ஆசை
ஆசை
சொர்க்கத்தின் கதவைத் திறந்து விட்டு, தென்றல் காற்றை இன்னும் குளிரூட்டி, தன் முகத்தில் மட்டும் யாரோ வீசியது போல இருந்தது விமானத்திலிருந்து இறங்கி சாங்கி விமான நிலையத்தில் காலடி வைத்த பில்லப்பனுக்கு.
"அப்பப்பா.. என்ன கட்டிடம்.. என்ன வெளிச்சம் .. எவ்வளவு சுத்தமான தரை.. நம்ம ஊர்ல கீழ இருந்து மேல போறதுக்குத்தான் எஸ்கலேட்டர் ( தானியங்கும் படிக்கட்டு ) வச்சிருப்பாய்ங்க..இங்கே என்னடான்னா கீழே நடக்கிறத்துக்கே வச்சிருக்காங்கலே. அட ..அங்க பாரு.. ஏதோ சின்ன பூங்கா மாதிரி.. மாதிரி என்ன பூங்காவே தான் .. அதுக்குள்ள போய் உக்காரதுக்காக தனியா நாற்காலி .. புகைப்படம் எடுக்கிறதுக்காக தனி இடம்..சனங்க என்ன விருப்பப்படுறாங்களோ அத அப்படியே செஞ்சு வச்சிருக்காங்க.. தரையில தான் சரி ..மேலயுமா இவ்வளவு வடிவம்.....காசக் கொட்டி கொட்டி செலவழிச்சிருக்காங்கப்பா ..ஆமா காசு செலவழிச்சா மட்டும் போதுமா ..அதை ரசிச்சி செஞ்சாத்தானே இவ்வளவு அழகா வரும் .நம்ம ஊர்ல இல்லாத காசா.. சாதாரண கக்கூஸ்(கழிவறை) கட்டுறதுக்குக் கூட ஐம்பது கோடி ஒதுக்குறானுக ..பாவிப்பயலுக அந்த ஐம்பதையும் அவனுக ஒதுக்கிக்கிறானுக .. அதுக்காகத்தான் திட்ட ஒதுக்கீடுன்னே சொல்றானுக போல..முதல்ல திட்ட 'ஒதுக்கீடு''ன்னு சொல்றவனுகள வெளுக்கனும்..கருமம் களவானி பயலுகள இங்க வந்து எதுக்கு நினைக்கனும்.. நல்ல ஊர்ல வேல கொடுத்த குலசாமி பதினெட்டாம்படி கருப்பன நினைச்சு இந்த நாட்டுக்குள்ள நுழைவோம்.. அம்மா அப்பா ஆசைகள நிறைவேத்துவோம்..கருப்பன் தான் கூட இருக்கனும்" இப்படியே தனக்குள்ள பேசிக்கிட்டே விமான நிலையத்துல ஊர்ந்து வந்தான் பில்லப்பன்.
அவசரம் அவனை அவசரமா அழைத்ததால் கழிவறைக்குப் போனான். அங்கே போயும் அவன் ஆச்சரியமும் விடல.. சென்னை மாநகராட்சி பொதுக் கழிவறையோட நினைப்பும் விடல. அடுத்து இமிகிரேசன் (குடிநுழைவு) ..திருச்சி இமிகிரேசன் அதிகாரி படுத்துனபாடும், முதல் முறை வெளி நாட்டுப் பயணமும் சேர்ந்து மனசுக்குள்ள பல பாம்புகள விட்டு கொத்திக்கிட்டே இருந்தன,
'என்ன கேட்பாங்களோ.. திருப்பி அனுப்பிடுவாங்களோ..எதுக்கு திருப்பி அனுப்புவாங்க .. நமக்கிட்டதான் எல்லாம் சரியா இருக்கே .. இருந்தாலும் ஏதாவது காரணம் சொல்லி அனுப்பிடுவாங்களோ..? " இப்படி படபடத்துக்கிட்டே குடி நுழைவு அதிகாரிட்ட போனான் பில்லப்பன்.
