சிங்கை அன்னை (அருணகிரி நாதர் காவடிச் சிந்து வடிவம் )

முத்தமிழ் தன்னையே முத்தெனக் கொள்வதில்
முந்தியே நின்றிடும் வளநாடு.
முட்களை வெட்டியும் கெட்டவை தள்ளியும்
முப்படை முத்திரை பெறும்நாடு.
வித்தகர் மெச்சிடும் கற்றவர் மொய்ச்சிடும்
விஞ்சிய பல்கலை விளைநாடு.
விண்ணவர் கொஞ்சிடும் சொர்க்கமே கெஞ்சிடும்
வித்தைநீ சிங்கையெம் அகக்கூடே

கற்பகம் உன்வளம் சிற்பமே நின்னுடல்
கண்படும் கட்டுடல் உனதம்மா.
கங்கையே செய்யினும் தண்டனை நிச்சயம்
கள்ளமும் கொன்றிடும் விழியம்மா.
கற்பனை செய்திடா திட்டமும் வந்திடும்
கற்றலை விட்டிடா கலைவாணி.
கல்லையும் தங்கமாய் செய்திடும் உன்கரம்
கண்கவர் சிங்கையெம் இளம்தாயே

அக்கரைச் சொந்தமும் அன்னையே உந்தனின்
அக்கறை கண்டுமெய் சிலிர்த்தேநின்
அங்கமும் தொட்டிட நித்தமும் வந்திடும்
அள்ளவோ குன்றிடும் உனதன்பு.
துக்கமும் உன்னிடம் தள்ளியே நிற்குமே
துன்பமும் கண்டிடா துளித்தேனே.
துல்லியம் உன்னையே பள்ளியாய் பற்றிடும்
துள்ளவும் கற்றிடா இளமானே

சல்லடைக் கண்ணெனச் சின்னதாய் உன்னுடல்
சந்தனச் சிற்பமாய் மணம்வீசும்.
சட்டமும் இங்குதான் சன்னதி கொண்டுதான்
சத்தியம் மட்டுமே கொடியேற்றும்.
இல்லையும் இங்குதான் எங்குமே இல்லையே
இன்பமும் வற்றிடா நதியேநீ.
இந்திரன் நித்திரை கொள்ளுவான் உன்மடி
இக்கரைப் பச்சையாய் இருந்தாயே.

நித்திரை இன்றியே சிந்திடும் உப்பிலே
நித்தமும் பொன்னுடல் செழித்தாயே.
நிம்மதி வந்திடும் நெஞ்சமும் மெச்சிடும்
நின்கரம் பற்றியே உழைத்தாலே.
சித்திரைத் திங்களை முத்தமிழ் கொண்டுவெண்
சிப்பியில் முத்தென நிறைத்தாயே.
சிம்மமாய் உன்னையும் இப்புவி எண்ணிட
சிங்கையே இன்னுமே சிறப்பாயே.

நல்லவர் திட்டமும் சந்ததி சென்றிடும்
நச்சென லஞ்சமும் ஒழித்தாயே.
நட்புடன் உன்னையே அண்டிடும் மண்ணிலும்
நல்லவை செய்திட விழைந்தாயே.
வல்லமை கொண்டதும் பல்திறன் மிக்கதும்
வஞ்சனை யற்றநல் வளநாடே.
வல்லவர் உன்னையே சிக்கெனப் பற்றியே
வந்தனம் செய்திடச் சிறப்பாயே.

பல்லின மக்களும் நல்லிணக் கத்துடன்
பந்தமாய் ஒன்றிட இருந்தாயே.
பங்கமும் வந்திடா ஒற்றுமை கொள்வதில்
பக்குவம் கொண்டுமே செழித்தாயே.
வில்லெனச் சென்றிடும் உந்தனின் திட்டமும்
விந்தையாய் இங்குமே உருமாறும்.
விம்மிய நின்புகழ் விண்வெளி தொட்டிட
வித்தகி சிங்கையே வளர்வாயே.

எத்திசை செல்லினும் சிங்கையின் இன்னிசை
என்செவி பெற்றிடச் சிறந்தாயே.
எட்டிய சொர்க்கமாய் கிட்டிய முத்தென
எந்தனின் இல்லமும் நிறைந்தாயே
மத்தளம் கொட்டியும் தப்பினைத் தட்டியும்
மங்கலம் பொங்கிடும் திருநாளே.
மக்களின் நெஞ்சினில் உற்சவம் கொண்டிடும்
மங்கையுன் பொன்விழா பெருநாளே.

கவிமாலை 2015 ஏப்ரலில் நடத்திய மரபு போட்டியில் ஊக்கப்பரிசு பெற்றது

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு