இக்குவனம் அய்யாவிற்கு இரங்கற்பா



அட்டமாசித்தி அருளிய 
ஆண்டவனேயே கட்டிப்போடும்
பட்டர்கள் வாழ்ந்த ஊர்
பட்டமங்கலம்  எனும் பட்டமங்கை 
ஐயா நீ போனபின்னே
ஆனதென்ன பட்ட மரமாக 

ஊரைக் காக்கும் கரும்பீசன்
பேரைச் சுமந்த ஐயா...
கரும்பு வனத்தைக் காக்கும் 
அந்தச் சாமி..
உனக்காக அழுகுது 
தேம்பி தேம்பி 

காவி வெள்ளை கலந்தது
உம் வீடு 
சாதி நினையாது நாங்கள்
நுழையும் கூடு 

பேருந்துகளும் பயணிகளும் 
அமர்ந்து செல்லும் உம் 
வீட்டுத் திண்ணை...
வீட்டுக்கார அய்யாவை
கூட்டி வரச்சொல்லி
கேட்குது என்னை 

பாக்கள்  பலவகையென
உமை பார்த்தபின்பே
நானறிந்தேன் 
பேரனுக்குச் சொல்லித்தரும்முன்
உமை கூட்டிச்சென்ற எமனை 
நான் என்ன செய்வேன் 

ஒருமாதம் இருந்திருந்தால் 
90-ஐத் தொட்டிருப்பாய் 
நாலு மாதம் காத்திருந்தால் 
பேரன் வாரிசைப் 
பார்த்திருப்பாய் 

என் திருமணத்திற்கு
வாழ்த்தளித்தாய் 
என் வாரிசுக்குப்
பெயரளித்தாய் 
இரங்கற்பா எமக்களிக்காமல் 
ஏமாற்றிச் சென்றுவிட்டாய் 

பரவாயில்லை ஐயா ...

நீர் பிறந்த மண்ணில் 
நான் பிறந்து விட்டேன் ..
நீர் சாதித்த மண்ணை
நானும் தொட்டுவிட்டேன்..

இனியென்ன

நீர் துயிலும் இடத்தில் 
நானும் தூங்க வேண்டும் 


--------------------------------------------- தாயுமானவன் மதிக்குமார் 
                                                                    26/10/2013

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு