ஆசான்கள்
கோயம்புத்தூர் நரசிம்ம நாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளி ஒரு அடையாளத்தோடு எனக்கு இந்த வாழ்வையும் கொடுத்த பள்ளி. பள்ளி முடிந்து பல ஆண்டுகள் கழித்து நண்பர்கள் இணைந்து ஆகஸ்டு பதினைந்து பள்ளியில் சந்தித்து மாணவர்களுக்கு எங்களால் ஆன சிறு உதவிகள் செய்யலாம் என்று முடிவெடுத்து கடந்த ஏழாண்டுகளாகச் சண்டைகளும் கொண்டாட்டமுமாய் சந்திப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. எப்பொழுதும் தொலைபேசி மூலம் கலந்து கொள்ளும் எனக்கு இந்த முறை நேரில் செல்லும் வாய்ப்பு.
ஆகஸ்ட் 15 அதிகாலை 4:30 மணிக்கு காந்திபுரம் . 5:00 மணிக்கு நரசிம்ம நாயக்கன் பாளையம். 20 நிமிடத்துக்குள் பேருந்தில் செல்லுமளவுக்கு ந.நா.பாளையம் காந்திபுரத்திற்கு அருகில் வந்திருந்தது. அல்லது காந்திபுரம் பல சிறு ஊர்களை விழுங்கி விரிந்திருந்தது. பகலில் தான் தெரிந்தது புளிய வாதுகளாலும் இலைகளாலும் ரம்மியமாக இருந்த அந்த மேட்டுப்பாளையம் ரோடு சாலை விரிவாக்கத்தில் தன் பெண்மையை இழந்து கோரமாய்க் கிடந்தது.
நண்பரின் வீட்டுக்குச் செல்லும் வழியில் இருந்த எங்கள் பள்ளியில் அந்த நேரத்திலும் மாணவர்களின் சத்தம் கேட்க உள்ளே சென்றேன். குறைந்தது 20 மாணவர்கள் உடற்பயிற்சி செய்ய உடற்கல்வி ஆசிரியர் திரு.தனக்குமார் கண்காணித்துக் கொண்டிருந்தார். அறிமுகப் படலங்கள் முடிந்து “எப்படி சார் 5:30க்கே?” என்றேன். “5:30 இல்ல சார் பசங்க 5 மணிக்கே வந்துருவாங்க..நான் 4:30க்கே வந்துருவேன். தினமும் காலைல இரண்டு மணிநேரம் அப்பறம் பள்ளி முடிச்சிட்டு மூணு மணி நேரம் .. உடற்பயிற்சியும் விளையாட்டும்தான் சார் .நம்ம பசங்க மாவட்ட மாநில அளவில் மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் நிறைய போட்டிகள்ல கலந்துகிட்டு இருக்காங்க சார்” என்றார். .
“அதைவிட முக்கியம் பசங்க வேற எதுலயும் கவனம் செலுத்தாம விளையாட்டும் படிப்புமா இருக்காங்க..ஆரம்பத்துல தான் கஷ்டமா இருந்தது..இப்ப பசங்க அவங்களே ஆர்வமாக வர்றாங்க..அந்த ஆர்வத்துக்கு 4 மணி என்ன சார்..ஒரு நண்பனா எப்ப வேணா எந்திரிச்சு வரலாம்” என்ற தனக்குமார் சாரை பார்த்து கொஞ்சம் இல்ல ரொம்பவே அதிர்ந்து நின்றேன். கொடி ஏத்த சீக்கிரம் வந்துடுங்க என்று சொல்லி விட்டு அடுத்த வேலைக்குச் சென்று விட்டார்.
கொடியேற்றல் , கலை நிகழ்ச்சிகள் மற்றும் உரைகள் என வழக்கங்களுக்கு நடுவே தலைமை ஆசிரியரிடம் சார் விளையாட்டு போலவே மாணவர்களை இலக்கியத்திலும் ஈடுபடுத்தலாமே என்றேன். ஒரு நிமிடம் என்றவர் தமிழாசிரியர் திரு முனியாண்டி அவர்களை அழைத்து பேச சொன்னார்.
தமிழாசிரியர் திரு முனியாண்டி அவர்கள் பள்ளியில் நடக்கும் கலைத் திருவிழாக்களைச் சொல்லிவிட்டு மாதம் இருமுறை இலக்கிய சந்திப்பு நடத்துவதாகவும் சிறப்பு விருந்தினர் ஒருவரை வரவழைத்து மாணவர்களுக்கு நவீன இலக்கியங்களையும் அறிமுகப்படுத்தி வருவதாகவும் சொன்னார். நூலகத்துக்கென்று தனி அறை இல்லை என்றாலும் முடிந்தவரை மாணவர்களுக்கு நூல்களை எடுத்து வாசிக்கும் பழக்கத்தை தூண்டி வருவதாக சொன்னவர் நம்ம பள்ளியில் படித்த மாணவர்களில் பத்துக்கும் மேற்பட்டோர் மேற்படிப்பில் தமிழ் இலக்கியம் படித்து வருகிறார்கள் என்றார்.நான் படிக்கையில் மொத்தம் பத்து பேர் கூட மேற்படிப்பு தொடரவில்லை. பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு படிக்க ஆர்வமிருந்தும் வடக்கால பிராந்தி கம்பெனிக்கும் தெக்கால வைரக் கம்பெனிக்கும் மிச்சம் மில் வேலைக்கும் சென்ற நண்பர்களின் நினைவு வந்தது. வேறு எதுவும் பேச இயலவில்லை.சிறப்பு சார் என்று முடித்துக் கொண்டேன்.
தொடக்கப் பள்ளியிலும் கதைகள் வாசிப்புக்கு அதிக முக்கியத்துவம் தருவதாக ஆசிரியர்கள் சொன்னார்கள். மற்ற ஆசிரியர்களிடம் பேசுவதற்கு முடியவில்லை.
முன்பு எனக்குப் பயிற்றுவித்த ஆசிரியர்கள் என்மீது அதீத அக்கறை கொண்டவர்கள். முதன்முதலில் பொதுத்தேர்வு எழுதும் போது வீட்டுக்கே வந்து தைரியம் சொல்வதாக இருக்கட்டும்..சில நேரங்களில் எனக்கு கல்விக் கட்டணத்தை கட்டுவதாக இருக்கட்டும் ..மருத்துவம் / பொறியியல் படிக்க ஏதுவான +1 ல் சேராததற்கு என்மீது கோபித்துக் கொண்டதாக இருக்கட்டும்.. பாடப் புத்தகத்தைத் தாண்டி என் ஆசிரியர்களிடம் இருந்து நான் எடுத்துக் கொள்ளவும் கற்றுக்கொள்ளவும் ஏராளம் உண்டு.
இன்றும் எனக்கு ஒரு பழக்கம் உண்டு. எந்த ஊரில் எந்த ஆசிரியர் பார்த்தாலும் அவர்களில் என் ஆசிரியர்களின் சாயலைத் தேடிக் கொண்டே இருப்பேன்.
திரு .தனக்குமார் & திரு.முனியாண்டி சார்..
இனிமேல் என் ஆசிரியர்களோடு சேர்த்து உங்கள் சாயலையும் நான் பார்க்கும் ஆசிரியர்களிடத்தில் தேடுவேன்.
Comments