அம்மாவுக்கு ஒரு நிழல்


சிறுகதை விமர்சனம்

தலைப்பு : அம்மாவுக்கு ஒரு நிழல்
ஆசிரியர் : எம்.சேகர்
நூல்    : அட்டைப்பெட்டிப் படுக்கையும் வெள்ளைத்தாடித் தாத்தாவும்

கணவனை இழந்த தன் தாய்க்கு நிழலாகத் துணையொன்றை மகன் கொடுக்க முயலுவதுதான் இச்சிறுகதையின் சுருக்கம். தன்னுடைய பள்ளிப் பருவத்தில் இறந்த தன் அப்பாவிற்குப் பதிலாக, இளநிலை இறுதியாண்டு படிக்கும் வயதில், மகன்  தாய்க்கு எதற்கு  துணை தேட வேண்டும் ? என்ற கேள்வியுடனேயே இந்தக் கதையின் முதல் முறை 
வாசிப்பு முடிந்தது.

அடுத்தடுத்த வாசிப்புகளில், தனது திருமணத்திற்குப் பிறகு வரும் காலங்களில் நடக்கப் போவதை யாராலும் சொல்ல முடியாது என்ற மகனின் எண்ணத்தையும் , தமிழை ஆட்சிமொழியாக்கப் பாடுபட்ட கோ.சாரங்கபாணி, பெண்கள் உடன்கட்டை ஏறுவதை தடுக்கப் பாடுபட்ட ராஜாராம் மோகன்ராய் மற்றும் பிற புரட்சியாளர்களால் கவர்ந்திழுக்கப்பட்ட இளரத்தமுடைய மகன் தன் தாய்க்கு மறுமணம் செய்து வைத்து தன் தாயிடமிருந்தே புரட்சியைத் தொடங்க நினைக்கும் மனநிலையையும், கதாசிரியர் தன் எழுத்துக்களில் வடிவமைத்து மேலெழுந்த கேள்விக்கு பதில் தர முயன்றிருக்கிறார்.

அம்மா வேலை நேரம் தாண்டி கூடுதல் நேரம் வேலை செய்து பொருள் ஈட்டுவது, மகனின் படிப்பிற்கு சிண்டா மற்றும் உமறுப்புலவர் கல்வி உதவி, சிம் பல்கலைக்கழகத்தின்  வட்டியில்லாக் கல்விக் கடன் மற்றும் உபகாரச் சம்பளம் போன்றவை உதவுவது, சிங்கப்பூரில் நடக்கும் தங்கமீன், கவிமாலை போன்ற இலக்கிய நிகழ்வுகளுக்கு அம்மா செல்வது போன்றவற்றின் மூலமாக சிங்கப்பூரின் நடப்பு வாழ்வியலை அழகாகப் பதிகின்றார் ஆசிரியர்.

அம்மாவுக்கு ஆறுதல் கரம் நீட்டி, நல்ல நட்பாக இருக்கும் பார்த்திபன், அம்மாவிற்கும், அவளது குடும்பத்திற்கும் செய்யும் உதவிகளைப் பட்டியலிடும் ஆசிரியர், பார்த்திபனின் கடந்த கால வாழ்க்கையை வழவழவென்று இழுக்காமல் ஒரே பத்தியில் முடிப்பது சிறப்பு.

"அம்மாவின் விழிகளில் ஏக்கப் பெருமூச்சு"
"கோணல் பார்வைகளுக்கு இரையாவதைத் தவிர்க்கும் அம்மா"
"அப்பாவின் இறப்பில் சொந்தங்களும் மறைந்து விட்டன"

போன்ற சொற்றொடர்கள் ஆசிரியரின் மொழி ஆளுமையைப் பறை சாற்றிச் செல்கின்றன.

நகராண்மைக் கழக கட்டணம், போக்குவரத்துக் கட்டண அட்டை என அழகான தமிழ் சொற்களைக் கையாண்டு ஆச்சர்யமூட்டும் ஆசிரியர், பொதுப்பயன்பாட்டுக் கழக கட்டணத்தை மட்டும் பியூபி பில் என்றெழுதி ஏமாற்றம் தருகின்றார்.

அம்மாவுடன் நல்ல நட்புடன் பழகும் பார்த்திபனை, கதை முழுதும் மாமா என்றழைக்கும் அழகான உறவை எப்படி அம்மாவின் துணையாக்கும் மனம் மகனுக்கு வந்தது என்ற நெருடலை ஒவ்வொரு வாசிப்பும் தந்தாலும், நல்ல நட்பும், நிறைய புத்தகங்களை வாசிப்பதும் உறவை இழந்தவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் எனச் சொல்லிச் செல்கின்றது அம்மாவுக்கு ஒரு நிழல் சிறுகதை.



Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு