சட்டப்படி மட்டும்தான் குற்றமில்லை
காதல்
அரட்டை
கேலி
விளையாட்டு
ஊர்சுற்றல்
சட்டப்படி மட்டும்தான்
குற்றமில்லை
மூத்தவனாய்
பிறந்தவனுக்கு !
*
உணவகத்தில்
மும்முரமாய்
முகநூலைத் தேய்த்துக்
கொண்டிருக்கின்றோம்.
மேசையைத் துடைத்துக்
கொண்டிருக்கின்றார்
முதுகு வளைந்த
முதியவர் ஒருவர்.
*
குளுகுளுப் பயணத்தில்
இருக்கையில் இறந்திருந்த
இருகாதுகளையும்
எட்டிப்பிடிக்கின்றது
திறன்பேசியின்
வாலொன்று.
இரும்புக்கம்பிகளை
கவ்விக்கொண்டிருக்கின்றது
இன்னும் துடித்துக்
கொண்டிருக்கும்
இதயமொன்று.
*
எல்லோருக்கும் தெரியும்
அலுவலக வாசலில்
சுத்தம் செய்பவர்
கூன் விழுந்த
முதியவரென்று.
யாருக்கும் தெரியாது
குப்பை போட்டது
நாமென்று.
*
நடந்துகொண்டே
புகைக்கின்றோம்.
புகைக்காமலே
இறந்துகொண்டிருக்கிறது
பின்னே வரும்
மழலை.
*
Comments