அம்மாவுக்காக

அம்மாவுக்காக…
அம்மாவைப் பற்றி எவ்வளவு எழுதினாலும் அவ்வளவும் கவிதையே. எத்தனை எழுதினாலும் அத்தனையும் பத்தாது அந்த தெய்வத்தின் புகழுரைக்க. “அம்மா” என்ற சொல்லைக் கண்டுபிடித்தவர் உண்மையிலேயே அறிவாளி. உயிரெழுத்தும், மெய்யெழுத்தும் , உயிர்மெய் எழுத்துக்களைச் சேர்த்து “அம்மா” என்று பெயர் வைத்து, எல்லா உயிர்களுக்கும் உயிராகவும் மெய்யாகவும் இருப்பவள்,  தன் பிள்ளைகளுக்கு ஏதேனும் துன்பம் வருகையில் தன் உயிர்மெய்யை தியாகம் செய்பவள் என்ற குறிப்பால் உணர்த்தினாரே.

அப்படிப்பட்ட அந்த தியாக உள்ளத்தை எழுத்துக்களில் வரைந்திருக்கிறார் ‘அம்மாவுக்காக’ நூலின் ஆசிரியர் திரு.சபா.முத்து நடராசன் அவர்கள் என்று சொல்வதைவிட, இறந்து போன தன் தாயுடன் மீண்டும் ஒருமுறை வாழ்ந்திருக்கவே இந்த நூலை உருவாக்கியிருக்கிறார் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.

கவிதை நூலில் வாழ்த்துரை இருக்கும். ஆனால் இங்கு ஒரு கவிதையே வாழ்த்துரையாகின்றது. கவிக்கோ அப்துல் ரகுமான் ஐயாவின் வாழ்த்துப்பா, இந்த நூலைத் திறந்து வைக்கும் அழகான தேக்கங்கதவு.

திண்ணப்பன் ஐயாவின் பேச்சிலும் எழுத்திலும் , இலக்கியங்களும் புதிய செய்திகளும் இல்லாமலிருந்தால்தான் ஆச்சரியம். கையறுநிலை நிலை விளக்கம் தொடங்கி பட்டினத்தார் பாடல்கள் வரை மேற்கோள்கள் காட்டி நூலை அணுஅணுவாய் ரசித்திருக்கின்றார் அணிந்துரையில்.

திரு.இக்பால் ஐயா, திரு.முகமது அலி போன்றோரின் வாழ்த்துரைகள் இந்த நூல் விரும்பியணிந்த அழகான வளையல்கள்.

நூலாசிரியர் தன்னுரையில் நூல் உருவான பிண்ணனி , நன்றிகள் போன்ற வழக்கத்தோடு அமைதியாக ஒரு விதையைத் தூவி விட்டுச் செல்கிறார் .

"அம்மாவை கொண்டாடுங்கள். வாய்ப்புகளை விட்டுவிடாதீர்கள் . என்னைப் போல "
அனுபவத்தில் முளைத்தது. மனத்தில் ஆழமாக பதிந்தது.

இந்த விதையை மனதில் ஏந்திக் கொண்டே அடுத்த பக்கங்களை நாம் வாசிக்க வேண்டும்
தன் தாய்க்கு வந்த புற்றுநோயை " அம்மா கருவுற்றிருக்கிறார் ..தன்னந்தனியாக ! " என்று முதல் வரியிலேயே எழுதி கவித்துவத்தின் உச்சத்தை தொட்டிருக்கின்றார்.

“குடியிருந்த கூட்டுக்குள்ளே
அரக்கனவன் புகுந்துவிட்டான்.
அழிவேலை தொடங்கிவிட்டான்.
 ஆண்டவனைத் தொழுகின்றோம்”

என இறைவனை வணங்கும் ஆசிரியர், தன் தாய் இறைவனை வணங்கும் விதத்தை
" முனியைய்யா கோவிலுக்குப் போகோணும்.
 கட்டினவுக,மக மக்க , பேரன் பேத்தி
எல்லாரும் நல்லாயிருக்கோணும். யாருக்கும் எதுவும் வந்துரப்படாது !"
 என்று சொல்லிவிட்டு
"வந்திருச்சே! "

என்ற ஒத்த வார்த்தை வைக்கிறார் பாருங்கள். அந்த ஒத்த வார்த்தையில் தான் தன் மொத்த சோகத்தை , ஏக்கத்தைப் புதைக்கின்றார்.

தன்னைப் பெற்றபோது மருத்துவமனைக்குச் சென்ற தாய், பல ஆண்டுகள் கழித்து மருத்துவமனைக்கு சென்றதைச் சொல்ல வந்த ஆசிரியர், தற்கால நவீன உணவு முறைகளிலுள்ள தீமையை
“கண்டதையுஞ் சாப்பிட்டா
உடம்பு கெட்டுப்போயிரும்.
திங்கிறதுல இருக்கு சங்கதிங்கிறத
சொல்லாமச் சொல்லிபுட்டா !
அத வாழ்ந்தும் காட்டிப்புட்டா !”
என அழகாக எடுத்துரைக்கின்றார்.

“இத்துணூண்டு எடமானாலும்
பொட்டுப்போல இருந்துக்குவா!
பத்துக் காசேயானாலும்
பத்திரமா பொத்திவைப்பா !
பாத்துப் பாத்துச் சேர்த்ததால
நாங்களெல்லாம் நல்லாருக்கோம்.
ஆத்தா அடக்கமா இல்லாமா
ஆட்டம் போட்டிருந்தா
தெருவோரம் நின்னுருப்போம் !”

என்ற வரிகள் தன் தாய் வாழ்ந்த எளிமையான வாழ்க்கையை மட்டும் சொல்லாமல், அந்தக் காலத்திலும் கிராமப்புரங்களில் பெண்கள் குடும்ப நிதி நிர்வாகத்தில் சரிசமமாக பங்கேற்றனர் என்ற செய்தியைத் தாங்கி வருகின்றன.

”அவ கையால சமைப்பதற்கே
ஆடும் மீனும் தவம் கிடக்கும்”
அழகான கற்பனையென்றால்
“சத்துமாவு உருட்டிக் கொடுத்தா
இன்னைக்கு
சத்தில்லாமா சுருட்டிப் படுத்திருக்கா”
“எப்போதோ நினைக்கின்றான்.
எப்போதும் நினைக்கட்டும்
என்றே நீ நினைத்தாயோ ?”

போன்ற வரிகள் ஆசிரியரின் திறமையான வார்த்தை விளையாட்டுக்களைக் காட்டுகின்றன.
“குளிர்சாதனத்தைப்  போட்டாலே
குளிரது ஆட்டுதும்பியே !
குளிர்ப்பதனப் பேழையிலே
தளிர்மேனி நடுங்கலியோ ?”
இறந்து கிடக்கும் அம்மாவை உடலாகப் பார்க்காமல் இன்னும் தன்னுயிராகப் பார்ப்பதனால் முளைத்த வரிகள்.

“குப்பைத்தொட்டி” கவிதையிலே தன் தாயை வேறுபட்ட பார்வை கொண்டு பார்க்கும் ஆசிரியர், “அழுகுறதா, சிரிக்கிறதா” கவிதையில் தன் நிலையையே வேறுபடுத்திக் காண்பித்திருப்பார்.

ஆசிரியர் வட்டார பேச்சுத்தமிழில் தன் ஆளுமையைக் காட்டிச்செல்லும் போது சட்டென்று எழுத்துத்தமிழ் புகுந்து கொள்வது வாசகர்களுக்கு சற்று வேகத்தடையை ஏற்படுத்துகின்றது சில இடங்களில் மட்டும். மற்றபடி எந்த இடத்திலும் எழுத்துப் பிழைகளைக் காண முடியாதது ஆசிரியரின் தெளிந்த தமிழ்ப் புலமையைக் காட்டுகின்றது.

இரண்டு நாளாக சின்ன சண்டைப் போட்டு அம்மாவுடன் பேசாமல் இருந்த நான், நூலைப் படித்து முடித்த உடனே இந்தியாவில் இருக்கும் அம்மாவுக்கு தொலைபேசி மூலம் பேசி, அவர்கள் பேசுவதை கொஞ்சம் அமைதியாக கேட்டு ரசித்து நிம்மதியடைந்தேன். என்னைப் பொருத்தவரை இந்தப் பாதிப்புதான் இந்த நூலுக்கும் ஆசிரியருக்கும் கிடைத்த வெற்றி ! 

அது மட்டுமல்ல,
“அம்மாவைப் போற்ற வேண்டும், அவர்கள் உயிரோடு இருக்கும்போதே !”
என்ற எண்ணம் படிக்கும் ஒவ்வொரு வாசகனின் மனதிலும் பதியும். பதிய வைத்திருக்கிறார் ஆசிரியர்.
வாழ்த்துக்கள். தொடர்ந்து நூல்கள் எழுத !


தாயுமானவன் மதிக்குமார்
21-08-2014.






Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு