இக்கிகய்

வாழ்வை நோக்கிய சலிப்புகள் நாற்பதின் தொடக்கத்திலே வரத்தொடங்கிவிட்டன.  சின்ன சின்ன சறுக்கல்களைக் கூட மரணத்திற்கான எஸ்கலேட்டர்களாக மாற்றி மனம் அருளிக் கொண்டிருக்கிறது. போதையின் தோள்களில் பால்குடி மறந்த உடனேயே  பிள்ளைகள் ஏறத்தொடங்கிவிட்டனர். உள்ளும் புறமும் இப்படி இருக்க நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கான ஜப்பானிய ரகசியம் என்ற குறிப்புடன் இருந்த “இக்கிகய்” யை ஒருவித நகையுணர்வுடனே ஆரம்பித்தேன்.
ஆனால் பக்கங்கள் செல்ல செல்ல புத்தகம் ஆக்கிரமிக்க தொடங்கியது. ஏதோ சுயமுன்னேற்ற தத்துவங்கள் உளவியல் உருட்டல்கள் மகா கணங்களின் பொன்மொழிகள் என்றெல்லாம் இருந்த எதிர்பார்ப்புகளை எங்கோ ஒரு தீவில் இருக்கின்ற மக்களின் நிம்மதியான வாழ்வியலை எந்த ஒரு புனைவுமின்றி சொல்லுகின்ற எழுத்து உடைத்தெறிகிறது. அறிவுரைகள் அதிகம் தான் இது போன்ற புத்தகங்களில் அவற்றை எவ்வாறு தவிர்ப்பது ?. அந்தத் தீவு மக்களின் ஆவி குறித்தான நம்பிக்கைகள் அக்கம் பக்கத்தினரோடனா கூட்டு வாழ்வு பக்கங்களை அலுப்புத்தட்டாது நகர்த்துகின்றன.  அதே நேரத்தில் அந்தச் சூழலுக்கும் அந்த மனிதர்களுக்கும் உகந்திருக்கும் அந்த வாழ்வு இங்கு எல்லாருக்கும் சாத்தியமா என்ற கேள்வி எழாமல் இல்லை. ஒக்கினா தீவில் நிகழ்ந்து கொண்டிருப்பது தனி மனிதனும் கூட்டு சமூகமும் சேர்ந்து நிகழ்த்தும் அற்புதம்.  ரசித்து கட்டும் சொர்க்கம். இங்கோ அற்புதங்களின் ஆயுள் என்பது அரை நிமிட ரீல்ஸ்களுக்குள் ஒளிந்திருக்கிறது. ஒளிந்திருப்பதை தேடி தேடி கட்டை விரல்கள் தான் கரைந்து சோம்புகின்றன.

புத்தகத்தைப் படித்து முடித்த பின்பும்  அறுபதைத் தாண்டி வாழ்ந்திட கூடாது என்ற ஆசையில் எந்த மாற்றமும் இல்லை. இருந்தும் அடுத்த நொடி மரணித்தாலும் இந்த நொடியை இனிக்க இனிக்க வாழ வேண்டும். இந்தக் கணம் அதி முக்கியமானது. இந்த ஒரு நொடியில் தான் ஒரு பூ மலரத்  தொடங்குகிறது. விதை துளிர்ப்பதைப் போல தலையை முட்டி முட்டி ஓர் உயிர் உலகத்திற்குள் வருகிறது. இந்த நொடியில் தான் ஒரு தவளை குளத்திற்குள் தாவுகிறது.. இந்த ஒரு நொடியில் தான் இளையராஜாவின் விரல் தசை ஹார்மோனியத்தின் அந்தரங்கங்களை சுண்டி அருமருந்தை பிரசவிக்கிறது. இந்த  ஒரு நொடியில் தான் பரதமாடும் ஒரு நங்கை தன் ஒரு பக்க இடையை மேல் தூக்கி மறுபக்கத்தை சாய்த்து காற்றுக்குக் காமத்தை ஊட்டுகிறாள். இந்த ஒரு தருணத்தில் தான் அதி அற்புதமான அந்த மரணமும் நிகழ்கிறது. காலத்தைத் தருணமாக்கி ரசிக்கும் அந்தக் கலைக்கு அருகில் அமர்ந்து கொண்டு தேநீர் கொடுக்கிறது இந்தப் புத்தகம்.

Comments

Popular Posts