பழிக்குப் பழி
தயங்கியபோதும் சொல்லிவிடலாம் என்ற முடிவுக்கு வந்தான் அவன். வேறு வழியில்லை.
எவ்வளவு நாள்தான் அதன் தொல்லைகளை பொறுத்துக் கொண்டிருப்பது? இப்பொழுது சொல்லாமல் மெளனம்
காத்தால் நல்லதில்லை என்று அவன் உள்மனம் அரித்துக்கொண்டிருந்தது.
என்னதான் முடிவெடுத்தாலும் சொல்லுவதற்கும் மனம் துணிய மறுக்கிறது. மெல்லவும்
முடியாமல் விழுங்கவும் முடியாத நரக வேதனையை அனுபவித்துக்கொண்டிருந்தான். வேதனையில்
துணை வருவது வேறு யார். நண்பன்தானே. நண்பனிடம் முதலில் கலந்தாலோசிக்கலாம் என்று முடிவெடுத்து
பச்சையப்பனை சந்திக்கச் சென்றான்.
"பச்சை..பச்சை…" வீட்டு வாசலில்
நின்று கூப்பிட்டான் அவன். முழுப்பெயரையும் சொன்னால் முப்பிறப்பின் பாவங்களும் முண்டியடித்து
வந்து பிடித்துக்கொள்ளும் என்பது நண்பர்களுக்கிடையேயான நம்பிக்கை.
"வாடா மாப்ளே.என்ன அதிசயமா இருக்கு" பச்சை.
"ஆமாடா பச்சை..பெரிய பிரச்சினையா இருக்குடா வீட்டுல. அதான் உன்ன பாக்க
வந்தேன்"
"பிரச்சினையா..பச்சைக்கிட்ட வந்திட்டீல..பச்சையா..பிரச்சினையான்னு பாத்துருவோம்"
"கொஞ்ச நாளா வீட்டில இருக்கிற ஒவ்வொண்ணா திருட்டுப் போகுதுடா பச்சை. திருட்டுப்போனாலும்
பரவாயில்லை தினமும் நாங்கல்லாம் தூங்கின பின்னாடி வீட்டுக்குள்ள அசிங்கம் பண்ணி வைச்சிட்டுப்
போகுதுடா"
"என்னடா சொல்ற? அசிங்கமா..அப்படின்னா?"
"ஆமா..உனக்கு விளக்கமாச் சொல்லனும்..நாத்தம் தாங்கலடா அது பண்றது"
"ஓ…அதுன்னா, அப்ப யாருன்னு தெரிஞ்சிருச்சா?"
"எல்லாம் தெரியும். ஆனா கண்டிக்கத்தான் முடியல..பக்கத்துல வா காதுக்குள்ள
சொல்றேன்" பச்சையின் காதுக்குள்ள ரகசியம் பாய்ந்து போனது.
பாய்ந்த ரகசியம் பச்சையின் முகத்தை சிவப்பாக்கியது.
"நினைச்சேன்..இந்த வேலைய அதுதான் பண்ணும்னு. நானும் கேள்விப்பட்டேன் மாப்ளே..
உனக்காவது திருட்டும் அசிங்கமும்..என் சொந்தக்காரங்க பலபேர் வீட்டுல எழவே நடந்துருக்குடா..இதுதான்
அவ்வளவு கொலையும் பண்ணிருக்கு"
"என்னடா..கொலையா..அய்யய்யோ..நாளுக்கு நாள் இதோட அட்டகாசம் அதிகமாயிட்டே
இருக்குடா பச்சை"
"ஆமாடா. பாவம் பரிதாபமுன்னு பாத்தா நம்மளயே பாதாளத்துல தள்ளும் போல..கண்டிச்சுவிட்டாத்தான்
சரியா வரும். நம்ம யாருன்னு காட்டுனாத்தான் அதுக்குப் புரியும்"
"நானும் அப்படித்தான் முடிவு பண்ணி வச்சிருந்தேன். இருந்தாலும் பாவமாச்சேன்னு
குழம்பிக்கிட்டு இருந்தேன்.ஆனா நீ சொல்றத கேட்டா கண்டிப்பா நாம யாருன்னு சொல்லனும்னு
தோணுது" சொல்லிக்கொண்டே இருவரும் குசுகுசுன்னு திட்டத்தைத் தயாரித்தார்கள்.
"கவலைப்படாதடா..நீ பண்ணு..நாம நல்லாயிருக்கணும்னா..வருங்காலம் நல்லாயிருக்கணும்னா
இந்தத் தப்பு பண்ணித்தான் ஆகனும். அப்பத்தான் அது திருந்தும்" பச்சைக் கொடுத்த
தெம்பில் திட்டத்தோடு திரும்பினான் அவன்.
மறுநாள் காலை. திட்டத்தை செயல்படுத்த துவங்கினான் அவன். தன்னில் தேக்கிய கழிவுகளையும்,
பச்சையின் பழிவாங்குதலையும் மொத்தமாய் கொட்டிவிட்டு அவசர அவசரமாய் பாவமன்னிப்பு கேட்க
திரும்பிவிட்டான் அவன்.
"கடலின் கோர தாண்டவம்.சுனாமி தாக்கியதில் கடலோர நகரங்கள் அழிந்தன. வரலாறு
காணாத பேரழிவு" தலைப்புச்செய்தியை பதைபதைத்துப் பாத்துக்கொண்டிருந்தது அது.
ஜனவரி 2015
Comments