சிறுகதை விமர்சனம் - ஒற்றை மைனா



சிறுகதை தலைப்பு : ஒற்றை மைனா
கதாசிரியர் : பாரதி மூர்த்தியப்பன்
நூல் : சிலிக்கான் இதயம்


பெற்றோரை இழந்து, துணையுமின்றி, உறவுகளின் ஆதரவுமின்றி தனியே வாழ்ந்துவரும் முதிர்கன்னியின் உள்ளப் போரட்டங்களே சிறுகதையின் சுருக்கம். கூட்டமாகத் திரியும் மைனாக்களிலிருந்து விலகி தனியே இருக்கும் ஒற்றை மைனாவைக் கண்டாலே நல்லதில்லை என்ற மூடநம்பிக்கையோடு திருமணமாகாமல் வாழும் பெண்ணின் பிரச்சினைகளையும் தொடர்புபடுத்தி ஒரே கல்லில் இரண்டு மாங்காயை அடிக்க முயன்றிருக்கும் ஆசிரியருக்கு பாராட்டுக்கள்.

கோவிலில் நடக்கும் ஒரு திருமணத்திற்குச் செல்லும் கதையின் நாயகி, அங்கு கூட்டமாய் திரியும் மைனாக்களை ரசிக்கிறாள். ஆனால் தன் வீட்டிற்கு வரும் ஒரு ஒற்றை மைனாவினால் ஏதேனும் பிரச்சினை வருமோ என்று பயப்படுகிறாள். மைனாக்கள் கூட்டத்தை ரசிப்பதன் மூலம் நாயகி துணைக்காக ஏங்குகிறாள் என்பதை நேரடியாக எழுதாமல் வாசகர்களுக்கு உணர்த்தியதிலும், அதே சமயம் ஒற்றை மைனாவை வெறுப்பதன் மூலம் சமூகத்தின் பிரதிபலிப்பாக நாயகியையே உருவகப்படுத்தியதிலும் கதாசிரியரின் திறனைப் பாராட்டியே ஆக வேண்டும்.

மைனாக்கூட்டத்தையும் மனிதர்களையும் ஒப்பிட்டு வரும் சொல்லாடல்கள் கதைக்கு வலு சேர்க்கின்றன.

ஆனால் துவக்கத்திலேயே ஒற்றையாய் வாழ்ந்து வரும் நாயகியின் அறிமுகமும் சிறுகதைத் தலைப்பும் கிட்டத்தட்ட கதையின் போக்கையும் முடிவையும் முன் கூட்டியே சொல்லிவிடுவது கதையின் மிகப்பெரிய பலவீனம். திருப்பத்தை எதிர்பார்த்து வாசிக்கும் வாசகர்களின் விருப்பத்தை நிறைவு செய்யாமல் முடிகின்றது சிறுகதை.

"இங்கு வருமுன் சமையலறைச் சன்னலை அடைத்தேன். அந்த ஒற்றை மைனா என் படுக்கையறை வழியே வருமோ என நினைத்து படபடப்புக்கு உள்ளானாள்" என்று தன்னிலையையும் படர்க்கையையும் கலந்து குழப்பியிருப்பது எழுத்துப்பிழையா அல்லது எழுத்தாளரின் பிழையா எழுத்தாளருக்கே வெளிச்சம்.

ஒரு பெண் கதாசிரியர், தனியே வாழும் பெண்ணைப் பற்றி எழுதுகையில் துணையை இழந்ததால் ஒதுக்கப்பட்டிருக்கும் ஒரு ஆணைப் பற்றியும் எழுதியிருப்பது சிறு ஆறுதல்.

சொல்லாடலிலும், கதையின் நடையிலும், படிமப் படுத்துவதிலும் சிறந்திருக்கும் ஆசிரியர், புதிய கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து இன்னும் சிறப்பான படைப்புகள் படைக்க வாழ்த்துக்கள்.



Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு