விடியலுக்கு ஒரு கடிதம் ...

பாசமான விடியலுக்கு 

எழுதுகிறேன் ஒரு கடிதம்

நீ நலமுடன் இருப்பாய்.
நீ வந்ததால் நானும் நலம்

இதுவரை வராத
உன்னை தண்டிப்பதா.
உன்னை அழையாத
என்னையே தண்டித்துக்கொள்ளவா.

பாலுட்ட நினைக்கும் அன்னை-என் அன்னை
கொடுந்தேள் கொட்ட குப்பையில் போட்டாளே.

அப்பொழுது நீ வரவில்லை-என்
பிஞ்சு முகம் காணவில்லை.

உறவில்லா அனாதை ஆனாலும்
பணமில்லா பிச்சைக்காரனால்-நறு
மணமில்லா தொட்டியிலிருந்து சுதந்திரம்

நீ வந்து தந்திருக்கிறாய்
சுதந்திரம் என நினைத்தேன்

ஆனால் ,

விதி செய்த தந்திரம்
என பின்புதான் உணர்ந்தேன்

ஆம்.
அடைக்கலம் கொடுத்த
அவனால் பிச்சைக்காரனால்..
அனைவரிடத்திலும் கையேந்தி நின்றேன்.

அப்பொழுது நீ வரவில்லை -
என்அறியா முகத்தை காணவில்லை.

பிச்சைக்காரனாகும் போது நீ வரவில்லை.
பிச்சை எடுக்கும்போதாவது வந்திருக்கலாம்.

ஊர் முழுக்க சுற்றினாலும்
அரைசாண் வயிறு கூட நிரம்பியபாடில்லை

தெருத்தெருவாய் சுற்றினாலும்
தேன் மிட்டாய் வாங்ககூட காசில்லை.

விடியலே..அப்பொழுது நீ வரவில்லை.
என்பாவ முகம் காணவில்லை.

அடுத்தவரின் அன்னதானத்தை
எதிர்பார்த்து வாழ்ந்தேன்!- அரைசாண் வயிற்றுக்காக

வாழ்ந்தேன்
வாழ்ந்தேன்.
வளர்ந்தேன்


வண்டி ஓட்ட ஆசைப்பட்டேன்
வண்டி துடைக்கச் சென்றேன்
வஞ்சனை உடைய பல்லோரால் உதைபட்டேன்.

தேநீர் அருந்த ஆசைப்பட்டேன்
தேநீர் கடைக்குச் சென்றேன் காசில்லாமல்
கீழே செல்லும் சுடுநீர்
முகத்தில் அருவியாய் பாய்ச்சப்பட்டது.

அப்பொழுது நீ வரவில்லை
என்அழுகை முகம் காணவில்லை.

உணர்ந்துவிட்டேன் சமுதாயத்தை!-விடியலே
உன்னையும் சேர்த்துத்தான்

எடுத்தேன் கத்தியை
தீட்டினேன் புத்தியை
அடித்தேன் அடுத்தவரின் பையை.

விதி வந்து விளையாடியது
நான் அறுத்த பை காவல்காரருடையது.

அவர்களெல்லாம் புரவலர்களாம்
குற்றெம்மெல்லாம் என் மீது சுமத்தினார்கள்

அவர்களெல்லாம் கர்ணன் பரம்பரையாம்.
வாரி வழங்கினர் தண்டனையை.

ஏழாண்டு கடுங்காவல் தண்டனை!- நீதிபதியின்
வாய் முத்துக்கள்.

வானத்தைக் கூரையாகக் கொண்ட
எனக்கு வரவேற்பளித்தது பாலர் சிறைச்சாலை.

விதியின் ஆனந்த தாண்டவம்
என நினைத்தேன்.

விடியலே....
நீதான் வந்திருந்தாய் -என
இப்பொழுதுதான் உணர்ந்தேன்.

கடுமையான வேலை
கூடவே தொழிற்கல்வி
கடுமையான வேலை
கூடவே அறிவுக்கலை

வெளியில் வந்தேன்.சிறையை விட்டு
அப்பொழுதுதான் உணர்ந்தேன்.
புதிய வாழ்க்கையை

கடுமையான உழைப்பு
கை நிறைய பணத்தைக் கொடுத்தது

பட்டறையில் சேர்ந்தேன் - 
இன்றைக்கு பத்து
பட்டறைகள் என்னுடைமை

முடித்துவிட்டு வந்தேன். புதியதொழிற்சாலை
அடிக்கல்நாட்டு விழாவை

விடியலே...

இப்பொழுதுதான் உணர்ந்தேன் - உன் அருமை
நீ என் வாழ்வில் வந்துவிட்டாய் என பேசினேன் பெருமை

ஒளியின் அருமை- இருளில்தான் தெரியும்
மேட்டின் உயரம் - பள்ளத்தில்தான் தெரியும்
துன்பப்பட்டால்தான் விடியலே - உன் அருமை புரியும்

இதை உணரா கோழை,
செய்துகொள்கிறான் தற்கொலை
விரைவில் அவர்கள் வாழ்வில் வந்துவிடு
உன்னருமையை உணர்த்திவிடு 

வரவேற்கும் நெஞ்சங்களில்
நானும் ஒருவன்
பாசத்துடன் ......
மதிக்குமார்.

( கவிதை எழுத ஆசைப்பட்ட என்னுடைய முதல் முயற்சி... என்னுடைய முதல் கவிதை...! P.S.G Tech, Coimbatore தமிழ் மன்றம் நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது. 11-09-2001)

Comments

Divya said…
Wowwwwwwwwwwwwww
find no words to express what I felt when I read ur post.......I am just speechless!

Xlnt!!!

ஒவ்வொரு வரியும்...

நெஞ்சை நெகிழவைத்தது!
சிந்திக்க வைத்தது!
மனதை கணமாக்கியது!
தன் நம்பிக்கையை கொடுத்தது!
உழைக்கும் எண்ணம் உருவாகியது!

மிகவும் , மிகவும்......அருமையான வெளிப்படுத்துதல் உங்கள் எழுத்தில், மனமார்ந்த பாராட்டுக்கள்!
கவிதை என்பது வெறும் பாக்களாக

மட்டும்ல்லாது...

நம் உள்ளக்கண்ணாடியாகவும் இருக்க வேண்டும் என்று எழுதியது....

தங்கள் பாரட்டுக்கு நன்றி...!

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு