காந்தியம் ஓர் உரையாடல்
அண்ணல் காந்தியடிகளுடைய பிறந்த தினத்தை முன்னிட்டு பொதிகை தொலைக்காட்சி ஏற்பாட்டில் அண்ணன் தொல் திருமாவளவன் அவர்களுடன் சித்ரா பாலசுப்பிரமணியம் அவர்கள் நடத்திய நேர்காணலின் தொகுப்பு தன்னறம் நூல்வெளியின் வெளியீடான "காந்தியம் ஓர் உரையாடல்".
காந்தியத்தின் கூறுகளாகத் தன்னைக் கவர்ந்ததில் முதன்மையானதாக வன்முறை எதிர்ப்பையும், மதுவிலக்கு கொள்கையையும் கூறினாலும் காந்தியம் காட்டும் சகிப்புத்தன்மையையும், உரையாடல் அம்சத்தையும் குறித்து அண்ணனின் விளக்கம் ஆழமானது, மிக முக்கியமானது. காந்தியத்தின் பார்வையில் உரையாடலின் தேவையைப் பற்றிச் சொல்லும் அண்ணன் உரையாடலுக்கான முன் தயாரிப்பாகப் பின்வருபனவற்றைக் கூறுகிறார்.
"உரையாடல் என்பதே முதிர்ச்சியின் விளைவாக உருவாகக்கூடியதுதான். மேம்பட்ட வளர்ச்சி சார் நிலையில் இருப்பவர்களால்தான் மனம் திறந்து பேச முடியும். அறிவு சார் நிலை என்பது வேறு, வளர்ச்சி சார் நிலை என்பது வேறு. புத்திசாலித்தனமாக இருக்கும் எல்லோரும் பேச முடியாது. ஆனால் பண்பட்டவர்களால் தான் எல்லா இடங்களிலும் பேச முடியும். வளர்ச்சியுற்ற ஆளுமை என்பது அதில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. அதற்கு படித்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இந்தத் தனித்தன்மை பெறுவதற்கு ஒரு டிகிரி படிக்க வேண்டும் அல்லது யுனிவர்சிட்டி சென்று பிஎச்டி முடிக்க வேண்டும் என்பதெல்லாம் தேவை கிடையாது. மனிதர்களைப் படிக்க வேண்டும். மனித உணர்வுகளை மதிக்க வேண்டும். மனிதர்களை நேசிக்க வேண்டும். மனிதர்களோடு இணைந்து வாழ்வதற்கான பரந்த உள்ளத்தைப் பெற்றிருக்க வேண்டும் அதுதான் மெச்சூரிட்டி"
இட ஒதுக்கீடு, தீண்டாமை, கிராமிய பார்வை, உடை என காந்திக்கும் அம்பேத்கருக்கும் இருந்த முரன்களைப் பற்றி அண்ணனின் பார்வை தீர்க்கமானது. மேற்சொன்ன முரண்களை அணுகுமுறை முரண்கள் என்ற பெயரிடும் அண்ணன் அந்த முரண்களில் அவ்வப்பொழுது ஒருவருக்கொருவர் சமரசம் செய்து கொண்டனர் என்று சொல்லி அந்த சமரசத்தையும் சகிப்புத்தன்மையையும் தன்னளவில் நியாயமானது என்கிறார் அதே நேரத்தில் கொள்கை முரண்களில் எந்த சமரசமும் ஏற்றுக்கொள்ள விரும்பாத காந்தியத்தை நேசிக்கிறார். சமீபத்திய அவரது அரசியல் நிலைப்பாடுகளின் மூலம் அந்த நேசத்தை உணர முடிகிறது.
திருமாவளவன் அவர்களின் ஆரம்ப கால மேடைப்பேச்சுகளில் அவரைப் புறந்தள்ளுவதற்கான காரணங்களை என்னில் அடுக்கி வைத்ததுண்டு. ஆனால் அண்ணனின் சமீபத்திய உரையாடல்கள் வியக்க வைக்கின்றன.. தொடர்ந்து கனிந்து கொண்டே இருக்கிறார். பிறரைக் கனியவும் வைக்கிறார். கனிந்த அந்தப் பழத்தின் வாசம் இந்தப் புத்தகத்தின் பக்கங்களிலெல்லாம் நிறைந்திருக்கிறது. என்ன அவர் கனிய வைத்தவை எல்லாம் அக்கம் பக்கத்திலுள்ள வீடுகளை அரண்மனையாக்குகின்றன. இவரோ பசியோடும் தளர்வோடும் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறார்.
Comments