செல்வி
நான் அவளை என் நினைவுகளிலிருந்து மெல்ல அகற்றிக்கொண்டேன்.அவளை நினைத்தால் அப்பா அம்மாவை வெறுக்கத் தோணும்.
செல்வியை முதன் முதல்ல வீட்டுக்கு கூட்டி வந்தப்பவே பிரச்சினை ஆரம்பிச்சிடுச்சி. கதவைத் திறந்து எங்க இரண்டு பேரையும் ஒண்ணாப் பாத்த அம்மாவுக்கு பேரதர்ச்சி. அதிர்ச்சியை சேர்த்து வச்சு அம்மா முழிச்ச முழியில வீரமாகாளியம்மன் கோவில்ல இருக்க பெரியாச்சி சாமிதான் நினைவுக்கு வந்துச்சு.
"என்ன காரியம்டா பண்ணிட்டு வந்துருக்க? மனசில இந்தளவுக்கு எப்படி தைரியம் வந்துச்சு?"
"இல்லமா..."
" என்னடா..இல்லை..நொல்லை..ஒத்தப்புள்ளேன்னு செல்லம் கொடுத்து வளத்தா..உனக்கு எவ்வளவு திமிரு..ஒரு வார்த்தை எங்கிட்ட கேட்டீயா? நீயா முடிவெடுத்து பண்ணிருக்க"
"இல்லமா எனக்கு ரொம்ப பிடிச்சி" முடிப்பதற்குள்
"என்ன பிடிச்சிருக்கு? பிடிச்சிருந்தா என்ன வேணா செஞ்சிருவியா? அப்பறம் எதுக்கு அப்பா அம்மான்னு நாங்க இருக்கோம்" சொல்லும்போதுதான் அப்பா ஞாபகம் அம்மாவுக்கு வந்துச்சு போல.
"எல்லாம் அந்த ஆளுனால வந்தது.குடும்பம் காரியமுன்னு எதுலயாவது தலையிடுறாரா? எப்பப் பார்த்தாலும் வேலை..வேலை..அந்தக் கம்ப்யூட்டர்ல என்னதான் இருக்கோ..அதைக் கண்டுபிடிச்சவன் கூட இவ்வளவு நேரம் அதுல உக்காந்து இருக்க மாட்டான். வாய்ச்ச சனியனும் சரியில்ல.. பெத்த சனியனும் சரியில்ல..எல்லாருக்கும் ஏழரை வருசந்தான் சனி இருக்கும்.. எனக்கு மட்டும் ஆயுசு முழுக்க இருக்கும் போல..என்னங்க..இங்க கொஞ்சம் வாங்க"
"என்னடீ இப்ப பிரச்சினை.. வீட்டு விலையெல்லாம் இறங்கிட்டு இருக்காம்..முழுசா ஒரு செய்தியை படிக்க விடமாட்டியே" சொல்லிக் கொண்டே வெளியே வந்த அப்பாவுக்கும் எங்களைப் பார்த்ததில் அதிர்ச்சி.
"உள்ள வீடு உருப்படாம போயிட்டு இருக்கு.. இதுல சிங்கப்பூர் வீட்டு விலை இறங்குனா என்ன..ஏறுனா என்ன? உங்க பையன் பண்ணத பாருங்க"
"என்ன என் பையன்.. நீ வளத்த லட்சிணம் அப்படி..உன்ன மாதிரியே யாரயும் மதிக்காமா உன் புள்ளய வளத்திருக்க"
"என்ன நான் மதிக்கல..கல்யாணம் பண்ணதிலிருந்து குடும்பத்துல கொஞ்சமாவது அக்கறை இருக்கா. எப்ப பாத்தாலும் அந்தக் கம்ப்யூட்டர்.இல்லைன்னா பாழாப்போன அந்தப் போனு..இந்த இரண்டுக்கும் புள்ள பெக்கிற சத்தியிருந்திருந்தா நீங்க அதையே கல்யாணம் பண்ணி இருந்திருக்கலாம்"
"ஆமா..உன்னைய கட்டிக்கிட்டதுக்கு அதுகள கட்டியிருக்கலாம்.. பேசாமயாவது இருந்திருக்கும்"
எனக்கு வழக்கமாகிப் போன இந்த சண்டைகளைப் பார்த்து அமைதியாய் இருந்தாள் செல்வி. அவளின் இந்த அமைதி தான் அவளிடம் என்னை ஈர்த்தது.ஆனால் அதற்குள் போர் முற்றி அப்பா, வீட்டில யாருக்கும் தெரியாம காச எடுத்துட்டு போய் எப்படி இதப் பண்ணலாமுன்னு என்னிடமிருந்து இழுத்து கீழே போட்டதில் சுக்குநூறாய்ப் போனது செல்வி பொம்மை!
Comments