கங்கு

 


 

கவிஞர் முத்துராசகுமாரின் முதல் நாவல். கங்கு எப்பொழுதும் கனன்று கொண்டிருப்பது. உடனே அணையக்கூடியது. ஊதி பெருக்குவதோ நீரூற்றி அணைப்பதோ எதைச் செய்தாலும் உடனடியாக வினையாற்ற வேண்டும். பொருந்திய தலைப்புடன் இந்த நாவல் கையாண்டிருக்கும் கரு சாதி.

 

நாவலுக்குள் செல்வதற்கு முன் இந்த நாவலுக்கு பத்திரிக்கையாளர் ஜெயராணி அவர்கள் எழுதிய முன்னுரை பற்றி பேச வேண்டும். இந்த நாவலுக்கு மட்டுமல்ல ஜெயராணியின் முன்னுரை இதுவரை வந்த நாவல்களுக்கும் இனி வரப்போகும் நாவல்களுக்குமான தீப்பொறி. தலித்துகள் மட்டும் தான் சாதிக்கு எதிராக எழுத வேண்டுமா? ஆதிக்க சாதியினர் இடைநிலை சாதியினர் மதமற்றவர்கள் என 'மற்றவர்கள்' ஏன் சாதிக்கு எதிராக எழுத மறுக்கின்றனர் எனக் கேள்வி எழுப்பி அவர்களுக்கு அறமெனும் நரம்பு நறுக்கப்பட்டு இருப்பதாக நம்புகிறார். ஆனால் பாருங்கள் மேடம்.. அறத்தை கூட அல்ல தன் நாக்கையே அவ்வப்பொழுது தன் தேவைக்கேற்றவாறு விரல்களில் மாட்டி எழுதுவதும் பின் கழட்டி நவீன இலக்கியமென்ற பேழைக்குள் வைத்து அழகு பார்ப்பதும் வாடிக்கை என்பது என்னைப் போன்றவர்களுக்கே தெரிகிறது. கடந்த தேர்தலில் விஜய் சைக்கிள் வந்ததற்கும் திரிஷா கட்டிய சேலைக்குமான குறியீடுகளைக் கட்டவிழ்த்த பெரும் கவிஞர்கள் எழுத்தாளர்கள் தேர்தல் முடிந்தவுடன் இன்று இலக்கிய கூந்தலில் மனம் வருகிறதா இல்லையா என்று  பொத்திக் கொண்டும் போர்த்திக் கொண்டும் எழுதிக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. நிலைமை இவ்வாறு இருக்க சாதிக்கு எதிராக இவர்கள் என்ன எழுத போகிறார்கள் அப்படி எழுதினாலும் என்ன மாற்றம் வரப்போகிறது என்பது அந்தக் குறியீடுகளுக்கே வெளிச்சம்.

 

ஜெயராணி அவர்கள் குறிப்பிட்ட மன்னிப்பு இலக்கியம் என்பது முக்கியமானதே. யூதக் குழந்தைகளிடம் ஜெர்மனிய குழந்தைகள் மன்னிப்பு கேட்க பழக்கப்படுத்துவது போல இதுவரை நடந்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பதும் அது படைப்புகளில் வழியே பதிவு செய்வதும் அவசியம் என்கிறார். முத்துராசகுமாரும் அந்தப் புள்ளியில் இருந்தே நாவலை ஆரம்பிக்கிறார். இருந்தும் படைப்பை பற்றி பேசும்போது படைப்பாளியின் சமூகத்தை சொல்ல வேண்டுமா என்பது என் கேள்வி. கவிஞர் எழுத்தாளர் என்று இதுவரை அறியப்பட்ட முத்துராசகுமாரை இவர் இந்த பக்கத்தில் இருந்தும் எழுதுகிறார் என்பது இந்த படைப்பிற்கு எதற்குத் தேவைப்படுகிறது, படைப்பை முன்னிறுத்துவதில் படைப்பாளியின் சமூகம் எந்த அளவிற்கு முக்கியம், ஆத்மார்த்தமான ஒரு கலைக்கு இது போன்ற கரிசனங்கள் தேவையா போன்றவை கேள்விகளாக மட்டுமே என்னிடம் இருக்கின்றன.

படைப்பில் எழுத்தாளர் எந்த பக்கம் நிற்கிறார் என்பதும் அந்தப் படைப்பின் வழியே அவர் நிகழ்த்தும் விளைவுகள் மட்டுமே கலைக்கு அவர் செய்யும் நேர்மையாகவும் தளுகையாகவும் பார்க்கிறேன். இந்தப் பக்கம் அந்தப் பக்கம் என்று இல்லாமல் கலையின் பக்கமே முத்துவை பார்க்க, நிறுத்த ஆசைப்படுகிறேன், முயற்சி செய்கிறேன்.

நாவலின் கருவை பொறுத்தவரை ஜெயராணி அவர்கள் குறிப்பிட்டதை போல இது ஒரு பழங்கதைதான் . வன்மத்தையே வாழ்வாக கொண்டவர்களுக்கும் வாழ்வு முழுவதும் வன்மத்தையே எதிர்கொண்டவர்களுக்கும் இடையே நடக்கும் சம்பவங்களின், வலிகளின் கோர்வை தான் இந்த நாவல். இதில் முத்துவின் பேனா எங்கு குனிந்து எங்கு நிமிர்ந்து இருக்கிறது என்பதே சுவாரசியம்.

 

வீதிகளில் நிழல் பரப்பி இருக்கும் தணல் மரங்களை மீனாகப்  பார்க்கும் கவிஞன் முத்து,  சிற்பக்கலை பயிலும் கதையின் நாயகன் சிற்றரசை  சமுத்திர பறவைகளின் றெக்கைகளை பத்திரப்படுத்தி ஊருக்கு எடுத்து செல்வோனாக உருவகப்படுத்தும் போது தன்னுடைய கதாசிரியர் சட்டையை விரும்பி அணிந்து கொள்கிறார்.

 

இருந்தும்

 

மண்ட வெல்ல நிறத்திலான பாறை குன்றுகள், நகர முடியாத பாறைகளுக்கு பேச்சுத் துணையாக வளரும் தாவரங்கள், குவாரியின் கற்களை துளைத்து உடைத்து வெளியேறும் மண்புழுக்கள் போன்ற வாழ்வு என்று எழுதிச் செல்லும் 'கவிஞன்' ஆங்காங்கே நாவலில் தலை காட்டுகிறார்

 

கல்லீத்து பழமுதிரும் கருவேலங்கள், வேட்டுச் சத்தங்களை கணித்து தடம் மாறும் தாழக்கோழிகள், நீர்காக்கைகள், அருவாமூக்குகள் , பட்டியக்கல்லில் ரத்தகோழை வழிய வைக்கப்படும் ஆட்டுக்குட்டிகள், மண் முடையும் செங்குளவிகளின் கொடுக்கு சுறுசுறுப்பு என முத்துராசகுமாரின் கிராமம் தான் நாவலெங்கும் விரவிக் கிடக்கிறது. தன்னியல்பான பல மனிதர்களின் வாசத்தை சில இடங்களில் ரசித்தும், சில இடங்களில் சண்டையிட்டும் பரப்பியது தெரிகிறது.

 

"தோற்றம் மாறினாலும் தோரணை மாறாது".. "எல்லாரும் வாழனும் நாங்க தான் ஆளனும்" என்ற பல பேனர்களை அப்படியே படைப்புக்குள் கொண்டு வர கவிஞனையும் கதாசிரியனையும் மீறிய ஒரு தைரியசாலி தேவை தான். இந்த நேரத்தில் இயக்குனர் ரஞ்சித்துக்கும் எழுத்தாளர் வேல ராமமூர்த்திக்கும் மிகப்பெரிய நன்றி உரித்தாகட்டும். இவர்களுடைய உருவப் படங்களால் பேனர்களில் இருந்து தலைவர்கள் படங்களுக்கு சிறிது ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

 

கதையின் ஒரு இடத்தில் அப்பா அம்மாவுடன் குவாரிக்கு சென்று வரும் சிற்றரசு யாரிடமும் பேசாமல் அமைதியாகவே இருப்பான். அவன் மனம் விட்டு பேசும் நாகேஷ் அண்ணன் வந்தவுடன் அந்த நாளின் முதல் வார்த்தையை உச்சரிப்பான். அதுவும் லட்சங்களை தாண்டிய எண்ணிக்கையில் எண்களாகச் சொல்வான். நாகேஷ் குழப்பத்துடன் என்ன என்று கேட்க சிற்றரசு பின்வருமாறு சொல்வான்.

 

"இன்னைக்கு கல்லொடைக்கையில அம்மா அப்பாவோட சுத்தியல் சத்தத்தை எண்ணுனேன். அந்த அடிச்சத்தத்த எண்ணி எண்ணி ஒரே கெரக்கமா வந்துருச்சுண்ணே.. எப்பவும் இல்லாம டங்ங்.. டங்ங்ன்னு மண்ட புல்லா கல்லு சத்தம் வீட்டுக்கு வந்து சாப்பிட்டேனா வாந்தி வர்ற மாதிரி ஆயிடுச்சு மனசுக்குள்ளேயே வச்சிருந்தேன் போன்ல அந்த சத்தத்தை ரெக்கார்ட் பண்ணி இருக்கேன் பேசுனா நம்பர் மறந்துரும்னுதான் யார்ட்டையும் பேசல"..

