மூடர் கூடம்
ஏன்தான் திருமணம் செய்து கொண்டோமோ? என்று தோன்றுவது முதல்முறையல்ல.ஒவ்வொரு முறையும் திருமணம் செய்து கொண்டபின் அவனுக்கு தோன்றுவது இதுதான். ஆனால் இந்தமுறை அப்படி தோன்றாது.
காரணம் அவள். அவன் எதிர்பார்த்ததைப் போல அவனை விட அழகு,அவனை விட சற்று குறைவான உயரம், எடுப்பான முகம் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
பலமுறை திருமணம் செய்து கொண்டதால் அவனையும் அவ்வளவு மட்டமாக எடை போட முடியாது. வாட்டசாட்டமான உடல்வாகு, கருணையான பார்வை, அவளுக்கு இணையான அழகு.
திருமண மேடையில்தான் இருவரும் சந்திக்கின்றனர். பல பேர் சுற்றி இருந்தும், அய்யர் முன் இருந்தும் , இருவரின் கண்களும் எந்தக் கள்ளத்தனமும் இல்லாமல் நேரடியாகவே பேசிக்கொள்கின்றன.
"உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு" அவன்.
"பிடிக்காமல் போய்விடுமா என்ன ? " அவள்.
"தைரியமான பெண்தான் நீ"
"பிறகு உங்களைப் போல ஆணை மணக்க தைரியம் வேண்டாமா ?"
தான் ஏற்கனவே திருமணமானவன் என்று தெரிந்துவிட்டதோ என உள்ளுக்குள் குழம்பினாலும் வெளியே காட்டிக் கொள்ளாதா அவன்
"ஏன் அப்படி சொல்ற.. நான் என்ன அவ்வளவு பெரிய முரடனா.."
"பார்றா.. மனசில அப்படியெல்லாம் கற்பனையோ ? என்னதான் முரடனா இருந்தாலும் கல்யாணம் ஆயிட்டா பொட்டிக்குள்ள அடங்கின பாம்புதான் " அவள்.
"வாடி வா.. எங்கிட்ட மாட்டிக்கிட்டீல... யாரு பொட்டிக்குள்ள அடங்குறா .. யாரு விஷத்த கக்குறான்னு நீ பாக்கத்தானே போற ..உன்ன மாதிரி எத்தனை பொண்ணுகள பாத்திருப்பேன்.. நீ எனக்கு அஞ்சாவது பொண்டாட்டி"
மனசுக்குள் முணுமுணுத்தான் அவன்.
"என்னடா மனசுக்குள்ளயா முணுமுணுக்குற.. இன்னயோட உன் கதைய முடிக்கத்தான் உன்ன கல்யாணம் பண்ணிக்கவே சம்மதிச்சேன். பொம்பளன்னா அவ்வளவு இலக்காரமா போச்சா ? என்னதான் சுத்தி இருக்கவுக சொன்னாலும், பல பொண்ணுகள கல்யாணம் பண்ண உனக்கு எப்படிடா மனசு வரும் .. உன்ன மாதிரி ஆம்பிளைகள கல்யாணம் பண்ணி மிதிச்சே கொல்றது தாண்டா என் வேலை .. நீ எனக்கு ஆறாவது ஆம்பள ! " இது அவளின் மனசு.
இருவருமே ஏற்கனவே திருமணம் ஆயிருந்தாலும் ஒருவருக்கொருவர் தெரியாததைப் போல காட்டிக்கொண்டனர்.
அந்த நேரம் ஒரு குரல்.." ஏம்பா .. ராகு காலம் முடியப் போகுது ...பூசாரி என்ன பண்ற ? ..சீக்கிரம் அந்த மஞ்ச தாலிய எடுத்து ஒரு கழுதை கால்ல படுற மாதிரி வைச்சி எடுத்துட்டு இன்னொரு கழுத கழுத்துல கட்டுப்பா..இதே பொழப்பா போச்சு ... உன் பேச்ச கேட்டு மாசா மாசம் இரண்டு கழுதைகளுக்கு ஊரே கூடி கல்யாணம் பண்ணி வைக்கிறோம் .. ஒரு சொட்டு தண்ணி வானத்துல இருந்து வர மாட்டேங்குதய்யா .. உன் தட்டுல தான் காசு நிறையுது .. ஆனா நம்ம ஊரணில தண்ணி நிறைய மாட்டேங்குதய்யா .. ! "
26/11/13
டிசம்பர் மாத சிங்கப்பூர் எழுத்தாளர் கழக கதைக்களத்தில் முதல் பரிசு பெற்றது
Comments