துச்  செல்லும் தருணம் கன்னியை ஏந்திக் கொள்வது.

காதல் வேறா காமம் வேறா அல்லது காதலும் காமமும் ஒன்றா என்ற அகப் போராட்டத்திற்குள் சிக்கித் தவிப்பவனின் கதை. காதலுக்கு ஓர் உருவம் காமத்திற்கு ஓர் உருவம் என இரண்டு பாத்திரங்களை உருவாக்கி இடையில் நின்றாடும் நேர்மையான கள்ளனின் வாழ்வு. அமலாவும் சாராவும் வேறுவேறு நாயகிகளாக ஏன் வேறு வேறு உயிர்களாக கூட எனக்கு புலப்படவில்லை. ஒரு கதாபாத்திரம் தூய்மையான அன்புக்கும் இன்னொரு கதாபாத்திரம் அதே அளவு தூய்மையான காமத்துக்கும் பிரதிகளாக உருவாக்கப்பட்டவை என்றே கருதுகிறேன். மற்றபடி இதில் சொல்லப்பட்ட உறவு முறைகள் தன்னை உண்மையாக காட்டிக் கொள்ள கதாசிரியர் போலியாக உருவாக்கிய ஒன்றாகவே எடுத்துக் கொள்கிறேன்.

மேற்சொன்னவற்றைத் தாண்டி எழுத்தாளர் அல்லது கதையின் நாயகன் தன்னை ஒருவரிடத்தில் ஒப்படைக்கிறார் முழுமையாக. எந்த பாசாங்கும் இல்லை.  போலித்தனம் இல்லை.. ஏன் கதையில் வரும் நாயகியிடம் கூட இல்லை..எந்த மனிதரிடத்திலும் இல்லை. இறையிடம் கூட இல்லை.. அந்த வரம் கடலுக்கு கிடைக்கிறது. முழுக்க முழுக்க தன்னை கடலிடம் ஒப்படைக்கிறார். நாவல் முழுவதும் கடலோடே இருக்கிறார். கடலும் நாவல் முழுவதும் நீர்மையாகவே இருக்கிறது. தனது எல்லாவற்றிலும் எல்லாமுமாக கடலையே பார்க்கிறார். கடலும் அவரை அப்படியே நினைக்கிறது.நாயகனை ஆற்றுப்படுத்தவும் தனக்கு ஆறுதல் தேடவும் கதாநாயகனின் கால்களையே நம்பி இருக்கிறது கடல். நாவல் முழுவதும் பிரிக்க முடியாத ஒன்றாகவும் உணர மட்டுமே முடிந்த உறவாகவும் கடலும் நாயகனும்  நிற்கின்றனர் .., கூடவே நானும்

அதிர்வுளோடும் ரசனைகளோடும் வாசித்த பொழுதுகளை விட வாசித்து முடித்த பின் அந்த நினைவுகளைச் சுமந்து திரியும் அமைதி அலாதியானது. இப்பொழுது கூட மீண்டும் அந்தப் புத்தகத்தை திருப்பி படிக்க தைரியம் இல்லை. ஆனாலும் வெறுமனே மடியில் வைத்துக் கொண்டுதான் இதை எழுதுகிறேன். அந்தத் தழுவலை விரும்புகிறேன். இது நான் விரும்பிய அதே நேரத்தில் அனுபவிக்க முடியாத தழுவல். கோவிலுக்குள் இருந்தும் பிரார்த்திக்க நினைக்காத கர்வம். சொற்களிருந்தும் நான் எழுதவே முடியாத ஒரு கவிதை.

எனது கவிதை தொகுப்பு வெளியீட்டு லிழாவில் ஏற்புரையை  ஒரு கவிதையோடு தொடங்கி அந்தக் கவிஞரை எனது தேவதூதன் என்று குறிப்பிட்டேன். நண்பர்கள் சிலர் தேவதூதன் அளவுக்கு கொண்டு செல்ல வேண்டுமா என்று என்னிடம் கேட்டார்கள். வழக்கம்போல் போலியாக அதைக் கடந்து விட்டேன். இப்பொழுது அது எவ்வளவு தவறு என்பதை உணர்கிறேன். அவன் தேவதூதன் அல்ல. நிச்சயமாக இல்லை. 

பிரான்சிஸ் கிருபா 
என் 
தேவன்.

*

தாயுமானவன் மதிக்குமார்

Comments

Popular Posts