துணையே துணை
இருந்த இடத்திலிருந்து ஒரு 10 அடி மேலே பறந்து விரல்களை கைக்குள் அடக்கி சாதித்த சைகைய காட்ட வேண்டும் போலிருந்தது " நீங்க அப்பா ஆகிட்டீங்கன்னு" அவள் நாணத்தோட சொல்லி சிரித்த பொழுது தமிழரசனுக்கு.
தொலைபேசியில் பேசிய பாரதி அருகிலில்லை. இருந்திருந்தால் அவளையும் சேர்த்துத் தூக்கியிருப்பான் தமிழரசன்.
பாரதியும் தமிழரசனும் திருமணம் செய்து 5 மாதங்கள் தான் இருக்கும். காதலித்து திருமணம் செய்யவில்லை.அதனால் திருமணம் செய்து காதலிக்கின்றனர்.
சிங்கப்பூரில் வேலை செய்யும் தமிழரசன், திருமணத்திற்கு முன் காதலிக்கத் தெரியாமல் இல்லை. ஆனால் காதலை விட அவன் கவனிக்க வேண்டிய காரியங்கள் அதிகமாக இருந்ததால் காதலில் அவன் கவனம் செல்லவில்லை.
ஆனால் அவன் கூட அறையில் தங்கி இருந்தவர்களுக்கும், வேலை செய்பவர்களுக்கும் அவன் கவலை எப்படித் தெரியும் ?
அலுவலகத்தில வேலை பாக்குற இந்திய நண்பர்கள் எல்லாரும் ஒண்ணா சாப்பிடுறது வழக்கம். திருமணம் ஆனவங்களும், ஆகாதவங்களும் கலந்த கலவை அது.
திருமண ஆனவங்க, ஆகாதவங்கள கிண்டல் பண்றது சாப்பாட்டை விட அவங்களுக்கு ரொம்ப முக்கியம். அதுலயும் திருமண ஆகாத மற்ற பசங்க எப்படியும் காதலிக்கு தொலைபேசி பண்றோம் அப்படி இப்படின்னு தப்பிச்சிருவாங்க. பாவம் நம்ம தமிழரசன் மாட்டிக்குவான்.
"என்ன தமிழ். வீட்டுல இன்னுமா பொண்ணு பாக்குறாங்க? " ஒரு நண்பர். அந்த இன்னுமாவில் அவர் கொடுக்கிற அழுத்தம் , ஒரு 25 கிலோ எடைக்கல்ல கேட்டவர் தலையில போடணும்னு தோண வைக்கும் தமிழரசனுக்கு.
"இவங்க வீட்டுல பாத்தா போதுமா ? பொண்ணு வீட்டுல சம்மதிக்க வேணாமா ? " இது இன்னொரு குரல்.
"என்ன தமிழ்.. சிங்கப்பூர் மாப்பிள்ளை வேற.. வரதட்சிணை அதிகமா கேக்குறீங்களோ ? "
அதற்கு பதில் சொல்ல ஆரம்பிக்கும் முன் " என்ன தமிழ், உங்களுக்கெல்லாம் வரதட்சிணை வேற கொடுப்பாங்களா ? " இன்னொரு நஞ்சு குரல்.
"நம்ம மேல அக்கறையில பேசுறாங்களா .. இல்ல.. இவங்க படுற துன்பங்களை நாமளும் அனுபவிக்கனுங்கிற ஆசையில பேசுறாங்களா " குழப்பத்தோட இருப்பான் நம்ம தமிழரசன்.
வயது ஆக ஆக பிறர் சொல்வதைக் காட்டிலும், அவன் மனதும் துணையைத் தேடத் தூண்டியது. அந்தத் தேடல் ஆண்டவனின் காதிற்கும் எட்டி பெற்றோரின் ஆசிர்வாதத்தோடு திருமணமும் நடந்தது.
பாரதி. தமிழரசனின் மனைவி. தான் சேகரித்த திறமைகளையெல்லாம் ஒன்று சேர்த்து, புதுமுக இயக்குனர் இயக்கும் முதல் படம் போல, அழகான படைப்பொன்றை படைக்க வேண்டும் என்று நெடுநாள் தவமிருந்து பிரம்மன் வடித்த உயிர்ச்சிலை அவள். பெயருக்கேற்றார் போல அவ்வளவு அழகு.
திருமணம் ஆகி ஒரு மாதத்திலேயே மனைவி பாரதியைக் சிங்கப்பூருக்கு அழைத்து வந்துவிட்டான். இதுவரை தேக்கி வைத்திருந்த காதலையெல்லாம் பாரதி மேல் கொட்டினான். சுவரில் அடித்த பந்தும், மனைவி மேல் காட்டும் அன்பும் வேறெங்கும் செல்லாது. புறப்பட்ட இடத்திற்குத்தான் திரும்ப வரும்.
பாரதியும் தமிழரசன் மேல் கொள்ளை பாசம் வைத்திருந்தாள்.
