தொலைதலும் தேடலும்


ஆசிரியர் : எம். சேகர்
கதைச் சுருக்கம் : தன் மனைவியுடனும் பெண் குழந்தையுடனும் சீனத்தோட்டத்தில் பொழுதுபோக்கும் கதாசிரியர், அங்குள்ள ஒரு செயற்கைக்குளத்தில் தெரியும் தன் பிம்பத்தைக் கண்டு தான் தொலைத்த காலத்தையும்  தன்னையும் தேடுகின்றார்.

சிறுகதை விமர்சனம்:
கடலின் அளவை அளந்துவிடலாம். ஆனால் தமிழின் அளவு அளப்பது கடினம். அத்தனை சொற்கள். அத்தனை அர்த்தங்கள். பல சொற்களைச் சேர்த்து ஒரு அழகிய சொற்றொடரை அமைப்பது எவ்வளவு கடினம் என்பது நான் கவிதை எழுத ஆரம்பித்த  போதுதான் தெரிந்தது. ஆறேழு வரிகளில் நான் முடித்துவிடும் கவிதைக்கே அந்த நிலை என்றால் சிறுகதை அல்லது தொடர் எழுதுவது எவ்வளவு கடினம் ?

ஆனால் இந்த சிறுகதை என்பது எனக்குக் கதையாகத் தோணவில்லை. ஒரு பெரிய கவிதையை உரை நடையில் எழுதி, காவிரியை கமண்டலத்தில் அடைத்த அகத்தியராக ஆசிரியர் தெரிகின்றார்.அந்தி வானத்தை தாவணியாக ஒப்பிட்டு ஆரம்பத்திலேயே அசத்துகிறார்.

கொக்குகளையும் மைனாவையும் அணிலையும் செயற்கைகுளத்தையும் எடுத்துரைக்கும் காட்சியமைப்பு நம்மை கல்கியின் தாமரைக்குளத்திற்கு கொண்டு செல்கின்றது. ஆனால் இம்முறை சீனத்தோட்டத்தில் இன்றைய கால கட்டத்திற்கேற்ப ஆசிரியரின் அழகு கற்பனையில் மாறி நிற்கின்றது.

தான் தொலைத்துவிட்ட தன்னை, தன் இளமைப் பருவத்தை குளத்தினுள் காணும் தன் பிம்பத்தின் மூலம் அறிந்து ஆசிரியர் படும் வேதனை நம்மையும் பிடித்துக்கொண்டு சிந்திக்கவும் வைக்கின்றது. அகவை எத்தனை சென்றாலும் கடந்து வந்த காலங்கள் நமக்கு கிடைத்துவிடுமா ? இன்று காலை வீணடித்த அந்த ஒரு வினாடிகூட தலைகீழ் நின்றாலும் மீண்டும் வந்திடுமா ?

பொதுவாக ஆண்களுக்கு பெண் பிள்ளைகள் என்ன செய்தாலும் பிடிக்கும் .மனைவி என்ன செய்தாலும் பிடிக்காது. ஆனாலும் தன் தனிமையைக் கலைத்த தன் மகளைச் சாடி ,தனிமைக்கு உதவிய மனைவியைப் பாராட்டி கொஞ்சம் வித்தியாசப்பட்டு நிற்கின்றார் கதையின் நாயகன் , நம் ஆசிரியர்.

குளத்தில் தடுமாறி விழ நேர்ந்ததைப் போல தான் நோய்வாய்ப்பட்டதைச் சொல்லி கதையோட்டத்திலும் கொஞ்சம் தடுமாறுகின்றார் ஆசிரியர். அந்தச் சூழலை எடுத்துரைப்பதற்குப் பதிலாக தான் காலத்தை வீணடித்ததற்கு ஏதேனும் சம்பவம் சொல்லி அந்த கருத்துக்கு வலிமை சேர்த்திருக்கலாம்.

இன்றைய சிறுகதைகள் கூட வருங்காலத்தில் இலக்கியமாக உருவெடுக்கலாம்.  வரும் தலைமுறை அவற்றை படித்து இதுதான் தமிழ், இவைதான் தமிழ்ச் சொற்கள் என்று நினைக்கும் சூழல் இருப்பதால் ஆங்கிலச் சொற்கள், ஆங்கில வார்த்தையை அப்படியே தமிழில் எழுதும் தமிங்கிலம் போன்றவற்றை நாம் தவிர்ப்பது நமது மொழிக்கு நாம் செய்யும் நன்றிக்கடனாகும். அந்த வகையில் ஆசிரியர் Chinesh Garden, Orange, Camera lens , MRT போன்ற சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தியிருக்கலாம்.

அதே நேரத்தில், சிறுகதையின் கதையோட்டத்தில் திருக்குறளைக் கொண்டு வந்தது பாராட்டுக்குரியது.

கடந்த காலத்தைப் நினைத்து கவலைப்படுவதை விட்டு, வருங்காலத்தைத் திட்டமிடுவதை நிறுத்தி, நிகழ் காலத்தை இன்பமாக வாழுங்கள் என்று ஆசிரியர் என்னைப் போன்றவர்களுக்கு சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

இருப்பினும் நீருக்குள் நம் முகத்தை இனிப் பார்க்கையில் நாம் நம்மைத் தேடுவதோடு இந்த கதாசிரியரையும் நம் மனக்கண்ணில் நினைப்போம் என்பது திண்ணம்.
நன்றி!
(ஆகஸ்ட் 2013 சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்க கதைக்களத்தில் விமர்சனத்திற்கு இரண்டாம் இடம் கிடைத்தது)

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு