சிறுகதை விமர்சனம் : கோழியின் டை என்ற மந்திரக்கோல்
சிறுகதை : கோழியின் டை என்ற மந்திரக்கோல்
கதாசிரியர் : நா.பாலா
நூல் : சிலிக்கான் இதயம்
கல்லூரியில் இறுதியாண்டில் படிக்கும் நண்பர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தங்களுக்குக் கிடைக்கும் வேலைகளுக்கு காரணமாக நம்பும் ஒரு கழுத்துப்பட்டையின் (டை) கதை.
முதலில் தன்னுடைய ஒவ்வொரு வரிகளின் மூலம் வாசகர்களை கல்லூரிக்கு அழைத்துச் சென்ற ஆசிரியருக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள். ஒரு குறிப்பிட்ட கழுத்துப்பட்டையை அணிந்துகொண்டால் கண்டிப்பாக வேலை கிடைக்கும் என்ற நண்பர்களின் நம்பிக்கையைச் சாடுவதைக் கருவாகக் கொண்டு சமூகத்தின் மற்ற மூடநம்பிக்கைகளை சாதுர்யமாகச் சாடுகின்றார் கதாசிரியர்.
அடுத்து ஆசிரியர் எடுத்தாண்ட கதைக்களம் வித்தியாசமானது. மூடநம்பிக்கைக்கான வழக்கமான கதைக்களமாக இல்லாமல், கல்வியறிவும் பகுத்தறிவும் நிரம்பி வழியும் கல்லூரியைக் கதைக்களமாகக் கொண்டது சிறப்பு. அதைப்போலவே, கோழி, டைகரு, டப்பா, பீதி சுரேஷ் போன்ற கதைக்களத்திற்கேற்ற பெயர்களை கதை மாந்தர்களுக்கு வைத்து
வாசிப்பவர்களை கதையோடு பயணிக்க வைத்திருப்பதும் சிறப்பு.
ராசி போன்ற நம்பிக்கைகளை சாடும் விதமாக மட்டுமே கதையை நகர்த்தாமல், ஏன் அவ்வாறு நம்புகிறார்கள் என்ற எதிர்வாதத்தையும் படிப்பவர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு எழுதியது பாராட்டுக்குரியது. குறிப்பாக, ராசியை நம்பி பரிட்சைக்குப் போகும்போது, தன் சிறந்த படையுடன் போருக்குப் போகிற அரசனைப்போல ஒரு தன்னம்பிக்கை உருவாகிறது என்ற எதிர்வாதமும் உவமையும் மனதில் நிற்கும்.
'பின்னிரவு செய்தால் அடுத்தநாள் காலையில் விளையும்போல', 'நண்பர்கள் கோழியும் டைகரும் ஒரே கூண்டில் இருப்பது குறித்து வைக்க வேண்டிய சரித்திர நிகழ்வு' போன்ற நையாண்டிகளும் , கழுத்துப்பட்டையை விவரிக்கும் கற்பனைகளும், தொய்வில்லாமல் செல்லும் சிறுகதைக்கு அழகை அணிவித்துச் செல்கின்றன.
நகைச்சுவையும், சுவாரஸ்யமாகவும் செல்லும் சிறுகதை, திருப்பமின்றி இயல்பாகவே முடிந்து ஏமாற்றத்தைத் தருகின்றது. கதையின் எடுப்பும் தொடுப்பும் கதைக்குச் சேர்க்கும் வலிமையை முடிவு செய்யத் தவறுகிறது.மேலும் கதையின் தலைப்பை இன்னும் சுருக்கியிருக்கலாம் என்று தோன்றுகின்றது.
இயல்பான நிகழ்வுகளையும் ஆர்வத்தைத் தூண்டும் எழுத்துக்களையும் வைத்தே வாசகர்களுக்குச் சொல்ல வேண்டிய கருத்துக்களைச் சொல்லலாம் என்ற கதாசிரியரின் நம்பிக்கை பொய்க்கவில்லை.சுருங்கச் சொன்னால், சாட்டை எடுத்து புரட்சி செய்யாமல் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் வித்தையை தன் பேனாவிற்கு கற்றுக்கொடுத்து இருக்கும் ஆசிரியருக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.
01-05-2015 ஜனவரி மாத கதைக்களத்தில் முதல் பரிசு பெற்றது
Comments