சூரியன் ஒளிந்தணையும் பெண் நூல் விமர்சனம்



தனிமனித வாழ்க்கையிலும், சமூக வாழ்க்கையிலும் குவிந்து கிடக்கும் உணர்வுகளையும் சம்பவங்களையும், வேறுபட்ட பார்வையில், நன்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு வடித்தக் கவிதைகளைத் தாங்கி, கவிதை நூல்கள் படையெடுக்கும் காலமிது. கொஞ்சம் வித்தியாசமாக, வித்தியாசமான வார்த்தைகளை, சொல்லாடல்களைப் பயன்படுத்தி, சூரியன் ஒளிந்தணையும் பெண்ணைப் படைத்திருக்கிறார் நூலாசிரியர் எம்.கே.குமார்.

136 பக்கங்களில் 94 கவிதைகளைக் கொண்டு உயிர்மை பதிப்பக வெளியீடாக வந்திருக்கின்றது இந்த கவிதைத் தொகுப்பு. ஒவ்வொரு வரிகளிலும் தான் பார்த்த, பழகிய, படித்த மனிதர்களையும் சூழலையும்  புட்டுப்புட்டு  வைத்ததோடு நிற்காமல், தனக்கு மட்டுமே  தெரிந்த, தான் உணர்ந்த தன்னையும் தோலுரித்துக் காட்டுகிறார் ஆசிரியர்.

வட்டார மொழி வாசனை தூக்கலாக மணக்கும் இடங்களில் சமூக சிந்தனை சட்டென்று புகுந்து ஆசிரியரின் கவித்திறமையைச் சொல்லிச் செல்கின்றது. எடுத்துக்காட்டாக முதல் கவிதை பெண்புகல் பரிசு. வட்டாரச் சொற்களில் நாம் மயங்கி கிடக்கையில் கடைசி நாலு வரிகள் சம்மட்டியாய் அடித்துச் செல்கின்றன.

சில இடங்களில் உவமைகள் கொஞ்சம் அதிகப்படியாக இருந்தாலும் எப்படி இப்படி கற்பனை செய்தார் என்றே எண்ணத் தோன்றுகின்றது. 'அம்மாவின் கருத்த உதடுகளின் கண்ணீரில் நிலா மினுமினுக்கின்றது' என்ற வரிகள் மனதை விட்டு நீங்காமல் அடம்பிடிக்கின்றது. அதே நேரத்தில் ஆசனவாயில் ஊற்றப்படும் அமிலக்குழம்பு கொஞ்சம் அருவருப்பைத் தருகின்றது.

"தனக்கான சுதந்திரம் வேண்டி, இருப்பதில் நல்ல சிறையை தேர்ந்தெடுத்துக் கொள்கின்றது பெண்மை" என்ற வரிகள் பெண்மையின் ஏக்கத்தை அதே ஏக்கத்தோடு ஏந்தி வருகின்றது.

"மரக்குதிரையை வெறும் மரக்குதிரை என்றே நினைத்திருந்தேன்..
குதிரையாகும் வரை.. "

அத்தனை தகப்பன்களின் மனதை அழகாய் சுமந்து வருகின்றது.

வாழும் இடமான சிங்கையின் சூழலை சிசிடிவியின் உதவியோடு கண்ணுக்கு கண் கவிதையில் படம் பிடித்திருப்பது அழகு.  இருத்தலின் வலியில் சோகம்..இரத்தலில் ஏக்கம், பாடு கவிதையில் பரிதாபம் என பல்வேறு உணர்வுகள் புத்தகம் முழுதும் விதைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், சில கவிதைகள் சாதாரண வாசகனுக்கு புரியும் வகையில் செதுக்கப்படவில்லையா இல்லை இக்கவிதை நூலினைப் படிக்கும் அளவுக்கு வாசகன் தேர்ந்த அறிவு பெறவில்லையா என்ற குழப்பத்தை தருகின்றது இந்த நூல். அர்தித்தல், ஸ்மரணை போன்ற வார்த்தைகள் மட்டுமல்ல, சில தேவையற்ற வரிகள், நல்ல சிந்தனை வளமுள்ள நூலாசிரியர் அதிநவீனத்தை நோக்கி அதிவேகமாக பயணிக்கின்றாரோ என்ற அச்சத்தைத் தருகின்றது. இரண்டே வரிகளில் ஒரு பக்கத்தை நிரப்புவதும், ஒரு கவிதையை ஒன்பது பக்கங்கள் வரை இழுப்பதும் வாசகனுக்கு அழுப்பைத் தரும் என்பதை ஆசிரியர் அடுத்த படைப்பில் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது இந்த ஆரம்ப நிலை வாசகனின் அன்பு வேண்டுகோள்.


மொத்தத்தில் சில பக்கங்களைத் தவிர்த்து பார்த்தால், மூளைக்கு வேலை கொடுத்து, உணர்வுகளைத் தூண்டிவிட்டு, சில நேரங்களில் உறையவும் விடுகின்றாள் சூரியன் ஒளிந்தணையும் பெண் !



தாயுமானவன் மதிக்குமார்

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு