சிறுகதை விமர்சனம் - தேவதூதன்



சிறுகதை : தேவதூதன்
ஆசிரியர் : மோகன் ராஜ்

எதிர்பாராத ஒரு விபத்திலிருந்து தன்னுடைய குழுவில் உள்ள தொழிலாளர்களைக் காப்பாற்றி விட்டு, இறுதியில் ஒரு புறாவையும் காப்பாற்றி உயிர் நீக்கும் மேற்பார்வையாளரின் மனிதநேயம்தான் தேவதூதன் சிறுகதையின் ஒருவரிச் சுருக்கம்.

அமைதியை நிலைநாட்ட ஆயுதங்களைக் கொள்முதல் செய்யும் சமூகம் இது. தன் இருகண்கள் போனாலும் அடுத்தவனுக்கு எத்தனை என்று எண்ணிப் பார்க்கும் மனசுகளின் சங்கமம் இது. உயிருக்குப் போராடுபவனைக் காணொளியெடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து இதயத்தைக் கூறு போட்டு இணையத்தில் விற்கும் சூழல் இது. இந்தக் சூழ்நிலைக்கு வேண்டிய கருவை எடுத்துக்கொண்டு, அதை சிங்கை சூழலுக்கேற்றார்போல மாற்றி சிறுகதை படைத்த ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

வாசகர்களைக் குழப்பாத குறைந்தளவு கதாபாத்திரங்கள், சோர்வடையச் செய்யாத கதைத் தொடுப்பு, எளிய நடை மற்றும் தமிழ்ச் சொற்களின் பயன்பாடு கதாசிரியரின் எழுத்தாற்றலை தெளிவாக காட்டிச் செல்கின்றன.இடிந்து விழுந்த கட்டடத்தின் கம்பிகளின் தோற்றத்தை உடலற்ற எலும்புக்கூட்டோடு ஒப்பிட்டு இருப்பது சிறப்பு, நினைவில் நிற்கும் உவமை.

சுரங்கத் தொழிலையும், இடிந்து விழும் சுரங்கத்துக்குள் நிகழ்ந்த பரபரப்புகளையும் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்திய கதாசிரியருக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.

மேற்பார்வையாளரின் கதாபாத்திரத்தை மனிதநேயமிக்க கதாபாத்திரமாக சித்தரிக்க, நூலாசிரியர் கையாண்ட காட்சியமைப்புகள், உரையாடல்கள் கதைக்கு வலு சேர்க்கின்றன. அதே நேரத்தில் கொஞ்சம் மிகுந்தும் உள்ளன. கதையின் நாயகனைப் பற்றிய புகழுரைகள், சினிமாவில் கதாநாயகனைச் சித்தரிப்பது போல அளவுக்கு மிஞ்சி உள்ளதை ஆசிரியர் தவிர்த்திருக்கலாம்.

கதையின் தொடக்கத்தில் வேலை இடத்தில் பாதுகாப்பை வலியுறுத்தும் மேற்பார்வையாளர், கதையின் முடிவில் சுரங்கம் விழும் நிலையில், தனது பாதுகாப்பை புறந்தள்ளிவிட்டுப் பேசும் தத்துவங்கள் வாசகனுக்கு நெருடலைத் தருகின்றன.

"நல்ல மனிதரிடத்தில்தான் நீ வேலை செய்ய வந்திருக்கிறாய்" என்ற ஒரே சொற்றொடர் கதையில் பலமுறை வந்தது ஆசிரியரின் கவனத்தில் வராமல் போய்விட்டது போலும். மேலும் கதாபாத்திரங்களுக்கிடையே நடக்கும் உரையாடல்களை எழுத்துத்தமிழில் எழுதாமல் பேச்சுத்தமிழில் எழுதியிருந்தால் இச்சிறுகதை மேலும் மேம்பட்டு உணர்வுபூர்வமாக இருந்திருக்கும்.

முடிவை அதிகம் இழுக்காமல் முன்கூட்டியே முடித்திருந்தால் கதையின் பாதிப்பு வாசகனுக்கு இன்னும் அதிகம் கிடைத்திருக்கும். தொடர்ந்து மேம்பட்ட சிறுகதைகளை எழுத கதாசிரியருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.


2014 நவம்பர் கதைக்களம்

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு