ஆணின் கருவறை



என் நெஞ்சின் படபடப்பு அடங்க வெகு நேரமாகியது, "இன்னும் கொஞ்ச நேரத்தில் பிள்ளை பிறந்திடும், சீக்கிரம் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு உன் மனைவிய கூட்டிட்டுப் போ " என்று புக்கிட் பதோக்கிலுள்ள சிறு மருத்துவமனை செவிலித்தாய் என்னிடம் சொல்லும்போது.

ரதி..என் மனைவி. தான் சேகரித்த திறமைகளையெல்லாம் ஒன்று சேர்த்து, புதுமுக இயக்குனர் இயக்கும் முதல் படம் போல, அழகான படைப்பொன்றை படைக்க வேண்டும் என்று நெடுநாள் தவமிருந்து பிரம்மன் வடித்த உயிர்ச்சிலை அவள். பெயருக்கேற்றார் போல அவ்வளவு அழகு. அவளை நான் ரசிக்காத நிமிடம் இருக்காது. ஆனாலும் செவிலித்தாய் சொல்லும்போது, ரசனை குறைந்து அக்கறையும் கூடவே கவலையும் அதிகமானது. செவிலித்தாயே வாடகை வண்டி பிடித்துக் கொடுத்து வழியனுப்பினாள்.

என்ன வண்டி, யார் ஓட்டுனர் என்று கூட நான் பார்க்கவில்லை. போகும் இடத்தைக்கூட அவள் ஓட்டுனரிடம் சொல்லிவிட்டாள் போல.அவரும் என்னை கேள்வி கேட்டு தொந்தரவு செய்யவில்லை. வலி தாங்க முடியாமல் ரதி கண்களை இறுக மூடிக்கொண்டு, ஒரு கையை  (பிறக்கப் போகும் தன் குழந்தைக்கு ஆறுதல் சொல்ல) வயிற்றிலும், இன்னொரு கையினால் என் முழங்கைக்கு மேலே இறுக்கிய போது என் இதயமும் சேர்ந்து இறுகியது. எதையோ இழக்கப் போகிறோமோ என்று உள்மனம் சொல்லச் சொல்ல கண்கள் அதை வழிமொழிந்து நீரை கொட்டிக் கொண்டே இருந்தன. 

இதையெல்லாம் கவனித்து அவள் இன்னமும் என் கையை இறுக்குகிறாள்...ஆனால் இம்முறை எனக்கு ஆறுதல் சொல்ல. விட்டுவிட்டு வலிக்கும் அந்த வினோத வலியின் வீரியம் குறையும் அந்த ஓரிரு நொடிகளிலும், 

"மதி.. பயப்படாத .. இன்னும் கொஞ்ச நேரத்தில பாப்பா வந்துரும், உன்னை பாத்து அப்பான்னு சிரிக்கும்" ரதி.

"பாப்பா மட்டும் இல்ல ..நீயும் என்ன பாத்து சிரிக்கனும் ரதி.. கொஞ்ச வலிய பொருத்துக்கம்மா..என்னை மன்னிச்சிடு..இதுக்கெல்லாம் நாந்தானே காரணம்" 

உடனே ஒரு சிரிப்பு சிரித்தாள் வலியைத் தாங்கிகொண்டே. மீண்டும் அந்தப்பாழாய்ப் போன வலி அவளை ஆக்கிரமித்துக் கொண்டது.

வண்டி முன்னே செல்ல, சாலையோர மரங்கள் பின்னோக்கி ஓடுவது போல, என் உடல் வண்டியோடு முன்னே செல்ல,நினைவுகள் மட்டும் பின்னே ஒடியது.

"மதி.. இது தலைப்பிரசவம் .. ரதியும் சின்ன புள்ள..உன்னால சிங்கப்பூர்ல வச்சு பிரசவம் பாக்க முடியாது" என் பெற்றோர்.