சீனாக்கார அம்மாதான் குடி நுழைவு அதிகாரி. இவனை பாத்ததும் "வணக்கம்" னு அழகா தமிழ்ல சொன்னதுல பாதி பயம் போச்சு. சிரிச்சிக்கிட்டே எல்லாத்தயும் சரிபார்த்து முடிச்சுட்டு மறுபடியும் "நன்றி" னு சொன்னதுல மொத்த பயமும் போச்சு. கடவுச்சீட்ட(பாஸ்போர்ட்) பிரிச்சு பார்த்தான். சிங்கப்பூர் சிங்கம் ரெண்டு, சிரிச்சிக்கிட்டே முத்திரையில நின்னு இவன வரவேற்றுச்சு.
"அப்பாடா எவ்வளவு நாள் கனவு.. கடவுச்சீட்டுல ஏதாவது ஒரு வெளி நாட்டு முத்திரை விழாதன்னு எவ்வளவு நாள் ஏங்கிருக்கோம்.. எத்தனை தடவ வெறும் பக்கத்த பிரிச்சி பிரிச்சு பாத்திருக்கோம். வீட்ல அத்தனை பேரோட ஆசை, கஷ்டப்பட்டு சம்பாதிச்சு நான் நல்லா வரனும்னு" ஒருவழியா நிறைவேறுச்சு.
விமானத்தளத்திலிருந்து வெளிய வந்து வாடகை வண்டியில் முகவரியச் சொல்லி, பின் இருக்கையில் அமர்ந்து பின்னாடி சாஞ்ச பில்லப்பனுக்கு நினைப்பும் கொஞ்சம் பின்னோக்கிப் போச்சு.
அம்பத்தூர் வாவின் சந்திப்பு.. அங்க ஃபோர்டு, டொயட்டா வண்டிகளுக்கு சக்கரம் தயாரிக்கிற தொழிற்சாலை. பில்லப்பனுக்கு கல்லூரியில படிக்கும்போதே வேலை கிடைச்சு, அந்த தொழிற்சாலையில தான் வேலை பார்த்துட்டு இருந்தான். இயந்திரத்தப் பத்தி படிச்சவனுக்கு கணிப்பொறி வேலையில இஷ்டமில்ல. அதனாலேயே சம்பளம் குறைவா இருந்தாலும் பரவாயில்லேனு படிச்ச படிப்புக்குத் தகுந்தமாதிரி தொழிற்சாலை தேர்ந்தெடுத்து கல்லூரியிலேயே வேலை வாங்கினான்.
சம்பளம் குறைவா எதிர்பார்த்ததனால அவன் ஒன்னும் பெரிய பணக்கார வீட்டுப்பையன் இல்ல. எவ்வளவு சம்பாதிச்சாலும் அதவிட ஒரு ரூபாயாவது அதிகமா செலவாகிற , செலவு இருக்கிற குடும்பம்தான், வயசான அப்பா கிராமத்துல விவசாயம் பண்ணுறதுக்காக மழைகிட்ட மன்றாடிக்கிட்டு இருக்கிறவர் .ஒத்த ஆம்பிள பிள்ளையும் ரெண்டு பொம்பள பிள்ளையும் பெத்துட்டு மகனுக்கு சுமை வைச்சிட்டோமேன்னு கவலைப்பட்டே உடம்ப கெடுத்துக்கிட்டு மருந்து மாத்திரையால மகனுக்கு சுமை வைக்கிற அம்மா. பாசத்தையும், வீண் வம்பு சண்டையுமே தெரிஞ்ச தங்கச்சி ரெண்டு பேரு. இதுதான் பில்லப்பனோட பின்புலம்.
மாசம் அஞ்சு லட்சம் சம்பாதிக்கிறவன் கூட அப்படி வேலை பார்க்க மாட்டான். நாயா பேயா வேலை பார்ப்பான். உண்மைதாங்க பலதடவை பில்லப்பனோட மானேஜர் கூட கூப்பிட்டு அவன திட்டியிருக்கார்.
