மலாயா தமிழர் சரித்திரம்


இறந்தகால நிகழ்வுகளின் தொகுப்பாகவும் மறைந்தவர்களின் புகழ் பாடும் மாலையாகவுமே வரலாற்று நூல்கள் படையெடுத்து வரும் சூழலில் மறைக்கப்பட்ட ஒரு இனத்தின் சோக நிகழ்வுகளையும், தெரிந்தும் தெரியாமலும் அவ்வினம் இழந்தவைகளையும் பட்டியல் போட்டு, கல்வெட்டாய் செதுக்கியுள்ள நூல்தான் "மலாயா தமிழர் சரித்திரம்".

புதுவைப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறையின் துணைப் பேராசிரியரும்,புலம் பெயர்ந்த இந்தியத் தமிழர்கள் குறித்து ஆய்வு நிகழ்த்தியவருமான முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன், இந்த நூலை எழுதவில்லை,வரிக்கு வரி செதுக்கியிருக்கின்றார். ஒவ்வொரு கருத்திலும் உண்மை இருக்க வேண்டும் என்பதற்காக ஆசிரியர் சிந்திய வேர்வையின் மணம் புத்தகத்தின் அத்தனை பக்கங்களிலும் வீசுகின்றது.

மலாயா மண்ணில் ஆண்ட,வாழ்ந்த,வதைக்கப்பட்ட,விதைக்கப்பட்ட தமிழர்களின் சரித்திரத்தை 
1.மலாயா வரலாறு 
2. பிரிட்டிஷ் இந்தியாவும் இந்தியத் தமிழர் குடிபெயர்வும்
3.தோட்டப்புறத் தமிழர் வரலாறு
4.இந்திய விடுதலைப் போராட்டத்தில் மலாயா தமிழர் பங்கு
5.மலைநாட்டுப் பாடல்களும் தமிழ்ப் படைப்புலகமும்
என ஐந்து பகுதிகளாகப் பிரித்து வடித்துள்ளார் ஆசிரியர்.

முதல் பகுதியான மலாயா வரலாறு, மலாயாவின் புவியியல் அமைப்பு,வாழக்கூடிய மக்களின் ஆரம்பகால குடிப்பெயர்வு,மலாயாவை ஆண்ட அரசாட்சிகள் பற்றி சுருக்கமாக,தெளிவாக எடுத்துரைக்கின்றது.தொடர்ந்து விஜய பேரரசு தொடங்கி சோழர்களின் ஆளுமையையும் போர்த்துகீசிய,டச்சு  மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியையும் விவரித்துப் பயணிக்கின்றது. அந்தமான் சிறைக்கைதிகளாக இருந்த மருதுபாண்டியர்களின் பரம்பரையினர்,நாடு கடத்தப்பட்டு பினாங்கு சிங்கப்பூர் பகுதிகளின் கட்டுமானப் பணிகளை நிர்மாணித்த வரிகளைப் படிக்கையில் அதிர்ச்சியும் வேதனையும் நம்மை சூழ்ந்து கொள்ளும். ஆனால்,இது வேதனைகளின் தொடக்கம்தான்.இதயத்தை கிழித்துப் போடும் நிகழ்வுகளை பின்வரும் பகுதிகள் சுமந்து கொண்டிருக்கின்றன என்பது அப்பொழுது புலப்படவில்லை.

இரண்டாம் பகுதியில், இந்தியத் தமிழர்கள் பிற நாடுகளுக்கு குடி பெயர்ந்ததற்கு முக்கிய காரணமாக ஐரோப்பியர்களின் இந்திய ஆதிக்கத்தை மட்டும் சொல்லாமல், இந்தியாவில் நிலவிய சாதிய அடிமைத்தனத்தையும் சொல்லி,ஐரோப்பா அரசாங்கத்திற்க்கு எதிராகத் திரும்பும் நம் மனதை சாட்டையால் அடிக்கின்றார் ஆசிரியர். இந்தியாவில் ஏற்பட்ட பட்டினி சாவுகளையும், உயிருக்காகவும் மானத்திற்காகவும் புலம் பெயர்கையில் நடந்த பயணக் கொடுமைகளையும் படிக்கையில் எப்படி அந்தக் கொடுமைகளிலிருந்து நம் முன்னோர்கள் தப்பினர் என்ற வியப்பும் அடங்குவதற்கு முன் அடுத்தப் பகுதி ஆரம்பிக்கின்றது.

இந்தியாவில் பட்டினி சாவில் செத்திருக்கலாம். முடியவில்லையென்றால் கப்பல் பயணத்தில் கடலில் குதித்தாவது செத்திருக்கலாம் தமிழர்கள் என மனதில் தோன்ற வைக்கும் பகுதி "தோட்டப்புறத் தமிழர் வரலாறு". எவ்வளவு கொடுமைகள் ! நம் கண் முன்னே நடந்த ஈழக் கொடுமைகளுக்கு சவால் விடக் கூடிய பயங்கரக் கொடுமைகள தமிழர்களுக்கு மலாயா தோட்டப்புறத்தில் நிகழ்ந்துள்ளதைப் படிக்கையில் ஆண்ட இனம் மாண்டாவது தொலைத்திருக்கலாம் என எண்ணாமல் இருக்க முடியவில்லை.ஆனாலும் அந்தத் துன்பத்திலும் தமிழர்கள் பத்துமலை முருகன் கோவில் படிக்கட்டுகள் அமைப்பதற்கு தங்களது ஒரு நாள் ஊதியம் 50 காசினை அளித்ததும், விடுமுறை நாள்களில் கோவில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டதும் மெய் சிலிர்க்க வைக்கும் நிகழ்வுகள்.

இந்திய விடுதலைப் போராட்டமும், நேதாஜுயின் வருகையும் ,தொடர்ந்து நடந்த புரட்சிகளும் சோகத்தையே உடுப்பாக கொண்ட மலாயா தமிழர்களை தலை நிமிர வைத்தது போல, வாசகர்களையும் விறுவிறுப்பில் தள்ளுகின்றது நான்காம் பகுதி. இந்திய விடுதலைப் போராட்டத்தில் மலாயாத் தமிழர்களின் பங்கு வரலாற்றில் மறைக்கப்பட்டு விட்டது என ஆதங்கப்படும் ஆசிரியர்,தமிழ் நாட்டுத் தமிழர்களின் அதே ஆதங்கதோடு கலந்து விடுகின்றார்.

உறவிழப்பையும்,உயிரிழைப்பையும், மானமிழப்பையும் பழகிப் போன மலாயத் தமிழர்கள் மொழியை மட்டும் இழக்கத் துணியவில்லை. நாட்டுப்புறப் பாடல்களைப் போல தமது வாழ்வில் நடந்த  சுக துக்கங்களை மலையகப் பாடல்களில் தம் மொழி கொண்டு பதிந்தே வைத்துள்ளதை ஐந்தாம் பகுதி அழகாகச் சொல்லுகின்றது.

 மலாயா தமிழர்களின் மீது நாம் ஏற்கனவே கொண்டுள்ள மதிப்பை பல மடங்கு உயர்த்திக் காட்டுவதுடன், விவரிக்க முடியாத இரத்தப் பாசத்தை நமக்கு ஊட்டிவிட்டுச் செல்கின்றது "மலாயா தமிழர் சரித்திரம்"

20-01-2014

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு