வானவில்



கமலாவின் கண்களை நேருக்குநேர் சந்திக்கத் தைரியமில்லாமல் தலையைக் குனிந்து கொண்டான் சேகர். குனிந்த தலையைப் பார்த்து சந்தேகப்பட்டு எதுவும் சொல்லாமல் முன்பக்கம் திரும்பிக் கொண்டாள் கமலா.

புக்கிட் பதோக்கிலுள்ள கெமிங் தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தார்கள் கமலாவும் சேகரும். சேகரைவிட கொஞ்சம் உயரம் குறைவாக இருந்ததால் கமலா சேகருக்கு  முன்வரிசையில்  அமர்ந்திருப்பாள். சேகருக்கு கடைசி வரிசைதான்.

சேகர் என்று சொன்னால் பள்ளியில் யாருக்கும் தெரியாது.சேட்டை சேகருன்னு சொன்னாதான் எல்லோருக்கும் தெரியும். அந்த அளவுக்கு பையன் குறும்புக்காரன். மரத்தைப் பார்த்த குரங்கும் காகிதத்தைப் பார்த்த கழுதையும் சும்மாவா இருக்கும். அதுமாதிரிதான் முன்னாடி வரிசையில பொண்ணு இருந்தா சும்மாவா இருப்பான் சேகரு, ஏதாவது கேலி, கிண்டல் பண்ணிகிட்டுதான் இருப்பான்.

அன்றைக்கு அப்படித்தான்.வகுப்பாசிரியர் வராததால் கமலா ஏதோ எழுதிகிட்டு இருந்தாள். பின்னாடி இருந்த சேகரு பேனாவ வச்சு கமலா முதுகில குத்துறது, கமலா திரும்பும் போது தலைய குனிஞ்சிக்கிறது இப்படியே பண்ணிகிட்டு இருந்தான்.முதல் தடவை தெரியாம நடந்திருக்குமுன்னு கமலா திரும்பிக் கொண்டாள்.இரண்டாம் தடவை பின்னாடி இருந்த இன்னோரு பையன் சேகருன்னு சைகை காண்பித்து அவன் நல்லவனா மாறிகிட்டான். தலைய குனிஞ்சு இருந்த சேகரு நிமிர்ந்து அடுத்த தடவை குத்துறதுக்காக பேனாவ பின்னாடி கொண்டு போனப்ப எதிர்ப்பார்த்ததைப் போல கமலா சட்டுன்னு திரும்பி கையும் களவுமா பிடிச்சிட்டாள்.

"ஏண்டா பேனாவ வச்சு குத்துற? " கமலா

"குத்துறதுக்கு வேற ஒண்ணுமில்ல..அதனாலதான் " சேகர்

"கொழுப்பாடா உனக்கு..ஏன் வீட்டுல இருந்து கத்தி எடுத்துட்டுவந்து குத்த வேண்டியதுதானே..மூஞ்சியும் முகரையும் பாரு " கமலா.

"எங்கப்பாதான் சொன்னாரு..பேனா முனை கத்திக்குச் சமமுன்னு" சேகர். சேகரோட அப்பா ஒரு எழுத்தாளர்.அந்தப் பரம்பரைத் திமிருதான் சின்ன புள்ள சேகர் பேச்சுலயும் இருந்தது.

"இரு எங்கப்பாகிட்ட சொல்லிக்கொடுக்கிறேன். உன்னையும் உங்கப்பாவையும் ஒருவழி பண்ணச் சொல்லுறேன் " அவள்.

"இங்க பாரு.எங்கப்பா யாரு தெரியுமா.. சிங்கப்பூர்லேயே பெரிய எழுத்தாளர். எல்லா அமைச்சரோடயும் நின்னு புகைப்படம் எடுத்துருக்கிறாரு..எத்தனை தடவை வசந்தத்தில வந்திருக்காரு தெரியுமா ? சிங்கப்பூர்ல எல்லாரோட வீட்டுலயும் எங்கப்பா தெரிவாரு" அவன்.

"தொலைக்காட்சியில வந்துட்டா பெரிய இவரா ? எங்க வீட்டுல தொலைக்காட்சியே போட மாட்டோம்..உங்கப்பா எங்க வீட்டுல தெரியவே இல்லை.. அதனால எங்கப்பா தான் பெரியாளு." வெள்ளந்தியான கமலா.

"சாயங்காலம் பள்ளிக்கூடத்துக்கு எங்கப்பா வருவாரு..அப்ப பாரு ..எங்கப்பாதான் பெரியாளுன்னு தெரியும்" சேகர்.

"எங்கப்பாவும் தான் வருவாரு..பாப்போம்..வவ்வவவே " என வாயினாலும் மனசினாலும் வசை பாடிட்டு இன்னொரு இருக்கைக்குச் சென்றாள் கமலா.

நேரமும் கடந்து பள்ளியும் முடிந்துவிட்டது. மற்ற பிள்ளைகளும் தங்கள் பெற்றோருடனோ பணிப்பெண்களுடனோ வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தன. கமலாவும் சேகரும் மட்டும் பெற்றோருக்காக காத்துக் கொண்டிருந்தனர்.
நேரமும் ஓடியது.காலையில் போட்ட சபதமும் ஞாபகத்துக்கு வந்துகிட்டே இருந்தது. ஆனால் இரண்டு அப்பாக்களும் வந்தபாடில்லை.பொறுமையிழந்த இருபிள்ளைகளும் தனியே நடக்க ஆரம்பித்தன.ஒருத்தருக்கொருத்தர் பேசாம முகத்த மட்டும் மாறி மாறி பாத்துகிட்டே சென்றன.

கொஞ்ச நேரம் கழித்து கமலா ஆரம்பித்தாள்

"இன்னைக்கு வசந்தத்தில உங்கப்பா வருவாரா சேகரு ? "

சேகர் பதிலுக்கு "இனிமே எங்க வீட்டுல தொலைக்காட்சியே போடமாட்டோம்" ன்னு சொல்லி கமலாவின் அருகில் வந்து கையைப் பிடித்தான்,

கொஞ்ச நேரம் வந்தாலும் அழகாக இருக்கும் வானவில்லைப் போன்றதுதான் சிறுபிள்ளைகளின் சண்டையும்.

(09-02-2014 சிங்கப்பூர் எழுத்தாளர் கழக கதைக்களத்தில் மூன்றாம் பரிசு பெற்றது )

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு