காலங்காத்தால
"இந்த ஒரு
நாளையாவது எனக்கே எனக்கென்று வைத்துக்கொள்ள வேண்டுமென்று ஆசை.. இப்படித்தான்
ஒவ்வொரு நாளும் பொழுது விடியும்போது நினைப்பதுண்டு.நடத்தவா விடுவாங்க நம்ம வீட்டுல
?"
"கௌஷல்யா சுப்ரஜா ராமா பூர்வா சந்தியா ப்ரவர்த்ததே" அஞ்சு மணிக்கு
தொலைக்காட்சியில வர்ற இந்த பாட்டு மட்டும் கேட்டா பரவாயில்லா.கூடவே அம்மாவோட ஹம்மிங்கும்.
ஒரு வார்த்தையும் முழுசா சொல்லத் தெரியாது..ஆனாலும் அம்மாவோட அளப்பறை அப்ப்பப்பா..பெருமாளே
திருப்பதியிலிருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் புடிச்சி புக்கிட் பதோக்கில இருக்குற எங்க
வீட்டுக்கு அலையாமக் கொள்ளாம வந்து "பாடாதே கமலா..போதும் நிறுத்து" ன்னு
சொன்னாத்தான் அம்மா திருந்துவாங்க.
பாட்டுக் கேட்டு எந்திரிச்ச வந்த அப்பா, "ஒரு கப் காபி கொடுடீன்னு"
அம்மாவுக்கு வேலை கொடுக்க, அம்மா எந்திரிச்சுப் போன இடைவெளையில,செய்தி அலைவரிசைக்கு
அலைபாஞ்சுருவாரு.
"அடப்பாவமே..வரவர வானத்துல போற பயணம் வானத்தோடயே முடிஞ்சிடும் போல.தினம்தினம்
ஒரு விபத்து. என்னத்த கடவுள். என்னத்த சாமி" அலுத்துக்கிட்டே அப்பா.
"காணமா போன விமானத்த கண்டுபுடிக்கத் துப்பில்ல..அதுக்கு எதுக்கு கடவுள
குத்தம் சொல்லிகிட்டு. ஆறு மணியாச்சு ..முதல்ல கந்தசஷ்டிக் கவசம் போடுங்க..ஆறுபடை வீட்டை
அழகா காமிப்பாங்க" சொல்லிக்கிட்டே அப்பாகிட்டயிருந்து ரிமோட்ட பிடுங்கி ஜெயா அலைவரிசைக்கு
மாத்துனாங்க அம்மா.
காலையில அம்மாகிட்ட சண்டைய ஏன் ஆரம்பிக்கனும்னு நினைச்சாரோ என்னவோ அமைதியா அடுத்த
வேலைக்கு தயாராயிட்டாரு அப்பா.
அண்ணன் பையன் அப்பத்தான் எந்திரிச்சு வந்து "பாட்டி.பேபி டீவி போடுங்களேன்"
தூக்கத்திலேயே முடிவெடுத்துருப்பான் போல..பேரன் கேட்டு பாட்டி பண்ணாம இருக்குமா..இப்ப
பேபி டீவி சத்தம்.
"காலையில நிம்மதியா தூங்கக்கூட முடியல..எந்திரிக்கும் போதே சத்தம் தான்..சனியனே.இவ்வளவு
சத்தம் வைச்சா கேப்பே" அண்ணி வந்து சத்தம் போட்டாள் பையன..ஆனா அம்மாவையும் சேர்த்து.
அண்ணியாவது டீவிய நிறுத்துவாளான்னு பாத்தா..எந்தப் புண்ணியவான்(!) அலைவரிசையோ
நேத்து போட்ட மெகாத் தொடர திருப்பி மறு ஒளிபரப்பு செய்ய, காலையிலேயே கண்ணீர் வடிக்க
களத்துல குதிச்சிட்டா அண்ணி.
"புள்ள ஆசையா பாக்குறத மாத்திட்டு இவ சீரியல் பாக்குறா..நம்ம ஏதாவது சொன்னா..புள்ளய
திட்டுற சாக்குல நம்மள திட்டுவா." மனசுக்குள்ளேயே புலம்பிக்கிட்டு அனுசரிச்சு
போனா அம்மா.
காலங்கத்தால சீரியல போட்டு ஏண்டி கடுப்பேத்துற..நல்ல புதுப்பாட்டு போடுடீ..அண்ணியிடம்
இருந்து ரிமோட்ட புடுங்கி அண்ணன் அலைவரிசையை மாத்துறதுக்குள்ள திருப்பி அண்ணி ரிமோட்ட
புடுங்க தவறி கீழ விழுந்து சுக்கு நூறா போனது ரிமோட்.
"பழைய டீவியாச்சே. டீவிலயும் பட்டனல்லாம் கெட்டுப் போச்சு. ரிமோட்டும்
வெளியே கிடைக்காதே.இனிமே டீவியே போட முடியாதே" அலுத்துக் கொண்டார் அப்பா.
"அப்பாடி..இனிமே எல்லா நாளும் எனக்கே எனக்கு" மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியது தொலைக்காட்சிப் பெட்டி
!
( 2014 ஆகஸ்ட் மாத கதைக் களத்தில் முதல் பரிசு வாங்கியது )
Comments