பாதை
கதவு பாதி திறக்கையிலே
கைவிரித்து தூக்கச் சொல்வாள்
கரங்கள் இல்லாத கவலையோடு
மீதிக்கதவும் திறந்து வழியனுப்பும்.
அவளைத் தூக்கிச் சுமப்பதற்கு
மின்தூக்கியும் காத்து நிற்கும்.
அவளும் உள்ளே நுழைந்துவிட்டால்
வானில் பறப்பதாய் அது நினைக்கும்.
அவள் அடிமேல் அடிவைப்பதை- வழிப்
பூனைகளும் பார்த்து ரசிக்கும்.
அவளோடு நடந்து நடந்து
மைனாக்களும் நடை பயிலும்.
அவள்பாதம் பட்டுவிட ஒற்றைக்
காலில் தவமிருக்கும் புற்கள்.
அவள்மேனி தொட்டுவிட தற்கொலை
செய்யும் மர இலைகள்.
அவள் சிரித்து நடக்கும் பேரழகில்
சிரிப்பு புத்தர் தலை சாயும்.
அவள் கரங்களில் சேர்ந்திட
சீனத்துப் பொம்மைகள் வரிசை நிற்கும்.
தாவித்தாவி அவள் நடக்கையிலே.
கர்ப்பிணி சுகம் அடைந்திடும்
மகளோடு தனியே நடக்கையிலே
நின்று ரசித்திடும் நீண்ட
பாதை.
ஜுன் மாத தங்கமீன் வாசகர் வட்டத்திற்கு அனுப்பியது
Comments