பட்டுக்கோட்டையார் பாடல்களில் இயற்கை
சிப்பியின் முத்தாக
சிங்கையின் சொத்தாக
சிலிர்த்திருக்கும் சித்திரமே.
தாயே தமிழே முதற்வணக்கம்.
புரட்சிக்கோட்டை தலைமையிலே
பாட்டுக்கோட்டை இல்லறம்
தொட்டது 1957 ஆம் ஆண்டு.
சென்ற மாதத்தோடு ஓடிவிட்டது
சரியாக 58 ஆண்டு.
மக்கள்கவி புகழ்பாடும்
மக்கள்கவிஞர் மன்றமும்
பாவேந்தரைக் கொண்டாடும்
இலக்கிய களமும்
கையோடு கைகோர்த்து
கொண்டு
செய்யுதய்யா இன்று
அருந்தமிழ்த் தொண்டு.
அன்று நடந்தது திருமணம்.
இன்று மணக்குது கவிமணம்.
எளிய சொற்களை
வலிய கற்களாய் மாற்றியே - என்றும்
அழியா கவிஞர்களை - இன்றும்
மறவா நினைத்திருக்கும் - இந்த
ஏழை மன்றங்களுக்கு - பணத்தில்
ஏழை மன்றங்களுக்கு என்
வணக்கங்கள் கோடி.
வேங்கடவன் புகழ் பாடும் சுப்ரபாதம்- வடமொழி சுப்ரபாதம்
இரத்தின வேங்கடேசரைக் பார்த்து விட்டால் தமிழில் பாடும்.
கவியரங்கத் தலைவருக்கு கனிவான வணக்கங்கள்.
புகையோட்டி முடித்துவிட்டு
கவிச்சுவைதேடி வந்திருக்கும்
அத்தனை தமிழ்ப்படைகளுக்கும்
அழகான சடைகளுக்கும்
அடியேனின் வணக்கங்கள்.
பாரதியைப் பிரிந்திருந்த நாட்டிலே
அக்கினிக் குஞ்சொன்று பிறந்தது காட்டிலே.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது தன் பாட்டிலே.
மக்கள்கவி அங்கெமெடுத்து
மகாகவியே பிறந்த உணர்வு
சங்கம் படைத்தான் காட்டிலே.
இயற்கையை வைத்தே
அனைத்தையும் பாடினார்
அனைத்திலும் மக்கள் கவி
இயற்கையைப் பாடினார்.
செந்தமிழ் நாட்டைப் பாடவந்த போதிலே
செந்தாழை மலர் தொட்டார் பாட்டினிலே.
அந்த அதிசயம்தான் பார்த்தேன் நானும் மண்ணிலே.
அதை அப்படியே சொல்லவந்தேன் இச்சபையிலே.
ஏற்றமொன்றை
காண்கையிலே
பாட்டாளி முன்னேற்றம்
கண்டார்.
மலரொன்று உதிரையிலே
வாலிபமிதுவென்ற தத்துவம்
சொன்னார்.
மலர்க்கொடியும் தலையாட்ட
மரக்கிளையும் கைநீட்ட
கிளையில்கொடி இணைகின்ற காட்சியை
இயற்கையின் வளர்ச்சியை
இளமையின் கிளர்ச்சியென்றே
காதல் கதைத்தார்.
ரோஜா மல்லிகை
சண்டையிலே இவர்
பாடிச் சென்றது
சமூக ஒற்றுமையே.
இயற்கையை வைத்தே
அனைத்தையும் பாடினார்
அனைத்திலும் இவர்
இயற்கையைப் பாடினார்.
தேனாறும் பாயுது
செங்கதிரும் சாயுது
மக்கள்கவி பாட்டுக்குத்தான்
இயற்கையும் லைக்போடுது.
பாசவலை படத்திலே
ஆகாச வீதியிலே
சந்திரனும் விண்மீனும்
போட்டுக்கொண்டது
பெரும் சண்டை.
யாரால் எழுதமுடியும்
அப்பேர்பட்ட பாடல்
ஒன்றை.
நிலவைப் பாடாத
கவிஞர்கள் தமிழில்
இல்லை. ஆனால்
இவரைப்போல நிலவை
யாரும் கிள்ளியதில்லை.
கசக்கும் வாழ்விலே
கவலைவரும் போதிலே
இனிக்கும் குரலெழுப்ப
பறவையுண்டு பாரிலே.
பாட்டில் சொன்னார்
மக்கள் கவி.
பரபரக்கும் வாழ்விலே
பறவைக்கெதற்கு வீண்வேலை
எதையும் கொண்டாடுவோம்
மதுவையுண்டு பாரிலே.
மறந்திடாதீங்க நாமெல்லாம்
தமிழ்க்குடி.
காக்காய்க்கும் காக்காய்க்கும்
கல்யாணமாம். அதில்
பரம்பரை மொழியில்
வாழ்த்தனுமாம்.
ஆழ்ந்த கருத்தைப்
பாடலிலே சொன்னாரய்யா - நல்லவேளை
மக்கள்கவி உயிரோடு
இல்லைங்கய்யா.
அந்நியமொழியிலதான் பேசனுமாம் - கருமம்
ஆம்பிளையும் ஆம்பிளையும் சேரலாமாம்.
கல்யாண சுந்தரம் இருந்திருந்தா - தன்
சொல்லால அறுத்து எறிவாரய்யா.
பட்டுக்கோட்டை உள்ளவரை - எவனும்
பிளாட் போட துணிந்ததில்லை - அந்த
பாத்தேனும் வாழும்வரை - இந்த
மீத்தேனும் நுழைந்ததில்லை .
தலைக்கு மேலே
கர்வம் கொண்டு
அதற்கு மேலே
தனமும் கொண்டு
மக்கள் கவி ஒருநாளும்
வாழ்ந்ததில்லை.
நாட்டரசன்
கொடுத்த விருது
பாட்டரசன்
கையில் சேரும்
புண்ணியந்தான்
செய்யவில்லை.
தன் வீட்டு அடுப்பெரிய
தன்காட்டில் மழைபெய்ய
கள்ளிக்காட்டின் விறகை
இவர் பொறுக்கவுமில்லை
இயல்பாக இருந்து
இயற்கையாக எழுதி
இயற்கையோடு
கலந்த இந்த
இயற்கைக் கவி
ஒரு நாளும் இயற்கையை
செயற்கையாய் ரசித்ததில்லை.
10/10/2015 பட்டுக்கோட்டையார் பாவரங்கத்தில் படித்தது.
Comments