அமைதியாய் கேட்டுக் கொண்டிருக்கும் நாகேஷிடம் அடுத்து ஒரு கேள்வியை வைப்பான்

"யில்ல ... இத்தனை லட்சம் சத்தத்தை எப்படி அண்ணே வரையறது? "

 

கொஞ்ச நேரம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஒலியை எப்படி ஓவியம் ஆக்குவது? முத்துவின் எண்ண விரல்களைப் பிடித்துக் கொண்டே இன்னொரு கேள்வி வந்தது ஒலியை எப்படி கவிதையாக்குவது.. சட்டென்று நினைவுக்கு வந்தது கவிஞர் வெய்யிலின் "நுரையீரல்களின் பாடல்" :

 

"மாபெரும் நிலக்கரிக்கட்டியின் முன்னின்று

மீண்டும் என் சுத்தியை உயர்த்துகிறேன்.

பன்னிரண்டாய் பிளந்தாக வேண்டும்.

அதன் மையத்தில் இருக்கிறது என் கூலி"

 

நன்றி முத்து.

 

கதை நெடுகிலும் இருக்கும் மனிதர்களுக்கு இடையேயான பகை, பாசம் மரியாதை,கௌரவம், கிண்டல் என பல உணர்வுகள் கிராமத்தில் கொஞ்ச நேரம் இருந்து  வழி செய்தன. குறிப்பாக உரையாடல்கள் எந்த பாசாங்கும் கரிசனமும் இல்லாமல் அப்படியே பதிவு செய்திருக்கிறார்.

 

உதாரணத்திற்கு ஒன்று

"ஸ்கூலு விட்டு வந்தாலே அந்தப் பாண்டி பயக்கூடத்தான் சேர்க்க. நெத்தில சு** மொளச்ச மாதிரி செலைகிட்ட நிக்கிறாய்ங்கல்ல.. அவிங்க கூட போணுமாம்.. அதுக்குத்தான ஊட்டி ஒடைய காசக்கட்டி இங்கிலீஷ் மீடியத்துல இவனை படிக்க வைக்கிறேன். அதான் வெளக்கமாத்தால ஈக்கி பரிய நாலு சாத்து சாத்துனேன்"

 

சில கதாபாத்திரங்கள் அவர்களின் வழி நடக்கும் சம்பவங்கள் கொஞ்சம் நாடகத்தன்மையோடு இருக்கின்றன, குறிப்பாக நாகேஷ் பூவிழி சிற்றரசுக்கிடையே நடக்கும் உரையாடல்கள் சம்பவங்கள் நாகேசுக்கு ஏற்படும் நிலை ஒரு சினிமாவை பார்த்த உணர்வு தான் எஞ்சியது. இருந்தும் மேலவளவு சம்பவத்தை கதையோடு பிணைத்தது மிக நெருக்கமாகவும் இயல்பாகவும் இருந்தது.

 

ஒரு உண்மையை உணர வைக்க சில புனைவுகளின் தடங்கள் தேவையாகத்தான் இருக்கின்றன. அதுவும் அழிந்து விடக்கூடிய தடங்கள் அல்லது ஏற்கனவே நடந்து நடந்து பாதையாகி போன தடங்கள் என்று தெரிந்தும். முத்துவும் அதை கவனமாகவே கையாண்டு இருக்கிறார் என சொல்லலாம். இன்னும் கொஞ்சம் மலையில் நடக்கும் சம்பவங்களையோ வாழ்விலையோ அழுத்தமாகவும் நீட்டியும் சொல்லி இருக்கலாம் என்று தோன்றுகிறது.

 

காலமும் கதைகளும் அவற்றை மக்களின் மொழியிலேயே சொல்லும் கலையும் முத்துவிடம் நிரம்பிக் கிடக்கின்றன. தொடர்ந்து முத்துவும் அவற்றை பதிவு செய்வார் என்ற நம்பிக்கையும் இருக்கின்றது. எல்லாவற்றிற்கும் மேல் இங்கு அனைவருக்குமான பொறுப்பும் ஒன்று இருக்கிறது. ஆம்

 "வாள் கைமாறும் போதுதான் நம் வாழ்க்கை மாறும்" .

பதிப்பகம் : சால்ட்

 *


மதிக்குமார் தாயுமானவன்

Comments

Popular Posts