யாமக்கோடங்கி - நூல் வெளியீடு - சென்னை

கடந்த திங்கள்கிழமை 25.12.23 அன்று சால்ட் பதிப்பக வெளியீடாக ஆறு கவிதை நூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதில் ஒன்றாக எனது கவிதை நூல் "யாமக்கோடங்கி" யும் இடம்பெற்றிருந்தது அளவற்ற மகிழ்ச்சி.


கவிஞர் முத்துராசக்குமார் நெறியாள்கையில், கவிஞர் மனுஷ்யபுத்திரன் தலைமையுரையோடு நிகழ்வு துவங்கியது.


தமிழ்க்கவிதைகளுக்கும் கவிஞர்களுக்குமான இன்றைய இடத்தையும் வருங்காலங்களில் அது நகர வேண்டிய இடத்தையும் கவிதை மேல் உள்ள வழக்கமான தன் அக்கறையைத் தலைமையுரையில் வெளிப்படுத்தினார் கவிஞர் மனுஷ்யபுத்திரன்.


அடுத்ததாக எனது நூலறிமுக உரையாற்றிய கவிஞர் ஸ்டாலின் சரவணன் கவிதைகளைப் பற்றியும், என்னுடைய அடுத்த நகர்வுக்கு தேவையான கருத்துக்களையும் பேசியது புது நம்பிக்கையளித்தது. சில வருடங்களுக்கு முன் அவருடைய, "ஆரஞ்சு மணக்கும் பசி" பற்றிய ஒரு தொலைபேசி உரையாடல், இந்த மேடையில் முதன்முறையாக அவர் சந்திப்பையும், இனி வரும் நாட்களில் அவரின் துணையையும் உறுதி செய்த காலத்திற்கு நன்றி.


புத்தகத்தை என் மனைவி பாகீரதி வெளியிட, அம்மா  பூமாதேவி தாயுமானவன் பெற்றுக்கொண்டார்கள்.


தேவதூதன் பிறந்த அன்று நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் கவிதைளின் தேவதூதன் அண்ணன் கவிஞர் பிரான்சிஸ் கிருபா அவர்களின் நினைவுகளோடு தொடங்கி முடிந்தது எனது ஏற்புரையும் நன்றியும்.


மேற்கண்ட நிகழ்வைப் போலவே மற்ற ஐந்து கவிஞர்களின் நூல் வெளியீடும் உரைகளும் அடுத்தடுத்து சிறப்பாக நடைபெற்றன.


கவிஞர் ச.துரை அவர்களின் இயல்பான பேச்சில் நன்றியுரையோடு நிகழ்வு நிறைவுற்றது.


ஆளுமைகளின் புகைப்படங்களோடு ஆர்வலர்களால் முழுமையாக நிறைந்த கவிக்கோ அரங்கம்,  கவிதைகளின் வழி மட்டுமே தெரிந்து, முதன் முறையாக நேரில் முகம் காட்டிய கவிஞர்கள், ஆளுமைகள், இன்னும் பெயரறியாத  ஆர்வலர்கள், நினைவுகளை மட்டும் அனுப்பி நிகழ்வைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்த தொலைதூர நட்புகள்,  அதிர்ச்சி கொடுத்த சில புன்னகைகள் என நினைவுக்குள் வைத்துக் கொள்ள தருணங்கள் ஆயிரம் ஆயிரம்.


நூலின் அட்டை வடிவமைப்பு செய்த ஓவியர் மணிவண்ணன், புத்தக வடிவமைப்பு செய்த M creative, அச்சாக்கம் செய்த அச்சுக்கலைஞர் நூல்வனம் மணிகண்டன், நிகழ்வில் புகைப்படம் எடுத்த சந்தோஷ், ஒளிப்பதிவு செய்த ஸ்ருதி டிவி என என் நம்பிக்கையின் வரிசைக்கு நீளம் அதிகம்.


ஒரு நீண்ட கனவை வடிவமாக்கி வாசல் திறந்துவிட்ட சால்ட் பதிப்பகத்திற்கும் கவிஞர் நரன் அவர்களுக்கும், புத்தக வடிவமைப்பு தொடங்கி நிகழ்வு முடிவு வரை துணையாய் நின்ற துரை, முத்து, கிருத்திகா  அனைவருக்கும் என்றென்றும் நீங்காத அன்பு.


நிலை மாறா நண்பர்கள், தனிமையில் என்னை விடாத இரவுகள், இந்தத் தொகுப்புக்குக் காரணமான அந்தக் கடல் வரும் காலங்களிலும் துணையாய் இருப்பதைத் தவிர வேறென்ன வேண்ட.


*

Comments

Popular Posts