கல்வியில் மலர்தல்
"எல்லாப் புரட்சிகளும் ஆன்மீகத்தில் இருந்தே தொடங்குகிறது. நான் நம்புகிற ஆன்மீகம் எல்லா உயிர்களின் இதயங்களை நிபந்தனை இன்றி நேசிப்பது மட்டும்தான்" - ஆச்சர்யா வினோபா பாவே. இது போன்ற கூற்றுக்களை உள்ளடக்கி தன்னறம் வெளியீடாக வந்துள்ள புத்தகம் வினோபா பாவே யின் கல்வியில் மலர்தல். இன்றைய கல்விமுறையில் காணப்படும் குறைகளை முன்னிலைப்படுத்தி பெரும் மாற்றத்தை நிகழ்த்தி அதன் வழியாக தாம் சார்ந்த தத்துவத்தை வலியுறுத்தும் கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு. வாசிக்க வாசிக்க முரண்களை அடுக்கி கொள்ளவே வழி வகுத்தது இந்தத் தொகுப்பு. உதாரணத்திற்கு ஆரம்பத்தில் சொன்ன கூற்றிலேயே எல்லா உயிர்களின் இதயங்களை நேசித்த பின் புரட்சியின் தேவை எங்கிருந்து வருகிறது என்ற கேள்வியை தவிர்க்க இயலவில்லை. புத்தகத்தில் குறிப்பிடப்படும் தீண்டாமை அகற்றல், சமமான கல்வி, கல்வியை மேற்கத்திய கல்வி முறையிலிருந்து இந்தியச் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்தல் போன்றவற்றை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இந்த நூல் குறிப்பிடும் குழந்தை பருவத்திலேயே தொழிற்கல்வி, வரலாற்று கல்வியைப் புறக்கணித்தல் போன்றவற்றை ஒதுக்கித் தள்ளவே மனம் விரும்புகிறது. எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் அவர்களின் முகப்புரை ஆறுதல். ஒரு விஷயம் உண்மையாக இருக்கும் போது அதை ஆதரிக்கும் எந்த ஒரு விவாதத்தையும் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று இந்தப் புத்தகம் சொல்கிறது. ஆனால் எந்த ஒன்றையும் விவாதித்தே உண்மையைக் கண்டடைய இதுவரை பெற்றிருக்கும் அறிவு சொல்லுகிறது.
Comments