குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு
எங்கள் ஊர்ப் பக்கங்களில் கிராம தெய்வங்களுக்கு “புரவி எடுப்பு” என்று அடிக்கடி திருவிழா நடக்கும். அந்தப் புரவி எடுப்புக்கு எட்டு நாட்களுக்கு முன்பு “சேங்காய் வெட்டு” என்று ஒரு நிகழ்வு நடக்கும். அந்த நிகழ்வில் அந்தக் கோவிலுக்கு உரியவர்கள் கோவிலுக்கு அருகில் உள்ள கண்மாய்க் கரையில் மண் வெட்டித் தலையில் சுமந்து கரையின் மேட்டில் கொட்டுவார்கள். அந்த நிகழ்வே புரவி எடுப்புத் திருவிழாவின் தொடக்கம். குதிரைகளைக் கொண்டு சென்று இறை வணக்கம் செலுத்தும் நிகழ்வுக்கும் கரையில் மண் வெட்டுவதற்கும் என்ன தொடர்பு.?
ஆற்றங்கரையில் வரலாறு தோன்றியது. அந்த ஆறு குளங்களின் வரலாறு என்ன ? குளங்களுக்கும் மனிதர்களுக்கும் இருந்த உறவு எப்படி இருந்தது என்பதைப் பேசுகிறது “குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு”. அனுபம் மிஸ்ரா 90 களில் எழுதி அதிக விற்பனையான நூலைத் தமிழில் பிரதீப் பாலு மொழிப்பெயர்த்துள்ளார்.
தென்னிந்தியா நீங்கலான இந்தியாவை மையப்படுத்திக் குளம் கட்டுமானத்தில் ஆரம்பித்து, குளம் கட்டிய இனக்குழுக்கள், குளத்திற்கு வழங்கப்படும் பெயர்கள், அதன் காரணங்கள், குளத்தைப் பராமரித்தல் எனக் கிட்டத்தட்டக் குளங்களோடு வாழ்ந்த உணர்வைத் தந்தது புத்தகம்.
நீர்சொம்பு, மஞ்சள் சுண்ணாம்பு, உருண்டை, மௌலி, சிறிதளவு சோறு மற்றும் ஒரு சிகப்பு மண் உருண்டையைக் கொண்டிருந்த தாம்பாளத்தட்டு என இறை வழிபாட்டுக்கான எல்லாம் கொண்டு நாட்டிலுள்ள எல்லா நதிகளுக்குமான மரியாதை செய்யப்பட்டு, மண்வெட்டி கொண்டு ஐவர் நிலத்தைத் தோண்டி ஐந்து தட்டுகளில் நிரப்பி , கரையில் கொண்டு போய் கொட்டுவதில் ஆரம்பிக்கும் குளம் வெட்டும் வைபவம். தி ரியல் “சேங்காய் வெட்டு”.
ஒரு வருடம் விட்டு ஒன்று, அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை எனப் புரவிஎடுப்பு நடத்த ஒரு விதியை வைத்துள்ளார்கள். எங்க ஊரில் தெருவுக்கு ஒரு கிராம தெய்வம், ஊரைச் சேர்ந்த 22 ½ கிராமங்களில் எவ்வளவோ கிராம தெய்வங்கள். அப்படி என்றால் எத்தனை குளங்கள் வெட்டப்பட்டிருக்கும், எவ்வளவு முறை பராமரிக்கப்பட்டு இருக்கும். இயற்கையை இறையாக நினைந்திருந்த, இறையின் வழியே இயற்கையைப் பாதுகாத்திருந்த வாழ்வியலை வியக்கமால் இருக்க முடிவதில்லை.
நீர்வரத்தில் இருந்து, குளங்களின் ஆழம், அரண்களின் உயரம், நீர் நிறைந்தால், உபரி நீர் கொண்டு நிரப்பும் குளங்கள் எனத் தங்கள் அனுபவங்கள் மூலமே அத்தனையும் நிகழ்த்திய வடஇந்தியர்கள் இன்று தங்கள் எல்லைகளைத் தாண்டி பஞ்சம் பிழைக்க வரும் உணர்வைக் கடல்களைத் தாண்டி பஞ்சம் பிழைக்கும் சக வந்தேறி என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
குளம் வெட்ட ஆரம்பித்த கணவன் இறந்த பின்னும், உடன்கட்டை ஏறாமல் ( அந்தப் பழக்கம் இருந்த காலம்) , குளம் வெட்டுதலைத் தொடர்ந்த மனைவிகள், தினமும் ஒரு புதிய குளத்தில் குளிக்க இணங்கிய ராணிக்காக , ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்ட 365 குளங்கள் (பீகார் லக்கிசார் பகுதி), பீரங்கி பரிசோதனையில் குண்டு விழுந்ததால் உருவான ஒரு குளம் ( ஜெய்ப்பூர் அருகில்), குளத்திற்குக் கலைநயமிக்க வாயிலை அமைத்த விலைமகள் எனக் குளங்களை அண்ணாந்து பார்க்க வைக்கும் குறிப்புகள் புத்தகத்தில் உண்டு.
சின்ன நெருடல், இப்படி ஓர் ஆவணத்தில் தமிழகக் குளங்கள் பற்றிய சிறு செய்தி கூட இல்லை. யூமா சின்னச் சின்ன ஞானங்கள் தொகுப்பில் மொழிப்பெயர்ப்பாளர் இணைப்பு என்று தனக்கான உரிமையைக் கொஞ்சம் எடுத்திருப்பார். மதராஸ் போன்ற நகரங்களில் குறையும் நிலத்தடி நீரை அக்கறையோடு சொல்லும் , குளங்களைப் பச்சை குத்தும் பழக்கம் தமிழ் நாட்டின் அஸ்காத் மாவட்டம் ( அச்சுபிழையா/தகவல் பிழையா தெரியவில்லை ) குராவோன் சமூகத்தில் இருக்கிறது எனக் குறிப்பிட்டுச் சொல்லும் புத்தகம், தமிழகக் குளங்களை ஒரு குறிப்பில் சொல்லி இருக்கலாம்.
இருந்தும் புத்தகம் சொல்வது குளங்களின் வரலாற்றை, குளங்களைப் பாரமரிக்க வேண்டிய அவசியத்தை, அதைத் தாண்டி குளங்களை உருவாக்கிவிட்டு இன்று ஒடுங்கிக் கிடக்கும் மனிதர்களின் மொழி தெரியாத ஒப்பாரியை.
பதிப்பகம் : தன்னறம் நூல்வெளி
Comments