இருளின் ஆட்டம்
மனதில் மண்டிக்கிடப்பதையெல்லாம் யாரிடமாவது கொட்டித்தீர்க்க வேண்டும் போல இருந்தது...கணிப்பொறியை செயலிழக்கச் செய்துவிட்டு அலுவலகத்திலிருந்து கிளம்பும் போது.
இரவு 11:40மணி இருக்கும்.இரவு எனக்குத்தானென்று இருள் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது. ஆனாலும் இருளின் கொட்டத்தை அடக்க ஆங்காங்கே மின்விளக்குகள் தத்தம் திறமைக்கேற்ப ஒளியைக் கொட்டிக்கொண்டிருந்தன.
ஆயர் ராசா தொழிற்பேட்டையிலிருந்து அருகிலுள்ள பெருவிரைவு நிலையத்திற்கு நடந்து செல்ல வேண்டும். அந்த வழியில் மரங்கள் அடர்ந்திருந்து வருவோரையும் போவோரையும் கிளைகளை ஆட்டி இலைகளைத் தூவி ஆசிர்வதிக்கும். ஆனால் அன்று அவ்வழியே நான் நடந்து செல்கையில் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக இருந்தன.. ஒருவேளை காற்றோடு ஊடல் போல. ஒருவேளை மரக்கிளைகள் காற்றோடு கூடியிருந்தாலும் அதை ரசிக்கும் மனநிலையில் நான் இல்லை.
ஐந்தாண்டுகளாக ஒரே நிறுவனத்தில் இருந்தும் ஒருநாள் கூட நான் சோர்வடைந்ததில்லை. உற்பத்தித் துறையில் இருக்கும் பயனாளர்களின் தேவையை மென்பொருளைக் கொண்டு கணிணியில் வடிவமைப்பது என் வேலை. முன்அனுபவம் இருப்பதால் பல நேரங்களில் நானே அவர்கள் தேவையை முன்கூட்டி அறிந்து செய்து முடிப்பேன். அதனால் பயனாளிகளுக்கு என் மீது அதிகளவு நம்பிக்கை. நானும் அவர்களை என் குடும்ப உறுப்பினர்கள் போல நடத்துவேன். சொந்தங்களை விட்டுவிட்டு கடல்தாண்டி வந்து வேலை செய்வோருக்கு அலுவலகத்திலும் அக்கம் பக்கத்தில் இருப்போர் தானே உற்றார்கள் உறவினர்கள். அப்படித்தான் நடத்தினேன் ஒருவாரம் முன்பு எனக்கு உதவியாக வேலைக்குச் சேர்ந்த அவளையும்.
அவள் ப்ரியா. ஒரு வாரத்திலேயே அவளுடைய குணாதிசயங்கள் ஓரளவு தெரிந்தன. தானாக விருப்பப்பட்டு எந்த வேலையும் செய்ய மாட்டாள். பாதி நேரம் தொலைபேசி அழைப்புகள்.. அப்பாவுக்கு பங்கு சந்தை பரிவர்த்தனை நிலவரங்கள், இரவு உணவுக்கு கணவனுக்கு சில கட்டளைகள்..சமூக வலைத்தளங்கள் இப்படியாக அவளது அலுவலக நேரம் கரையும். எனக்கு அதிக வேலைகள் இருந்ததால் சில வேலைகளைப் பகிர அவளை அழைத்தேன்.
"ப்ரியா" என்றேன்
"என்ன?" என்றாள்.
"ஒரு சின்ன வேலை இருக்கு.. உங்களால பண்ண முடியுமா?"
"இப்ப என்னால முடியாது" என்றாள் கணிப்பொறியில் திரைவிமர்சனம் படித்துக்கொண்டு. வந்த கோபத்தைக் கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொண்டு "உங்களால எப்ப பண்ண முடியுமோ, அப்ப செய்து கொடுங்க" என்றேன்.
"சரி..இந்த வேலை யாருக்காக செய்ய வேண்டும்?, யார் இதைச் செய்யச் சொன்னார்கள்" எனக் கேட்டாள். "யாரும் கேக்கவில்லை..ஆனால் திடீரென்று நாம் இதை செய்ய வேண்டியது வரும்..அதனால் இப்பவே செய்து முடிப்பது நல்லது" என்றேன்.
"இந்த மாதிரி வேலையெல்லாம் என்னால் செய்ய முடியாது" என்று முகத்தில் அடித்தாற் போல சொல்லிவிட்டு நேரே என் மேலதிகாரி அறைக்குச் சென்றாள்.
ஒரு அரைமணி நேரம் கழித்து மேலதிகாரி அழைத்த போதே என்ன நடந்திருக்கும் என்று யூகிக்க முடிந்தது. ஆனாலும் மேலதிகாரியிடம் நியாயத்தை எதிர்பார்த்துச் சென்ற எனக்கு ஏமாற்றமும் வலியுமே மிஞ்சியது. பெண் என்றால் பேயும் அடங்கும்... பாவம் மனிதர் அவர் ..அவள் பேச்சுக்கு பதுங்கி என் மீது பாய்ந்தார். என்னைப் பற்றி ஏதேதோ சொல்லியிருக்கிறாள் அந்த நவீன சூர்ப்பனகை !
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட எனக்கு அந்த வார்த்தைகளைதான் தாங்க முடியவில்லை. " பொதுவாக இந்திய ஆண்கள் குறிப்பாக தமிழ் ஆண்கள் பெண்களை அடிமை போல நடத்துவார்கள் என்றும், பெண்களின் வளர்ச்சி அவர்களுக்குப் பிடிக்காது என்றும் அவள் சொன்னதாக அவர் சொன்னதுதான் தூக்கிவாரிப் போட்டது.
எந்நேரமும் பாரதியின் பேரன் எனச் சொல்லிக் கொள்ளும் நானா பெண் வளர்ச்சியில் பொறாமை கொள்வேன் ? யாரிடம் சொல்லி அழுவது ? பிறரிடம் சொல்லி அவர்களும் எனை சந்தேகப்பட்டால் ?
"ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்றுமில்லா
மாக்களுக் கோர்கணமும் - பாரதியே
வாழத் தகுதியுண்டோ ?"
என்று பாரதியிடமே நான் கேட்டுக்கொண்டு நடைபாதையில் நடந்த போது சிகப்பு
விளக்கு பிரகாசமாய் எரிந்து தகுதியில்லை என்றது.
(2013 ஆகஸ்ட் மாத சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக கதைக்களத்தில் இரண்டாம் பரிசு பெற்றது)
Comments