"ஆமாம் மாப்பிள்ள.. அவங்க சொல்றது சரிதான், இங்கே நாங்க இவ்வளவு பேர் இருக்கோம், பாத்துக்குவோம்.நீங்க அங்க தனியா சிரமப்படனும். இரண்டாவது இது தலைப்பிரசவம், நாங்க பாக்குறது தானே முறை" இது ரதியின் பெற்றோர்.

"ஆமாடா.. நாளைக்கு ஒன்னுகெடக்க ஒன்னுன்னா நீதான் எல்லோருக்கும் பதில் சொல்லனும்" ராசபக்சேவிடமிருந்து அணுகுண்டை கடன் வாங்கி போட்டாள் அம்மா.

"சொல்றத கேளு... ரதிய இங்க விட்டுட்டுப் போ.. பிரசவ நேரத்துல விடுப்பெடுத்துட்டு வா" அப்பா..

பெற்றவர்கள் அவர்கள் அக்கறையை வார்த்தைகளில் தெளிக்க, அறைக்குள்ளே அவள் கையை பிசைந்து அங்குமிங்கும் நடந்து என்னை எட்டி எட்டி பார்த்தாள். 
"எப்படி இருந்தாலும் நான் உன்னோடுதான் இருப்பேன். என்னை விட்டுட்டு மட்டும் போயிடாத...பிரிஞ்சிருந்து கவலைப்பட்டே செத்துருவேன்  ..என்னை கூட்டிட்டு போயிடு மதி" ன்னு சொன்னது அவளோட பார்வை. சொன்னத நிறைவேற்றியும் காட்டுச்சு.

"என்ன நடந்தாலும் நான் பாத்துக்கிறேன். என் பொண்டாட்டிய எப்படி பாத்துக்கிறதுன்னு எனக்குத் தெரியும், நான் ரதிய சிங்கப்பூர்க்கு கூட்டிட்டுத் தான் போவேன், பிரசவம் நான் அங்கேயே பாத்துக்கிறேன்.. இதுதான் என் முடிவு " என்று நான் முடித்து வைக்க, என் நினைவுகளையும் மருத்துவமனைக்கு வந்த வண்டி முடித்து வைத்தது.

தயார இருந்த பிரசவ அறைக்குள்ள போனதும்,ரதிய அந்த படுக்கையில படுக்க வைச்சதும், பச்சப் புள்ள மூக்குல வாயுக்குழாய சொருகினதும்,"என்னால முடியலம்மா" ன்னு ரதி கதறுனதும் .. 

அம்மம்மா.. முடியல.. இதயத்தை எடுத்து ஓடிட்டு இருக்கிற மின்விசிறிக்குள்ள வச்சா எப்படி இருக்கும்.. அப்படி இருந்துச்சு அந்த நிமிடங்கள்.

தெய்வமா தெரிஞ்ச அந்த மருத்துவர் ரதிய விட்டுட்டு எனக்கு ஆறுதல் சொன்னதும், கொஞ்சம் கட்டுக்குள்ள வந்து, கண்ண மூடிட்டுத் துடிக்கும் ரதியின் கைய இறுக்க புடிச்சிக்கிட்டேன். பெரியவங்க சொன்னதெல்லாம் அப்பப்ப வந்து போனாலும், நானும் ரதியும் ஒன்னா இருந்த நினைவுகளும், ரதி ஆசையா பேசின பேச்சுகளும் மாறி மாறி மனசுக்குள்ள வந்து மண்வெட்டியா வெட்டுன.

கருவறை திறந்து சுமையையும் வலியையும் ரதி இறக்கி வைக்க, "நல்லபடியா என் ரதி எங்கிட்ட வந்துரனும்.. இவ்வளவு துயரத்த அனுபவிச்சவ கண்ணுல இருந்து இனிமே ஒரு சொட்டு கண்ணீர்கூட வராம பாத்துக்கணும், இப்படித்தானே நம்மளயும் பெத்துருக்கும் அம்மா ..பொண்ணுங்க  உண்மையிலே சாமிக்கு மேல " ங்கிற கரு என் கருவறையில வளர ஆரம்பிச்சிடுச்சு.





Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு