நானும் கன்னி கழியாதவள்தான்



தலைப்பு : நானும் கன்னி கழியாதவள்தான்
ஆசிரியர் : எம்.சேகர் 

கணவனை இழந்த பெண்ணொருத்தி மனைவியை இழந்த ஆணைத்தான் மணக்க வேண்டுமா? என்ற கேள்விதான் இச்சிறுகதையின் ஒருவரிச் சுருக்கம். பொதுவாக இம்மாதிரியான கதைகளில் கதையின் நாயகி  அனைத்து ஆண்களின் மீதும் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் வெறுப்புக்களை உமிழ்வாள் எனச் சலிப்படையத் துணியும்  நமக்கு பாதி ஆறுதல் இக்கதையின் நாயகி வித்யா ஆண்வர்க்கத்தைச் சீண்டாமல், தன்னை ஏளனம் செய்யும் சமூகத்திற்கு மட்டும் சவுக்கடி கொடுத்தது.

முதலில் இந்த மாதிரிக் கதைகளுக்குப் பொருத்தமான, பழகிப்போன பாரதியின் புரட்சிக் கவிதைகளைச் சொல்லாமல் "பட்டுக் கரு நீலப் புடவைப் பதித்த நல்வயிரம்" கவிதையை நினைவு கூர்ந்த ஆசிரியரைப் பாராட்டியே தீர வேண்டும்,

மகளின் கவலைகளை மனதிற்குள் சுமந்து,செயலிலும் பேச்சிலும் நவீனத்தைக் காட்டும் அப்பா, அப்பாவை நன்கு புரிந்து கொண்ட நவீன மங்கை வித்யா, வித்யாவிற்க்காகப் பரிதாபப்பட்டு வாழ்க்கை கொடுக்கத் துணியும் பிரபு என்ற மூன்று பாத்திரங்களிடையே மட்டும் கதை பயணிக்கின்றது. தன் அம்மா அப்பாவின் மகிழ்வான வாழ்க்கையை நினைத்து ஏங்கும் வித்யாவைப் போல வாசகர்களும் வித்யாவின் அம்மாவின் பங்கோ,உரையாடலோ கதையில் இல்லையே என நினைத்து ஏங்குகின்றோம்.


வித்யாவும் பிரபுவும் பேசிக்கொண்டிருந்த பொழுது "நான் தலைகவிழ்ந்து ஸ்ட்ராவால் ஐஸ் கட்டிகளோடு விளையாடிக் கொண்டிருந்தேன்" ," அவர் சிகரெட் எடுத்து பற்ற வைத்து சிறிய மேகக் கூட்டங்களை உருவாக்கினார்" என்ற வரிகள் தமிழில் இல்லையென்றாலும் கூட காட்சியமைப்பை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றன.

தனக்கு இரண்டாம் தாரமாகவும் , தன் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளவும் திருமணம் செய்ய முயலும் பிரபு, வித்யாவிற்கு வாழ்க்கை கொடுப்பதையும் காரணமாக முன்னிறுத்தும் போது ஆண்மை என்ற போர்வைக்காக ஆண் வாசகர்களையும் வெட்கப்பட வைத்துள்ளார் ஆசிரியர்.

தனக்கு வாழ்க்கைத்தருவதாய் சொன்ன பிரபுவை தியாகியாக நினைத்து தன்னை தியாகப்படுத்திக் கொள்ளாமலும், அதே நேரத்தில் பிரபுவை நோக்கி வசை சொற்கள் வீசி  புதுமைப் பெண்ணாக தன்னை உருவகப்படுத்திக் கொள்ளாமலும்,  இன்னொருத்தி பெற்ற குழந்தைகளை பாத்துக்கொள்ள நான் பக்குவப்படவில்லை எனச் சொல்லி இன்னொரு மாப்பிள்ளை பாருங்கப்பா என்று அடுத்த கட்டத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொள்ளும் வித்யா நாயகித்தனமில்லாத சராசரி பெண்ணாக நம் மனதை ஆக்கிரமிக்கிறாள்,

வித்யா கன்னி கழியாதவள் மட்டுமல்ல.. கண்ணியமும் தவறாதவள். ஆசிரியருக்குப் பாராட்டுக்கள் !

(2014 பிப்ரவரி மாதக் சிங்கப்பூர் எழுத்தாளர் கழகக் கதைக்களத்தில் இரண்டாம் பரிசு பெற்றது )

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு