காவல்
விற்பனைக்காக துகிலுரிக்கப்பட்டு
விலைமாதர்களாக வீட்டுப்பெண்கள்.
சதுர அடி விற்பனையில்
சமாதியான விளைநிலங்கள்
ஆவின்பால் ஆக்கிரமிப்பால்
அழிக்கப்பட்ட வீட்டுத்தொழுவங்கள்
பதப்படுத்திய பாலின் ராசியால்
மறந்துபோன சீம்பால் ருசி
பாதாளத்தில் பல்லாங்குழி
மாயமான தாயம்
உருக்குலைந்த ஊரணி
கட்டடங்களான கண்மாய்
வாழ்விழந்த வறட்டி
கற்பிழந்த கம்பங்கூழ்
குலைந்த கூட்டாஞ்சோறு
அழகிழந்த அம்மிக்கல்
ஆவியான ஆட்டுக்கல்
கிராமங்களில் தொலைந்த
கிராமியம் !
காணாமல் போன கிராமங்களை
கண்டுபிடிக்க முடியாமல்
கவலையோடு நிற்கின்றன
காவல் தெய்வங்கள்
30-11-2013
நவம்பர் 2013 மாத கவிமாலையில் பரிசு பெற்றது.
திண்ணையில் இடம்பெற்றது
http://puthu.thinnai.com/?p=25690
Comments