சிறுகதை விமர்சனம் - மூன்றாவது மனம்
சிறுகதை : மூன்றாவது மனம்
ஆசிரியர் : திரு.பிச்சினிக்காடு இளங்கோ
விமர்சனம் :
சில ஆண்டுகளுக்கு முன் வந்த ஒரு திரைப்பட பாடலில் உள்ள "ஆடு மாடு மேலே உள்ள பாசம்,வீட்டு ரேசன் கார்டில் சேர்க்க சொல்லி கேட்கும்.வெறும் தண்ணி கேட்டா மோரு தரும் நேசம்,வெள்ளந்தி மனிதர்கள் வாசம் மண்ணெங்கும் வீசும்" என்ற அழகான வரிகள், கிராமத்து வாழ்வியலை இருவரிகளில் சொல்லி மனதில் குளிர்ச்சியை விதைத்துச் சென்றன. பாடல் ஏற்படுத்திய அதே நினைவு அலைகளை, இச்சிறுகதையின் ஒவ்வொரு வரிகளிலும் தென்றலோடு கலந்து மனம் என்னும் கரையில் ஓயாமல் மோதவிட்ட ஆசிரியரை பாரட்டுவது தான் இவ்விமர்சனத்தின் பிள்ளையார் சுழி.
ஆம்! ஒரு வெள்ளந்தி தங்கத்தின் ( தங்கம் ஆத்தாவின் ) மனம்தான் இச்சிறுகதையின் கரு.அடுக்குமாடி வீட்டில் வசிக்கும் தன் மனைவி அடுத்த வீட்டுக்காரரிடம் பேசக்கூடாதென்று மனைவியோடு வீட்டைப் பூட்டி, அலுவலகத்துக்குச் செல்லும் நாகரீக நகர கோமாளிகள் சொல்வார்கள் "பெண்ணடிமை தலைவிரித்தாடுவது கிராமங்களில்தான் என்று" ! . பாவம்.. அவர்களோடு வாழ்பவர்கள் என்பதைத் தவிர வேறென்ன நினைக்க முடியும் ?
தைரியமும், தன்னம்பிக்கையும், ஆண்களிடம் உரிமையோடும் ஒருமையோடும் பேசும் சுதந்திரமும் கிராமத்து பெண்களிடம் தான் இன்னும் அதிகளவில் இருக்கின்றன. அப்படிப்பட்ட பெண்ணை, கதையின் ஆசிரியர் தங்கம் ஆத்தாவின் வழி நமக்கு வார்த்தைகளில் காண்பித்து, வாழ்க்கையில் கரம் பிடித்திருக்கின்றார். உண்மைக் கதை என்று ஒத்துக்கொண்டு என் உள்ளத்தில் ஒருபடி உயருகின்றார்.
நம்ம கதையை பிள்ளைகள்ட்ட சொல்லி கஷ்டப்படுத்தாதீங்க என்ற தாயுள்ளத்திலும், கணவனின் மனைவியை தாயாக நினைத்து பணிவிடை செய்யும் பாங்கிலும், வேலை செஞ்சா வீடும் உடம்பும் நல்லா இருக்கும்னு நினைக்கிற சுறுசுறுப்பான மனசிலும், வெளியூரில் வசிக்கும் தன் கணவனின் பொறுப்பில் பிள்ளைகளை வளர்க்கும் தந்தைத் தன்மையிலும், எல்லாவற்றிற்க்கும் மேலாக தான் வளர்த்த பசுவ ,தான் சுமந்த சிசுவா நினைக்கும் அந்த வெள்ளந்திதனத்திலும், தங்க ஆத்தா வைரமாய் மின்னுகிறாள்.
பச்ச கன்னுக்குட்டிய கொன்னுட்ட மருத்துவர ஆத்தாவோட, வாசகர்களும் சேர்ந்து திட்ட வைத்தது ஆசிரியரோட திறமை. பிள்ளைகளை பிரிஞ்சு வாழ்ந்த தந்தையின் மனக்குமுறலும், கன்னுக்குட்டியை ஈன்றுட்டு சாகும் கருப்புபசுவோட நினைப்பும் ஒன்றென காட்டி, குடும்பத்த பிரிஞ்சு வாழும் ஆண்களின் உவமையாகத் உருவெடுக்கிறார் ஆசிரியர்.
வரிகளில் கவிநுட்பமும், சொல்லாடலையும் காட்டிய ஆசிரியர், சிற்றிதழ் ஆசிரியர் சந்திரனையும்,பகலில் பயணித்த பல்லவனையும் ஏன் கதையில் சொருகினார் எனத் தெரியவில்லை. கதைத் தொடக்கத்தில் நாயகனை "அவன்" என்று படர்க்கையில் விளித்து , பின் "நான்" என்ற தன்மையில் எழுதி, முன்னுரைக்கும் கதைத் தொடர்ச்சிக்கும் தொடர்பை அறுத்து விட்டு என்னைப் போன்ற அறிமுக வாசகர்களை குழம்ப வைத்த பெருமையும் ஆசிரியரையேச் சாரும்.
நகரத்தில் வாழ்பவர்கள் மட்டும் அல்ல; அம்மி, உரல், ஆட்டுக்கல் போல தன்னுடைய ஒவ்வொரு உடையையும் தொலைத்துக் கொண்டிருக்கும் இன்றைய கிராமத்தில் வாழும் அத்தனை பேரும் படிக்க வேண்டிய கதை. தன்னுடைய அனுபவங்களை தொகுத்து நூலாக நமக்குத் தர வேண்டும் என்பதே ஆசிரியருக்கு என்னுடைய வேண்டுகோள். !
Comments