சிங்கையின் மூத்த குடிமக்கள்
அறுபதைத் தாண்டியும்
அயராது நம்மைத் தாங்கும்
ஆணிவேர்கள்.
கதிரவனை எழுப்பிவிட்டு
உடற்பயிற்சி கற்றுத்தரும்
மண்ணுலகச் சூரியன்கள்.
இருக்கைகளைப் பறிகொடுத்து
இரும்புகளுடன் பயணிக்கும்
ஈர இதயங்கள்.
முதுமையில் அடங்காது
முடிந்தவரை உழைத்திடும்
ஓய்வறியா கடலலைகள்.
சிந்திய வியர்வையில்
சிகரங்களை உருவாக்கி
சிறுபலனும் எதிர்பார்க்காத
சக்கர நாற்காலிகள்.
சீரான சாலையில் நாம்
சிரமமின்றி பயணிக்க
மேடுபள்ளங்கள் கடந்து
தளர்ந்த பாதங்கள்.
பல்லின மக்களையும்
நல்லிணக்கத்தோடு நடத்தும்
பண்பாடு உருவான
கருவறைகள்.
சிங்கையின் இன்றைய
சிம்ம நடைக்காக அன்று
வளைந்த முதுகுத்தண்டுகள்.
பார்க்கும் இடமெங்கும் இன்று
பலநாட்டு உணவகங்கள் - இவர்களின்
பட்டினித் தவத்திற்கு கிடைத்த வரங்கள்.
பதுங்கியும் பறந்தும் பரவசமூட்டும்
பெருவிரைவுப் போக்குவரத்து - இவர்கள்
பாதம் தேய உழைத்ததின் பரிசு.
நாட்டின் நலம் மட்டுமே
விரும்பி நிற்கும் - இவர்களின்
இரத்த நாளங்கள்.
மார்தட்டிச் சொல்லுவோம்
மூத்த குடிமக்களே
சிங்கையின் அடையாளங்கள்.
Comments