கைம்மாறு
கட்டிளம் பெண்களின்
கற்பைச் சூறையாடி
களவாணிகள் களித்திருந்தது அப்போ
பூப்படையும் முன்னே
பிஞ்சுகளை புண்படுத்தும்
பொறுக்கிகளின் காலம் இப்போ
பெண்ணாக உருமாற
ராமரைத் தேடிய
கல்லொன்று இருந்தது அன்று
கல்லாக இருப்பதே
கலியுகத்தின் வரமென
ராமரையே வெறுக்கும்
அகலிகைகள் இன்று
தாய்ப்பால்ருசி மறந்திடாத
நாக்குகளில் காமத்துப்பாலூற்றிய
கள்ளப் பிறப்புகளே
கள்ளிப்பால் உங்களைவிட
ஒருபடி மேல்
தொட்டா சிணுங்கிமேல்
பட்டாசு கொளுத்தும்
மட்டமான உயிரினமே ...
நகங்களின் கீறலில்
வடிகின்ற ரத்தத்தில்
தோலே உடையான
பிஞ்சுகளின் உடலோடு
உன் அன்னையின்
முகத்தைப் பொருத்திப் பாரு
உனைப் பெற்றவளுக்கு
மட்டுமல்ல
பெண்பிள்ளை பெற்ற
அத்தனை பேருக்கும்
அதுவே நீ செய்யும்
கைம்மாறு
30-08-14
Comments