அட்டைப் பெட்டி படுக்கையும் வெள்ளைத்தாடி தாத்தாவும்
சிறுகதை : அட்டைப் பெட்டி படுக்கையும் வெள்ளைத்தாடி தாத்தாவும்
ஆசிரியர் : எம்.சேகர்
வாழ்க்கைச் சாலையில் எத்தனையோ முகங்களைக் கடந்து செல்கையில் பலவிதமான உணர்வுகள் உள்ளத்தில் உதயமாகும். சிலரைக் கண்டால் புருவங்கள் உயரும். சிலரைக் கண்கள் ரசிக்கும். சிலரை நோக்கி பெருமூச்சு பயணிக்கும். சிலரைப் பார்த்து உதடுகள் சிரிக்கும். சில நேரங்களில் மட்டும் உள்ளம் சிரிக்கும். சிலரை மனது வெறுக்கும் .சிலரை இனிமேல் பார்க்கவே கூடாதென சபதெமெடுக்கும். சிலரைப் பார்த்து வெட்கப்படும். சிலரிடம் அழத் தோன்றும். எந்த உணர்ச்சிகளும் ஏற்படாமல் கடந்து செல்லும் முகங்களும் உண்டு. அவ்வாறு கடந்து செல்லும் முகங்களோடு, கொஞ்சம் நேரம் செலவழித்துப் பழகினோமானால், சற்றும் எதிர்பாராத அனுபவங்களை நாம் பெறலாம்.
ஒரு உணவுக் கடையில் வழக்கமாக பார்க்கும் தாத்தாவை, சாதாரணமாக எடை போட்டு, பிறகு அவரைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்வதுதான் இக்கதையின் ஒருவரிச் சுருக்கம். சயாம் ரயில் பாதை அமைக்க தமிழர்கள் பட்ட துன்பங்களை வாசகர்களுக்குச் சொல்ல வேண்டும் என்ற நூலாசிரியரின் இனவுணர்வு இக்கதையை எழுத தூண்டியிருக்கக்கூடும். ஜப்பானியர்களால் இழுத்துச் செல்லப்பட்ட பெற்றோரையிழந்த ஒரு தாத்தா கதாபாத்திரத்தின் மூலமாக அதனை செம்மையாக செய்திருக்கின்றார் ஆசிரியர்.
"யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனார் சொல்லியிருப்பது, சொந்த நாடில்லாத தமிழனுக்கு கூடுதல் போனஸ்" என்ற வரிகளின் மூலம் நூலாசிரியர் தன் இனத்தின் சோகத்தை நையாண்டியாய் சொல்லியிருப்பது சிந்திக்க வைக்கின்றது.
உணவுக்கடைக்கு செல்லும் வழியையும் , பேருந்து தடங்களையும் விவரித்திருப்பது சலிப்பைத் தட்டுவதுடன் இக்கதைக்கு தேவையில்லாத ஒன்றாகத் தெரிகின்றது. மேலும் ஆறுபக்கச் சிறுகதையில் ஏழுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களின் பெயர்களை உலவ விட்டிருப்பது வாசகர்களைக் குழப்புவதுடன் மறுவாசிப்புக்கு இட்டுச் செல்கின்றது.
சிறுகதைத் தலைப்பு, கதையில் இருந்து எடுத்ததாக இருந்தாலும், சற்று நீளத்தைக் குறைத்திருக்கலாம்.
"விட்டு விட்டுச் சிணுங்கும் சிறு குழந்தையைப் போல லேசாகத் தூறலிடும் வானம்" போன்ற காட்சிகளைப் பற்றிய வர்ணனைகள், கதாபாத்திர வர்ணனைகள் மற்றும் வட்டார மொழியுடன் கூடிய பேச்சு நடை போன்றவை ஆசிரியரின் மேம்பட்ட எழுத்துத் திறமையைக் காட்டுவதுடன்,இச்சிறுகதைக்கு வலு சேர்க்கின்றது.
தொடர்ந்து சிங்கப்பூரை மையமாகக் கொண்ட சிறுகதைகளைப் படைக்க வாழ்த்துக்கள்.
2014 செப்டம்பர் கதைக்களத்தில் முதல் பரிசு பெற்றது
Comments