இன்னும் கொஞ்சம்


(பெண் பாலியல் தொழிலாளியாக பாவித்து )

சிகப்பு விளக்கிலே
எரியும் திரி நான்
பரிகள் உழுததில்
தரிசான நன்செய் நான் 

நாதியற்று மட்டுமல்ல
சாதியற்றுத் தவழும்
சமநீதிக் கங்கை நான் 

தேவர்களுக்கு அடியாராய்
அன்றிருந்தேன் 
அடியாட்களுக்குத் தேவதையாய்
மாறிப்போனேன் 

ஊரையே எரித்தவளுக்கு
வைக்கவோ எடுக்கவோ
உண்டு ஒரு சிலை 
மோகத்தீ அணைய
மாதவியாய் எரிகின்றேன் 
யார்தந்தீர் இதுவரை
எனக்கென ஒரு சேலை ?

நானும் மகாத்மாதான் 
அடுத்தவருக்காகவே ஆடை
துறப்பதினால் 

வழிமாறிய தோழிகளின்
விழிதிறக்க வேண்டும் 
விதியென வந்தவர்கட்கு
மதிகொடுக்க வேண்டும் 
அத்தனைக்கும் என்மீது
நிதிபுரள வேண்டும்  - அதனால்

நீளத்தான் வேண்டும்
என் இரவுகள்
இன்னும் கொஞ்சம் 

ஜனவரி 2014 கவிமாலையில் பரிசு பெற்றது

Comments