செய்தி

தடித்த எழுத்துக்கள்
தளபதிகளாய்
தலைமையேற்று வரும்
முதல் பக்கம்

முகங்கள் காட்டாத
காமத்தை அவள்
கணுக்கால் தூண்டுவது
போல சினிமா
செய்திகளையேந்தி வரும்
கடைசி பக்கம்

உள்ளூர் நடப்பிலிருந்து
உலக நிகழ்வு வரை
உள்ளடக்கிய
உள்பக்கங்கள்

கவிதையும் சிறுகதையும்
ஒரே பக்கத்தில்
கட்டிப்பிடித்து
சண்டையிட
தனக்கென முழுப்பக்கம்
கிடைத்ததை
தம்பட்டமடிக்கும்
ராசிபலன்

சிலபக்கங்களில்
வரிவிளம்பரங்கள்
விளம்பரங்கள் மட்டுமே
சிலபக்கங்களாய்

பக்கங்கள் ஒவ்வொன்றும்
ஏதாவதொன்றை
பறைசாற்ற

எந்தப்பக்கமும்
சொல்வதில்லை
அவென்யூக்களில் அலைந்து
மாடிக்களை தேடி
செய்தித்தாள் போடும்
சீனத்தாத்தாவின்
அதிகாலைப் பொழுதுகளை


                                                                06/07/14

2014 ஜூலை தங்கமீன் வாசகர் வட்டத்தில் பரிசு பெற்றது

Comments

Popular posts from this blog

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

கன்னி

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு