இருப்புச்சட்டி


இருப்புச்சட்டியை கரிப்போக தேய்ச்சுக் கழுவும்போது தோனுச்சு எனக்கு. இப்பிடித்தானே நம்ப மனசும். சுத்தமா வச்சுக்காட்டி அதுவும் கரிப்புடிச்சுப் போயிருமேன்னு. என்ன நினைச்சு என்ன?. இந்தா இப்பத்தான் விரிஞ்ச பூப்போல,காலங்காத்தால சமையலறைக்குள்ள வந்துட்டாளே.

புதுசா கல்யாணமான நண்பன், ஊரிலிருந்து மனைவியைக் கூட்டிட்டு வந்ததிலிருந்து மனசு சரியில்ல. திருமணத்திற்கு முன்பு நண்பர்கள் நாலு பேரும் மூன்றறைகள் கொண்ட வீட்ல இருந்தோம். ஒரு அறைக்கு இரண்டு பேருன்னு, இரண்டு அறையைப் பகிர்ந்துகிட்டோம். இன்னொரு அறையை இந்தியாவிலிருந்து அடிக்கடி வர்ற பெத்தவங்களுக்காக ஒதுக்கி வைச்சோம். இப்ப நண்பனொருவனுக்கு கல்யாணமானதால அந்த அறையை அவனுக்கு ஒதுக்கிட்டோம். 

சிங்கப்பூர்ல இருக்கிற விலைவாசிய சமாளிச்சிடலாம். ஆனா விர்ர்ர்ர்ருன்னு ஏறுன வீட்டு வாடகைய சமாளிக்கிறதிருக்கே.அப்பப்பா.முடியாதுடா சாமி. தனியா வீடெடுத்து சம்பளத்துல 2000வெள்ளி வாடகைக்கே அழுக முடியாத சூழ்நிலை நண்பனுக்கு. 500வெள்ளி வாடகை கொடுத்து 200வெள்ளி மாசசெலவுக்கு வச்சுக்கிட்டு, சம்பளத்தை அப்படியே ஊருக்கனுப்பி, கல்யாணத்துக்கு முன்னாடியே சொந்த ஊர்ல கிரானைட்கல்லுப் போட்டு வீடு ஒன்னு கட்டணும்னு பேராசை எங்களுக்கு. விளைவு கல்யாணம் ஆன அவனும், ஆகாத நாங்களும் ஒரே வீட்ல.

நேத்து மனைவியைக் கூட்டிட்டு வந்துட்டான் நண்பன். முதல்முறை நண்பனோட மனைவியை பாத்தவுடனே மனசுக்குள்ள கெளலி கத்த ஆரம்பிச்சிடுச்சு.அவ்வளவு அழகு.கிராமத்துப் பெண்தான்.மாநிறம்தான்.ஆனாலும் என்னவோ தெரியல. அவ்வளவு வசீகரம். ஒவ்வொரு அங்கங்களும் சரியா அளவெடுத்து செஞ்ச மாதிரி, கூடவும் இல்ல,குறையவும் இல்ல.முகம்னா இப்படித்தான் இருக்கனும். கழுத்துன்னா இப்படித்தான் இருக்கனும். எப்பவும் குடும்ப வேதனைகளை நினைச்சு மனசுக்குள்ள தூங்கிக்கிட்டு இருக்கிற மன்மதன், அந்தப் பொண்ண பாத்தவுடனே ஒரு டம்ளர் வரக்காப்பியைக் குடிச்சிட்டு கொட்ட கொட்ட முழிச்சிகிட்டு நேத்து ராத்திரி பூரா அவனும் தூங்கல. என்னையும் தூங்க விடல.

பொழுது புலர்ந்தது. இப்ப மன்மதன் தூங்கிட்டான். நான் முழிச்சிக்கிட்டேன். சே..என்ன மனசுடா நம்ம மனசு. நண்பனோட மனைவிய இப்படியெல்லாம் நினைக்கலாமா?.தப்பு பண்றோமேன்னு பல்டி அடுச்சுச்சு.  சாமான்கள கழுவுனா இருப்புச்சட்டிக் கறையும் அறிவுரை சொல்லுது. என்ன சொல்லி என்ன? இந்தா இப்பத்தான் விரிஞ்ச பூப்போல, காலங்காத்தால சமையலறைக்குள்ள வந்துட்டாளே. அந்நியன் படத்துல வர்ற விக்ரம் மாதிரி மனசு மாறி மாறி பேசுது. 

பேசாம வேற வீடு மாறிடலாமுன்னு யோசிச்சுக்கிட்டே இருப்புச்சட்டிய கழுவிகிட்டு இருந்தேன். சட்டென்று ஒரு டம்ளர் காப்பியை நீட்டினாள் அவள். 
“வேணாங்க” என்றேன் நான்.

“இப்படித்தான் புதுசா கல்யாணமான உங்க தங்கச்சி முதமுதல்ல கொடுக்கிற காப்பிய வேணாமுன்னு சொல்லுவிங்களா அண்ணா!” கேட்டாள் அவள்.

கழுவிக்கொண்டிருந்த இருப்புச்சட்டி சட்டென்று கைநழுவி கீழே விழுந்தது. 








Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு