4000 வெள்ளி
மாறிக்கொண்டே வருகிற உலகில் நாமும் மாறிக்கொள்ளத்தானே வேண்டியிருக்கிறது என்கிற நினைப்பு நெஞ்சுக்குள் முட்டியது. எவ்வளவு நாள்தான் ஆம்பிள ஆம்பிளன்னு அடாவடித்தனம் பண்ணுறது. நாளையிலிருந்து வேலைக்கு போகப் போறா. கொஞ்ச நஞ்சமில்ல 4000 வெள்ளி சம்பளம். வேலையும் அதுக்குத் தகுந்த மாதிரி கூடத்தான் இருக்கும் இனிமேல் என்னால முடிஞ்ச வேலைய வீட்டுல நானும் பாக்கனும். அவளுக்கு ஒத்தாசையா இருக்கனும் என்று முடிவு செய்து படுக்கைக்குச் சென்றேன். அப்படியே பழைய நிகழ்வுகள் தூங்கவிடாமல் கண்முன்னே வந்து ஆடின.
"ஏங்க கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேனே"
"என்ன தூக்கம்? ஒரு குடும்பத்துல இருக்க பொம்பள இப்படியா ஏழு மணி வரைக்கும் தூங்குறது ?"
"இல்லைங்க நேத்து ராத்திரி அடுப்பெல்லாம் துடைச்சு வச்சிட்டு தூங்க நேரமாயிடுச்சி..அதாங்க.ப்ளீஸ்..."
"வீடுன்னு இருந்தா அந்த மாதிரி வேலையெல்லாம் இருக்கத்தான் செய்யும். அதுக்காக இப்படி சோம்பேறித்தனமா இருந்தா நல்லாவா இருக்கும்?"
"என்னங்க இன்னைக்கு ஒருநா தானே...மத்த நாள்ல நாந்தானே சீக்கிரம் எந்திரிச்சு நீங்க வேலைக்கு போறதுக்கு தயார் பண்ணுவேன்"
"என்ன சொல்லிக்காமிக்கிறீயா? பொண்டாட்டினா அப்படித்தான் இருக்கும். ஆம்பிள வெளிய போய் சம்பாதிக்கனும். பொண்டாட்டின்னா வீட்டுல எல்லா வேலையும் பண்ணத்தான் வேணும். ஒரு நாளுன்னு சாதாரணமா சொல்லிட்டே. காலை சாப்பாடுக்கு 4 வெள்ளி, மதியானத்துக்கு 5 வெள்ளி. நா வாங்குற சம்பளத்துக்கு வீட்டுல சாமானையும் வாங்கிப்போட்டு இப்படி கடைச்சாப்பாடுக்கும் அழுதேனா விளங்கிடும்."
"இப்படி கணக்கு பண்றவரு ஏதாவது நீங்களே பண்ணிக்கலாமுல்ல"
"என்ன ... என்ன சமைக்க சொல்றீயா. என்ன நெஞ்சழுத்தண்டி உனக்கு. நா காலையில சீக்கிரம் எந்திரிச்சி உனக்கு சமைச்சு வச்சுட்டு வேலைக்கு போகணும். மகாராணி நீ படுத்து தூங்கணும். முத வேலையா உங்க வீட்டுக்கு போன் பண்றேன் "
இந்த சண்டை நடந்து ஒரு பத்து பதினைஞ்சு நாள் இருக்கும். வேலை விட்டு வீட்டுக்கு வந்தவுடன் ஒரு பேப்பர கையில் கொடுத்தா.. பிரிச்சு பாத்தா அவளோட அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர்..4000 சம்பளத்துக்கு நாளைக்கே வேலைக்கு வர சொல்லியிருக்காங்க. நா ஒன்னும் பேசல. சாப்பிட்டு படுக்கையில சாஞ்சேன். மாறிக்கொண்டே வருகிற உலகில் நாமும் மாறிக்கொள்ளத்தானே வேண்டியிருக்கிறது என்கிற நினைப்பு நெஞ்சுக்குள் முட்டியது. காலையில அவளுக்கு முன்னாடியே எந்திரிச்சு பாத்திரத்த கழுவி, காய்கறி வெட்டி வச்சிருவோன்னு முடிவு பண்ணவுடனே கண்ணுல தூக்கம் ஒட்டிக்கிச்சு.
மறு நாள் அலாரம் வச்சு எந்திரிச்சுப் பாத்தா பக்கத்துல அவ இல்ல. சரி அடுப்படியில இருப்பான்னு போனா, அங்கேயும் அவ இல்ல. கழுவுன பாத்திரங்களும், எனக்கு மத்தியானத்துக்கு சாப்பாடு கட்டி டிபன் பாக்ஸ் மட்டும் இருந்துச்சு.
2014 நவம்பர் கதைக்களம்
Comments