கடாரம் கொண்ட சோழனுக்கு கடலலைபோல் திரண்டு சிங்கை தமிழினம் எடுத்த திருவிழா
சிறுவயதிலிருந்து வரலாறு பாடத்தில் கொண்ட ஆர்வமா ? இல்லை மூவேந்தர்க்கு இணையாக பரப்பளவில் இல்லையென்றாலும் மனதளவில் உயர்ந்து இருக்கும் குறுநில மன்னர்கள் ஆண்ட நாடுகளில் ஒன்றான பட்டமங்கல நாட்டில் பிறந்த உணர்வா ? தெரியவில்லை, என்னையறியாமல் ஏதோ ஒரு உணர்வு, வார்த்தைகளில் விவரிக்க முடியவில்லை.. சிங்கையில் ராஜேந்திரன் சோழனுக்கு விழா எடுக்கப்போகிறோம் என்ற செய்தியைக் கவிமாலையில் கேட்டவுடன்.
எப்பேர்ப்பட்ட இனம்.. மக்களையும் மானத்தையும் மையமாக கொண்ட மன்னர்களின் மனம் .எவ்வளவு வெற்றிகள்..வெற்றிக்கு சமமான எவ்வளவு தோல்விகள். வெற்றிகளில் பெற்றதைப் போலவே தோல்விகளில் இழந்தவை..வெற்றி தோல்விகளை சரிசமமாக எடுத்தாண்ட விதம்..சிற்றரசோ.. பேரரசோ ..தமிழ்நாட்டு மன்னர்கள் ஒவ்வொருவரின் சிந்தனைகளும் தாம் ஆண்ட மண்ணிற்கு எதையாவது நல்லது செய்ய வேண்டும் என்றே நினைத்திருக்கின்றன.. அதற்காகவே அவர்கள் கால்கள் நடந்திருக்கின்றன. உடல்கள் உழைத்திருக்கின்றன.
அப்பேர்ப்பட்ட மன்னர்களின் வரிசையில் தமிழகத்தின் பெருமைகளை, கலைகளை உலகறிய செய்வதோடு மட்டுமல்லாமல் வரும் தலைமுறைகளும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு ஆட்சி செய்த மாமன்னன் ராஜராஜ சோழனின் மகனான ராஜேந்திரன் சோழனுக்கு விழா என்றால் சும்மாவா? அரசன் நகர்வலம் என்றாலே நகரத்து வீதிகளிலும் வீடுகளிலும் அலங்காரம் செய்து உணர்வுபூர்வமாக குடிமக்கள் வரவேற்ற விதத்தை கல்கி ஐயா பக்கம் பக்கமாக எழுதியிருப்பாரே.. இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில் ராஜேந்திர சோழனைப் பற்றி பேசப் போகிறார்கள்..அவனின் வீரதீர செயல்களை பட்டியலிடப் போகிறார்கள். அதிலும் தனது எழுத்து மூலம் சோழனோடு வாழ்ந்த எழுத்துச் சித்தர் பாலகுமாரன் ஐயா பேசப்போகிறார்...நம் மன்னனைப் பற்றி இன்னும் கொஞ்ச நேரத்தில் கேட்கப் போகிறோம் என்ற உணர்வு, மாலை 4 மணிக்கே வீட்டிலிருந்து கிளப்பிவிட்டது.
எனக்குள்ளே தோன்றிய உணர்வு பலபேருக்கும் தோன்றியிருக்குமென்றே நினைக்கின்றேன். மாலை 6 மணிக்கு ஆரம்பிக்கும் நிகழ்வுக்கு 5:30 மணிக்கே அரங்கத்தின் இருக்கைகளில் இடம் இல்லை. கிட்டத்தட்ட 75 சதவீதம் புதிய முகங்கள். எந்த தமிழ் நிகழ்வுக்கும் வராத முகங்கள். எப்படியும் நிற்கத்தான் போகிறோம் என்று அரங்கத்துக்குள் செல்லாமல். அரங்கத்துக்கு வெளியே இருந்த சோழனைப் பற்றிய படைப்புகளைப் பார்வையிட்டு இலவம் அமைப்பினர் தமிழ் எழுத்துக்களைக் கொண்டு வடிவமைத்த ஆடைகளை ( http://www.ilavam.com/tamil/ என்ற இணையதளத்தின் மூலமாகவும் இந்த ஆடைகளை நாம் வாங்கலாம் ) ரசித்துக் கொண்டு இருக்கையிலே அரங்கத்துக்குள் பெருங்கூட்டம் கூடிவிட்டது.
என்ன அதிசயம்.. முதல் வரிசையில் பாலகுமாரன் ஐயாவையும் புகைப்படக் கலைஞர்களைத்தவிர முக்கியஸ்தர்கள் யாரும் இல்லை.. அத்தனை பேரும் நான்காவது வரிசையில்.. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் புதுமையான வித்தியாசமான முயற்சி.
அழகான நெறியாளர் தனது அழகான தெளிவான குரலில் நிகழ்வைத் தொடங்கினார். நம் சத்தியமூர்த்தி அண்ணன் வரிகளை பூங்குழலி பாட வர்ஷினி அபிநயம் பிடித்தார், ஒலிவாங்குவானின் இரைச்சலால் பாடல் வரிகளை முழுதும் கவனிக்க முடியாமல் போனாலும் நடனமாடிய சிறுமியின் முகபாவனைகள் கல்கி ஐயாவின் சிவகாமியை நினைவுக்கு கொண்டு வந்தது. வாழ்த்துக்களும் பாராட்டுகளும் அந்த இளம் தங்கங்களுக்கு !
அடுத்து மேடையேறினார் ஐயா கோமகன்.. பேச்சில் அத்தனை கம்பீரம். சோழன் ஆண்ட மண்ணில் பிறந்த இறுமாப்பு ( நம்மிடமும் இருந்திருக்க வேண்டியது. நவீனமும் நம் அலட்சியமும் அதைப் புறந்தள்ளி விட்டது ).வெல்ல முடியாத இடங்களையெல்லாம் வென்றான் எங்கள் மன்னன் என்று சொல்லும்போது அவர் முகத்தில் தெரிந்த அந்த கம்பீரம், இன்னும் எங்கள் பிள்ளைகளுக்கு பல்லவராயன்..வல்லத்தரையன் போன்ற எங்கள் முன்னோர்களின் பெயரைத்தான் வைக்கின்றோம் என்று சொல்லும்போது அவரிடம் இருந்த அந்த பெருமிதம். இவர் உண்மையிலேயே அரசனின் மகனாகத்தான் (கோ மகன்) இருக்க வேண்டும் என்ற எண்ணம் கூர்ந்து கவனித்தவர்களுக்கு உதித்திருக்கும்.அரசாங்கமும் அமைப்புகளும் செய்ய வேண்டிய செயலை தனியொரு மனிதனாக கங்கை கண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனுக்கு விழாயெடுத்த இவர் நம்முடைய நன்றிகளுக்கு என்றென்றும் உரியவர்.
அடுத்து மேடையெறியது. தமிழகத்தில் நடந்த விழாவின் காணொளி..ஊரே ஒன்றுகூடி உணர்வுபூர்வமாக கொண்டாடியிருக்கிறார்கள்.சண்டி மேளத்தின் ஒலியோடு தொடங்கிய காணொளியின் அதிர்வலைகள் இன்னும் மனதில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன.
வரவேற்புரையாற்ற வந்த அன்பழகன் ஐயா, இவ்வளவு படையெடுத்த தமிழ் மன்னர்கள் வெற்றிபெற்ற ஒரு இடத்தைக்கூட தன் காலனிகளாக மாற்றி தமிழனுக்கென்று ஒரு நாட்டை உருவாக்கவில்லை எனத் தன் ஆதங்கத்தைப் பதிவு செய்தார். தமிழ்க்கலைகளுக்காக அரும்பணியாற்றிய ராஜேந்திர சோழன் ஏன் தன் பெயரைத் தமிழ் பெயராக மாற்றிக் கொள்ளவில்லை என தன் வருத்தத்தைக் காட்டியதோடு இனிவரும் பிள்ளைகளுக்காவது தமிழில் பெயர் வையுங்கள் என்று கேட்டுக்கொண்டதற்கு அரங்கத்தில் நல்ல கைத்தட்டல். வழக்கம்போல கைத்தட்டலோடு நம் வேலையும் முடிந்துவிட்ட திருப்தி அத்தனை பேரின் முகத்திலும்.
நேரம் குறைவாக இருப்பதால் நேராக செய்திக்குள் சென்றுவிடுங்கள் என்று பேச்சாளர்களுக்கு அன்புக்கட்டளையும் விட்டுச் சென்றார் அன்பழகன் ஐயா. இந்த நேர மேலாண்மைதான் குறித்த நேரத்துக்கு முன்னதாகவே நிகழ்வு முடிய காரணமாயிருந்தது. இக்கட்டளையை ஏற்றுக்கொண்டு மேடையேறியவர் திண்ணப்பன் ஐயா. அறிவார்ந்த தகவல்களும், சிங்கை பாடத்திட்டத்தைப் பற்றிய பொறுப்பான பதில்களும் அணிவகுத்து வந்தன.
அடுத்து மேடையேறினார் கி,தனவேல் ஐயா. என்ன குரல் வளம். அரை மணி நேரம் அத்தனைப் பேரையும் தன் பேச்சில் கட்டிப் போட்டு வைத்திருந்தார். இவ்வளவுக்கு சொன்னதெல்லாம் வரலாற்று ஆய்வுகள், கல்வெட்டு கணக்குகள். சாதாரணமானவர் பேசியிருந்தால் தூங்கியிருப்போம். தெளிவான உச்சரிப்பும், கம்பீரமான குரல்வளமும், சோழனின் படைகளைப் பற்றிய அதிசயங்களும் தான் இம்மி நிமிடங்கூட பார்வையாளர்களின் மனதை வேறெங்கும் செல்லவிடவில்லை. தற்பொழுதுள்ள கடாரத்தின் அமைப்பும் தமிழக காவேரி மண்டலத்தின் அமைப்பும் ஒன்றுபட்டுள்ள அதிசயத்தைச் அவர் சொல்கையில் நமக்கும் அங்கு சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவல் தொற்றிக் கொண்டது.
அடுத்துவந்த தென்னிந்தியாவிலே மிகச்சிறந்த தொல்லியல் ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன் ஐயாவின் காணொளி படங்களோடு கூடிய படைப்பு, சோழன் வாழ்ந்த காலத்திற்கே நம்மை அழைத்துச் சென்றது. இதுவரை தமிழ் நாட்டிலிருந்துதான் அந்நிய அரசர்கள் கலைப்பொருட்களைக் கவர்ந்து சென்றனர் என்ற எண்ணத்திலிருந்த எனக்கு, ராஜேந்திர சோழன் வென்ற இடங்களிலிருந்து கொண்டு வந்த பொருட்களையெல்லாம் படங்களின் மூலம் பார்த்தது பரவசத்தை உண்டு பண்ணியது. அதிலும் தான் கொண்டு வந்த மற்ற நாட்டு பட்டத்து யானைகள், தோரண வாயில்கள் இன்னபிற பொருட்கள், ஆகியவற்றை நாணயத்தில் அச்சிட்டும், கல்வெட்டுகளில் பொறித்து ரசித்த சோழனின் வீரத்தோடு கலந்த ஆணவத்தை என்னவென்று சொல்வது. குடவாயில் பாலசுப்பிரமணியன் ஐயாவை தனியாகவே சிறப்புரை வழங்க அழைக்கலாம். அவ்வளவு தகவல்கள்.
வழக்கம்போல சிறப்பு பேச்சாளர் உரைக்கு முன்னதாக நன்றியுரை. உள்ளத்திலிருந்து வந்த உண்மையான நன்றியாகவே தோன்றியது புருசோத்தமன் அண்ணனின் நன்றியுரை. உணர்ச்சிபொங்க அவர் பேசிய ஒவ்வொரு வரியிலும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அவருடைய உழைப்பு தெரிந்தது. வரலாற்று நாயகனுக்காக உழைத்த அவருக்கு காலம் என்றென்றும் நல்லதையே வழங்க வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுதல்.
மேடையேறினார் எழுத்துச் சித்தர். இருவர் தாங்கிக் கொண்டு சென்ற நிலையிலும் ,உட்கார்ந்து பேச வசதி அமைக்கப்பட்டு இருந்தாலும், நின்று பேசினார் என்றைக்கும் நின்று பேசும் அவர் எழுத்துக்களைப் போல. குருவை வணங்கிவிட்டு, வந்திருப்பவர்கள் அனைவரும் சோழனோடு தொடர்புடையவர்கள், நீங்கள் வரவில்லை, சோழன் உங்களை அனுப்பியிருக்கின்றான் என்ற உணர்வு பொங்க சொன்னபோது அதே உணர்வோடு அரங்கம் அதிர்ந்தது கைத்தட்டல் மூலம்.
சோழனின் பெருமைகளைச் சொல்லிக் கொண்டே அவ்வப்போது பார்வையாளர்களுக்கும் படைப்பாளர்களுக்கும் தன் அறிவுரைகளைத் தெளித்துக் கொண்டே வந்தார். ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களுக்குச் செல்லுவதை விட்டுவிட்டு, கங்கை கொண்ட சோழபுரம் போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குச் குடும்பத்தோடு சென்று கொண்டாடுங்கள், வாழ்க்கையில் சினிமா முக்கியம் தான்..ஆனால் வாழ்வு முழுவதையும் சினிமாவிடம் ஒப்படைத்து விடாதீர்கள் என்ற பார்வையாளர்களுக்கு சொன்னதோடு , வரலாற்று இடங்களுக்கு சென்று அந்தச் சூழலை அனுபவியுங்கள், கல்வெட்டுக்களைத் தொட்டுப் பாருங்கள், மன்னர்கள் நின்ற நடந்த அமர்ந்த இடங்களில் நீங்களும் நின்று நடந்து அமர்ந்து பாருங்கள், பிறகு எழுதுங்கள் என்று சொன்னது என்னைப் போன்று எழுத்துலகில் அடியெடுத்து வைக்கும் அத்தனை பேருக்கும் பொருத்தமான அறிவுரை. படிப்பறிவு மட்டும் பத்தாது எழுத்தாளனுக்கு..ஒவ்வொரு அனுபவம்தான் இன்னும் என்னை எழுதச் சொல்கின்றது. தொடந்து எழுதுவேன். அடுத்து முதலாம் குலோத்துங்க சோழன் வரலாறுதான் என்று அந்த மூதிளைஞர் சொன்னபோது நீண்ட ஆயுளை இவருக்கு ஆண்டவன் தர வேண்டும் என்ற எண்ணம்தான் எல்லாருடைய மனத்திலும் ஓடியிருக்க வேண்டும்.
சோழனுக்காக விழாவிற்கு வந்த அத்தனை பேரின் பாதங்களிலும் தலை வணங்குகிறேன் என்ற தலை சிறந்த எழுத்தாளர் சொல்லும் போது முட்டிக்கொண்டு இருந்தது கண்களில் நீர் எழுத்தாளருக்கும் பார்வையாளர்களுக்கும் .
பேச்சையே தொழிலாக கொண்ட தமிழ்நாட்டுப் பேச்சாளர்கள் சிங்கை மேடையைக் கண்டவுடன் தமிழகத்தையும் அங்குள்ள தமிழர்களையும், கேவலம் ஒரு நிமிட கைத்தட்டலுக்காக எள்ளி நகையாடி செல்வதையே பார்த்து புளித்து வெறுத்துப் போன எனக்கு, பேசிய எந்தப் பேச்சாளரும் ஒரு வரி கூட தமிழர்களைத் தவறாக சித்தரிக்காமல் மாறாக தமிழன் என்கிற கர்வத்தை கேட்பவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு பேசியது உண்மையிலேயே மனம் நிறைந்த பாராட்டுதலுக்குரியது !
இது போன்ற நிகழ்வுகள் இத்துடன் நிற்கக் கூடாது .வருடந்தோறும் நடக்க வேண்டும்.அந்த விழாக்களுக்கு என்னால் முடிந்த சிறுவுதவிகளைச் செய்ய வேண்டும் என்ற உறுதியோடு திரும்பிச்
சென்றேன். கூடவே தனித்தனி வெள்ளைக்குதிரையில் அருள்மொழி வர்மரும் ராஜேந்திர சோழனும் கம்பீரமாக வருவதைப் போல உணர்வு.
சேதுராயன்,
தாயுமானவன் மதிக்குமார்
30-09-14
30-09-14

Comments