"என்ன பில்லா ..படிச்ச பையன் .. என்ஜீனியர் வேற ..இப்படியா அழுக்கா சட்டை போடுறது...?"
"இல்லை சார் ..வீட்டுக்குப் போய் ரெண்டு நாளாச்சு..இனிமேதான் போய் மாத்திட்டு வரணும் சார்"
"அடப்பாவி.. ரெண்டு நாளா வீட்டுக்குப் போகாம கம்பெனியில என்னடா பண்ண ? "
"இல்ல சார்..போர்டுக்கிட்ட இன்னும் ரெண்டு நாள்ல புதுவண்டி சோதனைக்கு சக்கரம் அனுப்புறமுன்னு சொல்லியிருக்கோம். சீக்கிரமே அனுப்பிட்டா நமக்கு கடைசி நேர தலைவலி இருக்காதுல சார்.. அதான் இங்கேயே இருந்துட்டேன்"
"அடப்பாவி .. அதுக்காக இப்படியா..முதல்ல வீட்டுக்கு போய்ட்டு வா" ன்னு சொல்லி அனுப்புன நிகழ்ச்சிகள் பல தடவை நடந்திருக்கு.
முதல் காதலுக்கும் சரி முதல் வேலைக்கும் சரி பசங்க உயிரக்கூட கொடுப்பாங்க. பில்லப்பனும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனா என்ன பில்லப்பனோட குடும்ப நிலைக்கு ஒன்பதாயிரம் ரூபா மாச சம்பளம் பத்தாதுங்கிறதுதான் அவனோட, அவன் குடும்பத்தோட கவலை. மாசத்துக்கு ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை மட்டும் கிராமத்துக்குப் போய் குடும்பத்த பாக்கப்போன இன்னும் கவலை அதிகமாகும்.
"என்னய்யா ..உன் கம்பெனில சம்பளத்தப்பத்தி பேசுனியா ?.கூட்டி தருவாங்களா ? " பில்லப்பனோட அம்மா.
"ஏம்மா.. புள்ள ஒரு நாள்தான் நம்மகூட இருக்க வர்றான். அதுலயும் இதப்பத்திலாம் பேசனுமா ?" அப்பா.
"அட சும்மா இருங்க..எனக்கு மட்டும் ஆசையா என்ன ...எம்புள்ளகிட்ட பணத்தைப்பத்தி பேசனும்னு.. வேற என்ன பண்றது ? அவந்தானே நம்மள சுமக்கிறான். கஷ்டப்பட்டு உழைக்கிறான் அவன் கை நிறைய சம்பாதிக்க வேணாம? அவன் கூட படிச்சபுள்ளயெல்லாம் ஏதோ கம்ப்யூட்டர் வேலை பாத்துட்டு சொந்தக் கார்ல தான் ஊருக்கு வருதுக. இவன் மட்டும் இப்படி இருக்கானே ? ..அய்யா பில்லப்பா.. காருக்காக சொல்லலய்யா..உனக்கும் இனிமேதானேய்யா வேலை வெட்டி நிறையா இருக்கு..தங்கச்சி ரெண்டு பேர படிக்க வைக்கனும். அதுக கல்யாணத்துக்கு ஏதாவது சேக்கனும்.. உனக்கும் கல்யாணம் இருக்கு .. உனக்குன்னு வாழ்க்கை அமையனும்..இதெல்லாம் ஒன்பாதாயிர சம்பளத்தில எப்படிய்யா நடக்கும்? " அம்மாவின் யதார்த்தமான கேள்வி.
"இல்லமா..நான் பாக்குற வேலையில இப்படித்தாம்மா சம்பளம் கிடைக்கும்..ஒரு அஞ்சாறு வருசம் போனா கொஞ்சம் நம்ம எதிர்பாக்கிற சம்பளம் கிடைக்கும்மா " பில்லப்பன்.
"அஞ்சாறு வருசத்துல சம்பளம் எதிர்பார்க்கிற மாதிரி கிடைக்கும்பா.. ஆனா எதிர்பார்க்காத செலவு வரும்பா". படிக்கவில்லைதான் ஆனாலும் ப.சிதம்பரத்தையே (இந்திய நிதி அமைச்சர்) மிஞ்சினாள் அம்மா.
"பாக்குறம்மா.. கம்பெனில கேட்டுப்பாக்குறேன்.. இல்லனா வெளி நாட்டுல நண்பண்ட்ட சொல்லிருக்கேன்..அவனும் எப்படியும் வேலைக்கு ஏற்பாடு செய்றேன்னு சொல்லியிருக்கான். கிடைச்சா கொஞ்ச நாள் போய்ட்டு சம்பாதிச்சிட்டு வரேன் மா. அப்படிப் போனத்தான் நம்ம குடும்பமும் கொஞ்ச மேல வருமா.." மூத்த புள்ளைக்குள்ள பொறுப்போடு பில்லப்பன் பேசி முடிப்பதற்குள் சேலை தலைப்பை வாயில் பொத்தி அழ ஆரம்பித்தாள் அம்மா.
"குடும்பத்த சுமக்கிறதுக்காக கண் காணா தேசத்துக்குப் போறேங்கிறீயே அய்யா..உன்ன மாதிரி புள்ளை கிடைக்க நாங்க என்ன புண்ணியம் பண்ணியிருக்கோம்.. உன் வயசு புள்ளைகல்லாம் எப்படி இருக்குக ..நீ மட்டும் இப்படி ஓடா தேயுறீயேப்பா..." அழுகையுடன் அம்மா சொன்னது அப்பா கண்ணிலும் கண்ணீர வரவழைச்சிடுச்சு.
"சம்பாதிக்கிற வயசுல ஓடியாடி சம்பாதிக்காம குடும்பத்தோட இருக்கனும்,,,புள்ளகுட்டிகளோட சந்தோசமா வர்ற வருமானத்துக்குள்ள குடும்பத்த நடத்தனும்னு நான் நினைச்சி இப்படி இருந்ததுதான் இப்ப உன் கஷ்டத்துக்கு காரணம்யா...அதுக்குத் தகுந்தமாதிரியும் சூழலும் மாறிக்கிச்சு. விவசாயம் படுத்துக்கிச்சு..விலைவாசி ஏறிகிச்சு.. இந்த நிலைல ஒரு கூலி வேலைக்காவது நான் போயிருக்கனும்.உன்ன ரொம்ப கஷ்டப்படுத்திறேன்யா " ன்னு சொல்லிட்டு அப்பாவும் அழுதவுடன் பில்லப்பனின் கண்களிலும் தாரை தாரையா கண்ணீர் வந்தது.
அம்மா பொத்திப் பொத்தி அழுவதைக்கூட தாங்கிக் கொள்ளும் ஆண்பிள்ளைகள் அப்பாவின் கண்களில் ஒரு சொட்டு நீர் வடிவதை தாங்கிக் கொள்ள மாட்டார்கள். தினசரி கோவிலில் நடக்கும் ஆறுகால பூசைக்கும், வருடத்திற்கொருமுறை நடக்கும் திருவிழாக்குமான வித்தியாசம் அது.
அவசரமாய் கண்களை துடைத்தபடி பில்லப்பன், " அப்பா.. எதுக்கு அழுகுறீங்க, நீங்க என்ன சும்மாவ இருந்தீங்க.. என்ன இந்த அளவு படிக்க வைச்சிருக்கீங்க.. உங்களோட முதலீடே நான் தான். புள்ளைக்கு மீச முளைக்கிற வரைக்கும் பாத்துக்கிறது பெத்தவங்க கடமை.. மீசை முளைச்ச பின்னாடி பெத்தவங்கள உக்கார வைச்சு பாத்துக்கிறது பிள்ளைகளோட கடமை..இப்ப என்னப்பா வெளி நாடுதானே போய் வேல பாக்கப் போறேன்னு சொன்னேன். நம்ம குடும்பத்துக்குக்காகத் தானே போறேன்..நாமளும் நாலு பேர் முன்னாடி தலை நிமிர்ந்து வாழனும்ல..மனுசங்கள விட பணத்துக்குத்தானே இன்னைக்கு அதிக மதிப்பு..ஏம்மா.. நம்ம குமரேச மாமா பாருங்க.. அவரு பொண்ணு கல்யாணப் பத்திரிக்கைல அப்பா பேர தாய்மாமன்னு போட்டுருக்கணும்ல...நம்மகிட்ட பணம் இல்லங்கிறதுனாலதானே அப்பா பேர போடல..இவங்க முன்னாடியெல்லாம் நம்ம வாழ்ந்துகாட்டனும்மா...நான் முடிவு பண்ணிட்டேம்மா..எப்படியாவது வெளி நாட்டுல போய் சம்பாதிச்சி நல்லா வரணும்மா".
அன்று பில்லப்பன் எடுத்த அந்த முடிவுதான் அவனை சிங்கப்பூரில் இன்று நிறுத்தியிருக்கின்றது. சாங்கியில் கிளம்பிய வாடகை வண்டியும் புக்கிட் பதோக்கில் உள்ள அவன் நண்பன் முகவரியில் நின்றுவிட்டது.
வண்டியை விட்டு இறங்கி அடுக்குமாடி வீட்டைப் பாத்த பில்லப்பனுக்கு மீண்டும் ஆச்சர்யம் தொற்றிவிட்டது. ஒரு மாடியாவது வைச்சு ஊர்ல வீடு கட்டிடனும்..மனசுக்குள் மறுபடியும் ஒரு கொள்கை முழக்கம்.
காத்திருந்த நண்பன், "மாப்ள.. எப்படிடா இருக்க ...மன்னிச்சிடுடா..ஒரு முக்கியமான வேலை இருந்துச்சு, அதான் உன்ன கூட்டிட்டு வர ஏர்போட்டுக்கு வரமுடியல".
"இதுல என்ன இருக்கு மச்சி..நான் இங்க வர்றதுக்கே நீதான் காரணம்..மறக்க மாட்டேன் மச்சி.. என் வாழ்க்கையில எப்பவுமே உன்ன மறக்க மாட்டேன் மச்சி..தேங்க்ஸ் டா" சம்பிரதாயத்துக்குச் சொல்லவில்லை...மனசின் அடியிலிருந்து சொன்னான் பில்லப்பன்.
"பாருடா,,டைரக்டர் விக்கிரமன் ரொம்ப நாளா படம் எடுக்கல.. அதுக்கு பதிலா நீ சென்டி போட வந்துட்டியா?..ஃப்ரீயா விடு மச்சி. ஆமா உன் ஆளு எப்படி இருக்கு? " நண்பன்.
நன்றிங்கிற வார்த்தையைக்கூட எதிர்பார்க்காமல் வாழும் நட்பு வட்டத்தில்தான் பூமிகூட சுழன்று கொண்டிருக்கின்றது.
நண்பனின் நலவிசாரிப்புகளும், பில்லப்பனின் சிங்கப்பூர் ஆச்சரியங்களும் கலந்த உரைநடையாடல் நண்பன் வாழும் பதினான்காவது தளத்திலுள்ள அறை வரைக்கும் தொடர்ந்து, பிறகு அறையில் ஏற்கனவே தங்கியிருப்பவர்களிடம் அறிமுகப்படலம் வரை சென்றது.
"என்ன பாஸ்.. அறிமுகமெல்லாம் ஓ.கே...டியூட்டி ஃப்ரீல சரக்கு வாங்கிட்டு வந்தீங்களா?" காரியத்தில் கண்ணாயிருக்கும் அறை நண்பன்.
"வாங்கிட்டு வராம இருப்பனா பாஸ்..இவன் தான் ஏற்கனவே சொல்லிட்டானே..அம்மா கையால பண்ண முறுக்கும், டியூட்டி ஃப்ரீல வாங்கின சிவாஸ் சரக்கும் இல்லாம சிங்கப்பூர்க்கு வந்துராதன்னு " பில்லப்பன்.
"பின்ன ..நீ சரியான பழம்..படிக்கும்போதே சரக்க தொட மாட்ட ..சென்னையில இருக்கும்போதும் அடிக்க மாட்ட.. சரக்கடிக்காதவனுக்கு ஓட்டுப் போட உரிமை இல்லைன்னு சட்டம் கொண்டு வந்தாக்கூட ஓட்டுப் போடாமத்தான் இருப்ப" பில்லப்பனின் நண்பன்.
"டேய் விடுறா.. இன்னைக்கு அடிக்கிறேன் டா மச்சி.. என் நண்பன் கூட சேர்ந்து அடிக்கிறேன் டா..போதுமா" பில்லப்பன். பில்லப்பனுக்கும் ரொம்ப நாள் ஆசை.. "ஒருதடவை குடிச்சித்தான் பாக்கனும்.எல்லாரும் நம்மள கிண்டல் பண்றானுக.இவ்வளவு நாள் கஷ்டப்பட்டோம்.. இனிமே நமக்கென்ன கவலை..வாழ்க்கைய அனுபவிப்போம்..இன்னைக்கு ஒரு நாள் குடிச்சி முடிச்சிடுவோம். நாளைல இருந்து பொருப்பா இருப்போம்" இது பில்லப்பனோட மனசாட்சி.
"வெயிட் மச்சி..சரி.. போய் குளிச்சிட்டுவா..ஆரம்பிப்போம்"
ஆரம்பித்தது சொர்க்கவாசல் திறப்பு மறுபடியும் கொஞ்ச நேரத்துக்குப் பிறகு..
"மச்சி.. கொஞ்சமா ஊத்துடா.. இன்னைக்கு ரொம்ப சந்தோசமா இருக்கேன்டா.. வாழ்க்கையில என்னோட பல நாள் ஆசைய நிறைவேற்றிட்ட மச்சி..என்னயும் சிங்கப்பூருக்கு வரவழைச்சு எங்க குடும்பத்தோட கனவ நனவாக்கிட்ட மச்சி" என்று மூக்கைப் பிடித்து குடிக்க ஆரம்பித்தவன் கொக்ககோலா (COKE COLA) உதவியால அஞ்சாம் சுற்று வரைக்கும் வந்துட்டான் பில்லப்பன்.
"மச்சி..வீட்டுக்கு பேசிட்டு வரேன் டா" தொலைபேசிய எடுத்திட்டு எந்திரிச்சு வெளிய வந்தவனுக்கு , "டேய் ..சரக்கடிச்சுட்டு ஊருக்கு பேசினா சண்டைதான் வரும் ..நாளைக்கு பேசிக்கலாமுன்னு நண்பன் சொன்னதெல்லாம் கேக்கல.
"கோடானு கோடி அதில் குளிப்போம் விளையாடி" ன்னு உற்சாகமா பாடி வந்த பில்லப்பனுக்குத் தான் இருக்கிறது பதினாலாவது மாடின்னு தெரியல.. போதை அதிகமான அந்த ஒரு நிமிடம்தான் ..தலை சுத்தி கால் தடுமாறி மாடியில இருந்து தலைகுப்புற சாய்ந்தான் பில்லப்பன் "அம்மாஆஆன்னு" கத்திக்கிட்டே..
சத்தம் குறைஞ்சது ..சிதறின தலையில இருந்து ரத்தம் பெருகுச்சு..
பல வருட இரும்புக் கனவுகளையும் நோக்கங்களையும் அடியோட தகர்க்கிற ஆற்றல், ஒரிரு நொடில ஏற்படுற சின்னச் சின்ன ஆசைகளுக்கு இருக்கு.
Comments