கார்மலி
நூல் : கார்மலி
ஆசிரியர் : மித்ரா அழகுவேல்
பதிப்பகம் : வாசகசாலை
பக்கம் : 108
விலை : ரூ140
கடல் அலைகளை அனுப்பி கொண்டே இருக்கிறது. ஒரு அலை வந்து கரை தொட்ட பின்பு மீண்டும் உள்வாங்கி இன்னொரு அலையோடு சேர்ந்து கொள்கிறது. ஒரே அலையா அல்லது வெவ்வேறு அலைகளா தெரியாது. ஆனால் ஒவ்வொரு அலைகளும் காண்பவர்களை புதுப்பிக்கிறது அல்லது ஒவ்வொரு முறையும் தன்னை புதுப்பித்துக் கொள்கிறது. பெண் உணர்வுகள் தாங்கி வரும் படைப்புகளும் அலைகள் போன்றவையே. கடலுக்கு கார்மலி என்ற பெயரும் உண்டு. கார்மலி மித்ரா அழகுவேல் அவர்களின் முதல் சிறுகதை தொகுப்பு. பெண்ணுணர்வுகளை பெரும்பான்மையாகக் கொண்டு மொத்தம் 12 சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பு. வேறு வேறு களங்கள். வெவ்வேறு கருக்கள். அண்மையில் வந்த லப்பர் பந்து என்னும் திரைப்படத்தில் நாயகன் கிரிக்கெட் விளையாடும் போது முதல் பந்தை சாமிக்கு விட்டு விடுவான். அதைப்போலவே மித்ரா அவர்களும் முதல் நான்கு கதைகளை சாமிக்கு விட்டு விட்டு ஐந்தாம் கதையிலிருந்து அடித்து ஆடி இருக்கிறார். ஒரு பெண்ணின் வெறுமையை பேசும் இடமாக இருக்கட்டும். ஆண் பெண் நட்பை பெண் பார்வையில் சொல்வதாக இருக்கட்டும்
தோல் நீக்கப்பட்ட நுங்கை கைகளில் பக்குவமாக ஏந்தி தருவதைப் போல கவனமாக படைத்திருக்கிறார். அதே நேரம் எந்த பூச்சுமன்று வெளிப்படையாக இருக்கிறது. அக உணர்வு சார்ந்து எழுதியுள்ள கதைகள் மற்ற கதைகளை காட்டிலும் நெருக்கத்தை தருகிறது. இன்னும் பல கதைகள் அவரிடத்தில் நிறைந்து இருக்கக்கூடும். தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.
Comments