இருவரும் கைகோர்த்து நடக்கும் நடைபயணம், சிங்கப்பூரின் பசுமையைப் பற்றி பட்டிமண்டபம் வைப்பது, குட்டி இந்தியாவில் கோவிலுக்குச் சென்று விட்டு வெயிலின் கொடுமை தாங்காமல், முஸ்தபா கடையில் எந்தப் பொருளும் வாங்காமலே குளிர் காற்றை அனுபவிப்பது இப்படி ரம்மியமாக போனது அவர்கள் வாழ்க்கை.
அதிலும் தன் வாரிசை பாரதி சுமக்கிற நாளிலிருந்து, அன்போடு அக்கறையும் கலந்து கொண்டு தமிழரசனுக்கு மாதங்கள் உருண்டோடின. பிரசவ மாதம் நெருங்க நெருங்க இருவருக்கும் பயமும் கூடிக்கொண்டே வந்தன. ஆனால் ஒருவருக்கொருவரின் அரவணைப்பும், பேச்சும் இருவருக்குமே நம்பிக்கை தந்தன.
இதோ எதிர்பார்த்த நாளும் வந்துவிட்டது.
"இன்னும் கொஞ்ச நேரத்தில் பிள்ளை பிறந்திடும், சீக்கிரம் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு உன் மனைவிய கூட்டிட்டுப் போ " என்று புக்கிட் பதோக்கிலுள்ள சிறு மருத்துவமனை செவிலித்தாய் தமிழரசனிடம் சொல்லும்போது.
அவளை அவன் ரசிக்காத நிமிடம் இருக்காது. ஆனாலும் செவிலித்தாய் சொல்லும்போது, ரசனை குறைந்து அக்கறையும் கூடவே கவலையும் அதிகமானது. செவிலித்தாயே வாடகை வண்டி பிடித்துக் கொடுத்து வழியனுப்பினாள்.
என்ன வண்டி, யார் ஓட்டுனர் என்று கூட அவன் பார்க்கவில்லை. போகும் இடத்தைக்கூட செவிலித்தாய் ஓட்டுனரிடம் சொல்லிவிட்டாள் போல.அவரும் தமிழரசனைக் கேள்வி கேட்டு தொந்தரவு செய்யவில்லை. வலி தாங்க முடியாமல் பாரதி கண்களை இறுக மூடிக்கொண்டு, ஒரு கையை (பிறக்கப் போகும் தன் குழந்தைக்கு ஆறுதல் சொல்ல) வயிற்றிலும், இன்னொரு கையினால் தமிழரசனின் முழங்கைக்கு மேலே இறுக்கிய போது அவன் இதயமும் சேர்ந்து இறுகியது. எதையோ இழக்கப் போகிறோமோ என்று உள்மனம் சொல்லச் சொல்ல கண்கள் அதை வழிமொழிந்து நீரை கொட்டிக் கொண்டே இருந்தன.
இதையெல்லாம் கவனித்து அவள் இன்னமும் அவன் கையை இறுக்குகிறாள்...ஆனால் இம்முறை அவனுக்கு ஆறுதல் சொல்ல.
விட்டுவிட்டு வலிக்கும் அந்த வினோத வலியின் வீரியம் குறையும் அந்த ஓரிரு நொடிகளிலும்,
"தமிழ்.. பயப்படாத .. இன்னும் கொஞ்ச நேரத்தில பாப்பா வந்துரும், உன்னை பாத்து அப்பான்னு சிரிக்கும்" பாரதி.
"பாப்பா மட்டும் இல்ல ..நீயும் என்ன பாத்து சிரிக்கனும் பாரதி.. கொஞ்ச வலிய பொருத்துக்கம்மா..என்னை மன்னிச்சிடு..இதுக்கெல்லாம் நாந்தானே காரணம்"
உடனே ஒரு சிரிப்பு சிரித்தாள் வலியைத் தாங்கிகொண்டே. மீண்டும் அந்தப்பாழாய்ப் போன வலி அவளை ஆக்கிரமித்துக் கொண்டது.
வண்டி முன்னே செல்ல, சாலையோர மரங்கள் பின்னோக்கி ஓடுவது போல, தன் உடல் வண்டியோடு முன்னே செல்ல,தமிழரசனின் நினைவுகள் மட்டும் பின்னே ஒடியது.
"தமிழ்.. இது தலைப்பிரசவம் .. பாரதியும் சின்ன புள்ள..உன்னால சிங்கப்பூர்ல வச்சு பிரசவம் பாக்க முடியாது" தமிழரசனின் பெற்றோர்.
"ஆமாம் மாப்பிள்ள.. அவங்க சொல்றது சரிதான், இங்கே நாங்க இவ்வளவு பேர் இருக்கோம், பாத்துக்குவோம்.நீங்க அங்க தனியா சிரமப்படனும். இரண்டாவது இது தலைப்பிரசவம், நாங்க பாக்குறது தானே முறை" இது பாரதியின் பெற்றோர்.
"ஆமாடா.. நாளைக்கு ஒன்னுகெடக்க ஒன்னுன்னா நீதான் எல்லோருக்கும் பதில் சொல்லனும்" ராசபக்சேவிடமிருந்து அணுகுண்டை கடன் வாங்கி போட்டாள் அம்மா.
"சொல்றத கேளு... பாரதிய இந்தியாவுக்கு அனுப்பி விடு.. பிரசவ நேரத்துல விடுப்பெடுத்துட்டு வா" அப்பா..
பெற்றவர்கள் அவர்கள் அக்கறையை வார்த்தைகளில் தெளிக்க, அறைக்குள்ளே அவள் கையை பிசைந்து அங்குமிங்கும் நடந்து தமிழரசனை எட்டி எட்டி பார்த்தாள்.
"எப்படி இருந்தாலும் நான் உன்னோடுதான் இருப்பேன். என்னை ஊருக்கு அனுப்பிடாத தமிழ் ...பிரிஞ்சிருந்து கவலைப்பட்டே செத்துருவேன் ..என்னை உங்கூடவே வச்சுக்க தமிழ்" ன்னு சொன்னது அவளோட பார்வை. சொன்னத நிறைவேற்றியும் காட்டுச்சு.
"என்ன நடந்தாலும் நான் பாத்துக்கிறேன். என் பொண்டாட்டிய எப்படி பாத்துக்கிறதுன்னு எனக்குத் தெரியும், நான் பாரதிய சிங்கப்பூர்லேயே வச்சுக்கிறேன், பிரசவம் இங்கேயே பாத்துக்கிறேன்.. இதுதான் என் முடிவு" என்று தமிழ் முடித்து வைக்க, அவனின் நினைவுகளையும் மருத்துவமனைக்கு வந்த வண்டி முடித்து வைத்தது.
தயாரா இருந்த பிரசவ அறைக்குள்ள போனதும்,பாரதிய அந்த படுக்கையில படுக்க வைச்சதும், பச்சப் புள்ள மூக்குல வாயுக்குழாய சொருகினதும்,"என்னால முடியலம்மா" ன்னு அவ கதறுனதும் ..
அம்மம்மா.. முடியல.. இதயத்தை எடுத்து ஓடிட்டு இருக்கிற மின்விசிறிக்குள்ள வச்சா எப்படி இருக்கும்.. அப்படி இருந்துச்சு அந்த நிமிடங்கள் தமிழரசனுக்கு.
தெய்வமா தெரிஞ்ச அந்த மருத்துவர் பாரதிய விட்டுட்டு தமிழரசனுக்கு ஆறுதல் சொன்னதும், கொஞ்சம் கட்டுக்குள்ள வந்து, கண்ண மூடிட்டுத் துடிக்கும் பாரதியின் கைய இறுக்க புடிச்சிக்கிட்டான். பெரியவங்க சொன்னதெல்லாம் அப்பப்ப வந்து போனாலும், அவனும் பாரதியும் ஒன்னா இருந்த நினைவுகளும், பாரதி ஆசையா பேசின பேச்சுகளும் மாறி மாறி மனசுக்குள்ள வந்து மண்வெட்டியா வெட்டுன.
நேரம் நெருங்க நெருங்க மருத்துவர் தன் வேலைய ஆரம்பிக்க, பாரதியின் கைகள் தமிழின் கைகளை இறுக்கிக் கொண்டே வந்தன. அந்த வலிய பொறுத்துக்கொண்டு தமிழரசன் , வெப்பத்திற்காக பாரதியின் கால்களைத் தேய்ப்பதும், தான் வடிக்கும் கண்ணீர் தெரியாமலிருக்க அவள் நெற்றியில் முத்தமிடுவதும் என ஒரு பிரசவ வலியை அனுபவித்துக் கொண்டிருந்தான்.
ஒருமணி நேர போரட்டத்திற்குப் பிறகு, அழகான குழந்தை அம்சமாக வெளியே வந்தது. குழந்தையை தாயின் மடியில் வைத்துவிட்டு அந்த மருத்துவர் அம்மா சொன்னார் "வாழ்த்துக்கள்.. உங்க ரெண்டு பேருக்கும்".
உணர்வை அடக்க முடியாத தமிழரசன் மருத்துவரின் காலில் விழுந்துவிட்டான். " அம்மா.. நீங்க எனக்கு தெய்வம்மா !"
சிரித்துக் கொண்டே சொன்னார் மருத்துவர் " இதில் நான் ஒன்றுமே செய்யல. நீங்க ரெண்டு பேருதான் சுகப்பிரசவத்திற்குக் காரணம். ஒருத்தொருக்கொருத்தர் எவ்வளவு அருமையா உதவி பண்ணிக்கிட்டிங்க. கணவனும் மனைவியும் பிரசவத்தை அனுபவிக்க வேண்டும். அப்பத்தான் தன் துணையோட அருமை மத்தவங்களுக்குப் புரியும். இப்படி ஒரு ஆதரவான துணையை தந்ததுக்கு ஆண்டவனுக்கு இரண்டு பேருமே நன்றி சொல்லுங்க"
ஆம். பாரதியும் தமிழரசனும் தனக்கு இந்த துணையைத் தந்ததற்க்காக ஆண்டவனை வணங்கினார்கள்.கூடவே இன்னொரு துணையும் வாயினில் விரலை வைத்து சிரித்துக்கொண்டே இவர்களுடன் இணைந்தது.
30/11/2013
Comments