அவல மொழிகள் அளப்பதேன்
பாரதியைத் தேடும் பணியில் தமிழ்மன்றம் - நம்
சனநாயகத்தைத் தேடும் பணியில் நான் .
மன்னராட்சியை மண்ணுக்குள் புதைத்து
மக்களாட்சிக்கு சிகப்பு கம்பளமிட்டு
ஆண்டுகள் பலவாகியும் - இன்னும்
பல சமஸ்தானங்களும் தேவஸ்தானங்களும்
வரி வசூலிக்கத்தான் செய்கின்றன
சில தென்னைகளுள்ள பண்ணைகளும்
மன்னர்களாகி கொண்டிருக்கின்றனர்
பல கிராமங்களில்
இரண்டு தோசைக்காக பெரிய மீசைக்குப்
பயப்படும் பல கறுத்த தசைகளும்
இன்னும் வாழ்ந்து
கொண்டுதான் இருக்கின்றார்கள்
இரட்டை டம்ளர் முறை இன்னும்
ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன
பல கிராமத்துத் தேநீர் கடைகளில்
உரிமைக்காக போராடுது ஒரு கூட்டம்
கௌரவத்திற்காகப் போராடுது மற்றொரு கூட்டம்
தாழ்த்தப்பட்டோர் தீண்டக்கூடாது என்பதற்க்காக
தடைபட்டது தேரோட்டம்.
( தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் கண்டதேவி என்னும் ஊரில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கோவிலில் தலித்துகள் தேர் பிடிக்க மேற்சாதியினர் மறுப்பு -தொடர்ந்து 5 ஆண்டுகளாக தேர்த்திருவிழா ரத்து - தினத்தந்தி )
நீதிமன்றம் தலையிட்டும் நீதி கிடைக்கா
தலித்வாழ் கண்டதேவிகளும்
இருக்கத்தான் செய்கின்றன பாரதத்தில்
பல பட்டுவேட்டிகளின் முன்னால்
ஒட்டியாணமாகத்தான் உள்ளன - நம்மூர்
குப்பனின் சுப்பனின் தோள் துண்டுகள்
இந்திய சனநாயகம் இப்படியிருக்க
இன்னும்
அவல மொழிகள் அளப்பதேன்
பள்ளத்திற்குக் காணிக்கையாக்கினோம்
சிறுவன் தமிழ்மணியை - அன்று
பயங்கரவாதத்திற்கு பலி கொடுத்தோம்
வல்லரசு அமெரிக்காவை இன்று
நாளை...
பயங்கரவாத பள்ளதாக்கு
குண்டுகள் தூவி வரவேற்கும்
இந்தியாவை
பெருகிவரும் சாதிக்கட்சிகள் போல
பயங்கரவாதமும் நம்மை
அடிமைப்படுத்திக் கொண்டிருக்க
கீதாவையும் சுரேஸையும் இணைத்து அளக்கும்
அவல மொழி இனியும் எதற்கு
சாதிக்கலவரம் என்ற பெயரில்
சண்டையை மூட்டும்,
சிலையுடப்பு என்ற பெயரில்
சிந்தையைக் குழப்பும்
கோவில் கட்டுவோம் என்றுகூறி
கோபத்தீயை வளர்க்கும்,
வேலைநிறுத்தம் அறிவித்து
வேதனையைக் கிளப்பும் - தம்
10வது தலைமுறையின் பணத்தேவையை இன்றே
பரிசீலிக்கும் பல முற்போக்கு வாதிகளின்
கையில் இன்று நம் அரசியல் இருக்க,
எம் எல் ஏ வின் ஒன்றுவிட்ட அத்தைக்கு
வந்த நெஞ்சுவலிக்கு
டீக்கடையில் மாநாடு கூட்டி
அவல மொழிகள் அளப்பதேன்
அடுத்த வேளை கஞ்சிக்கு
அன்றாடம் மன்றாடும் வறுமை
அன்றிலிருந்து இன்றுவரை நம்முடன் ஒட்டியிருக்க
அடுத்த வீட்டு அஞ்சலையைப் பற்றி
அவலமொழிகள் அளப்பதேன்
என் உள்ளத்தில் செதுக்கி வைத்த
என் தமிழ்த்தாயை மறந்துகூட
உச்சரிக்க மறுக்கும் மன்னர்களும்
நம் கல்லூரியில் வலம் வரும்
நிலையில் முல்லைத்தமிழ் இருக்க
இன்னும் அவலமொழிகள் அளப்பதேன்
அள்ளி அள்ளிக் கொடுக்க கடன்கள்
பல்லாயிரம்கோடி பாரதத்திற்கு இருக்க
அள்ளி தந்த வானம் படத்தின் நாயகியின்
நல்லிப் பட்டுப் புடவையின் மீது
பல்லி விழுந்ததற்கு
மல்லி வாங்கும் இடத்தில்
பாராளுமன்றக் கூட்டத்தொடர் எதற்கு
பொறுத்தது போதும்
இளைஞனே பொங்கி எழு
சுட்டெரிக்கும் சூரியனாய் புறப்படு
உலகிற்கு ஒளி கொடுக்க மட்டுமல்ல
அவலமொழி அளக்கும் அறிவிலாரை எரிக்க
துஷ்டனைக் கண்டால் தூர விலகு - பழமொழி
அவலமொழி அளப்பவனை அன்பினால் திருத்து
இயலாவிட்டால்
அடக்குமுறையில் வீழ்த்து ! - புதுமொழி
இளைஞனே
அவலமொழி பேசுவதை நிறுத்து
அன்பு மொழி கற்றுக் கொள்
கண்டுபிடித்துவிட்டேன் சனநாயகத்தை
அதோ..
பாராளுமன்றக் கூட்டத்திற்கு அருகில்
பளிங்கு கல்லறையில் தற்காலிகமாக
பள்ளி கொண்டிருக்கும் சன நாயகத்தை
தட்டிஎழுப்ப "RECTIAN" புறப்பட்டு விட்டான் !
நிம்மதி பெருமூச்சில் பேனாவை உறைக்குள்
சிறைப்படுத்தினேன்
11-09-2001 REC யில் நடந்த பாரதி கவிதைப் போட்டியில் படைத்தது. முதல் பரிசும் பெற்றது.
Comments