நுரை தின்றா பசி தீரும் ?


உரிமை இழந்து நிற்கையிலே - உங்கள்
    உடன்படிக்கை ஒத்துவரு மென்றீர்
பதுங்குகுழியில் பதுங்கிய வேளையிலே - நாங்கள்
    பகட்டுவீடு  கட்டநிதி ஒதுக்கினீர் 
உயிருறுப்பை அவர்கள் நறுக்கையிலே - இருவரையும்
    உக்காந்து பேசிதீர்க்க சொன்னீர் 
கற்பிழந்து எம்பெண்கள் கதறுகையிலே -சூறையாடிய
     காமநாடிகளையே விசாரிக்கச் சொன்னீர் 
பன்னாட்டு விசாரணை தேவையில்லை - இனவழிப்பிற்கு
     உள்நாட்டு விசாரணையே உத்தமமென்றீர் 

அட உலக பதருகளா ..

நுரை தின்றா பசி தீரும் ? ...உங்கள்
சொல் கேட்டா எம்நாடி யடங்கும் ?

வயிற்றுப்பசி தன்னை வைராக்கியத்தால் அடக்கிடுவோம் 
உள்ளப்பசி தன்னை உயிர்நீங்கினும் அடக்கிலோம் 

எங்கள் இதயத்தின் தாகம் .. தமிழீழத் தாயகம் !!

 (மே 2013 கவிமாலையில் பரிசு பெற்றது)

Comments